டெல்லி: 2021-22ம் நிதி ஆண்டைவிட 2022-23 நிதி ஆண்டில் கார்களின் விற்பனை 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக வாகன டீலர்கள் தெரிவித்துள்ளனர். 2022-23-ல் இந்தியாவில் 36 லட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளதாக வாகன டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு முன் 2018-19ம் ஆண்டின் சாதனை விற்பனையான 32 லட்சம் கார்கள் என்ற உச்சத்தை 2022-23 தாண்டியுள்ளது.
புதிய மாடல் கார்களின் வருகை, செமிகண்டக்டர் தட்டுப்பாடு குறைந்தது போன்ற காரணங்களால் விற்பனை அதிகரித்துள்ளதாக டீலர்கள் தெரிவித்துள்ளனர். 2022-23-ம் ஆண்டில் இருசக்கர வாகன விற்பனை 19 சதவீதமும், 3 சக்கர வாகன வாகன விற்பனை 84 சதவீதம் அதிகரித்துள்ளன. 2022-23-ல் கார்களின் விற்பனை 23 சதவீதமும், லாரிகள், வேன்களின் விற்பனை 33% உயர்ந்துள்ளதாக வாகன டீலர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மார்ச்சில் வாகன விற்பனை 14 சதவீதம் அதிகரிப்பு:
2023 மார்ச்சில் இந்தியாவில் வாகன விற்பனை கடந்த ஆண்டு மார்ச்சை விட 14 சதேவீதம் அதிகரித்திருப்பதாக விற்பனையாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது. டிராக்டர் தவிர அனைத்து வாகனங்களின் விற்பனையும் 2023 மார்ச்சில் இரட்டை இலக்கத்தில் அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2023 மார்ச்சில் இருசக்கர வாகன விற்பனை 12 சதவீதமும், 3 சக்கர வாகனங்கள் 69 சதவீதமும், கார் விற்பனை 14 சதவீதமும் உயர்ந்துள்ளன. லாரிகள், வேன்கள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களின் விற்பனை 2023 மார்ச்சில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.