Sunday, June 16, 2024
Home » வேதாந்தம் சுட்டும் தீபாவளி

வேதாந்தம் சுட்டும் தீபாவளி

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் வணக்கம் நலந்தானே!பாரத தேசத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் ஆழமான தத்துவார்த்தம் உண்டு. முதல் பார்வையில் சமூக ஒற்றுமையும், கொண்டாட்டத்திற்கான நாளாகவும் பண்டிகை இருக்கும். ஆனால், ஏன் இதை கொண்டாடுகின்றோம் என்று புராணங்கள் அதை கதையாக சொல்லும்போது கூட என்னவோ பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்று நகர்ந்து விடுவோம். ஆனால், ஆர அமர உட்கார்ந்து தேடுதலை மேற்கொண்டால் தனி மனித சுதந்திரம், வீடு பேறு, ஜீவன் முக்தி என்று பண்டிகைகள் ஒரு ஜீவனை நகர்த்திச் செல்வது தெரியும். தேவேந்திரன் என்பவனுடைய பதவியை நரகாசுரன் பறித்தான். அவனை கிருஷ்ணரின் மனைவியான சத்யபாமா கொன்றாள் என்கிற தீபாவளி உண்டான கதை நம் எல்லோருக்கும் தெரியும்.இதில் வரும் நரகாசுரன் என்பவன் யார்? நரன் என்றால் தேகமே நான் என என்று மயங்கும் மாயைக்கு உட்பட்டவன். தேகத்தினால் வரும் இன்பங்களையே சத்தியம் என்று நினைத்து மயங்குபவன். பஞ்ச இந்திரியங்களால் தொடர்ந்து தான் என்ன தேடுகிறோம் என்று தெரியாது உலகியல் விஷயங்களிலேயே உழல்பவன். தேவேந்திரப்பதவியை ஜீவன் முக்தியில் இருத்தல் என்பதாகவும், அந்த ஆத்மாவின் சொரூபத்தை மாயையான நரகாசுரன் மறைத்தான் என்றும் பொருள் கொள்ள வேண்டும். அதாவது ஞானியர் நம்மை நோக்கி எப்போதும் உபதேசமாக சொல்லும் மாயையிலேயே மயங்கியிராதே விழித்துக்கொள். நீ யார் என அறிந்துகொள் என்பதுதான் இது. இதில் ஒவ்வொரு ஜீவனும் ஜனனம், மரணம் என்று மாறிமாறி துன்புறுகின்றன.இதிலிருந்து மேலெழ தெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறான். அந்த வழிபாட்டையே இந்திரன் தன்னை நரகாசுரன் சூழ்ந்தான் என்னை அதிலிருந்து மீளச் செய்யுங்கள் என்பதாகும். தீபாவளிப் பண்டிகை என்பது ஐப்பசி மாதம், சதுர்த்தசி திதியில் நிகழ்ந்தது. இதில் ஐப்பசி என்பதற்கு மறைபொருளான பொருள் உண்டு. ஐப்பசி என்பது சித்திரையை முதலாவதாகக் கொண்ட ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். வேதாந்த அர்த்தத்தில் ஐப்பசி என்பது ஏழாவது ஞானபூமி ஆகும்.அதாவது துரீயம் ஆகும். சதுர்த்தசி என்பது பதினான்காவது திதியாகும். வேதாந்தத்தில் ஞான யாத்திரையை மேற்கொள்ளும் ஜீவன் தனது ஆன்மிக வாழ்வில் குருவின் அடிபணிந்து சிரவணம், மனனம்…. என்று ஒவ்வொரு சாதனங்களைச் செய்து இறுதியாக நிர்விகற்ப சமாதியை அடைகின்றான். சதுர்த்தசி என்பது ஒவ்வொரு சாதனை நிலைகளில் 14 வது நிலையான நிவிகற்ப சமாதி ஆகும். இங்கும் நரகாசுரன் எத்தனை  ஆன்மிக சாதனைகளில் ஈடுபட்டாலும் தன்னுடைய அகங்காரத்தை அழித்துக்கொள்ள முடியாது வழுக்கியபடியே இருந்தான். அதாவது நான் எனும் அகங்காரம் கிளைத்து வந்தபடியே இருந்தது. அப்போதுதான் சத்யபாமை எனும் குரு நிர்விகற்ப சமாதி என்கிற ஆயுதத்தை எய்து ஜீவனை மோட்சம் எனும் பெரும் நிலையை எய்துவித்தாள்.இங்கு ஏன் கிருஷ்ணர் வதம் செய்யவில்லையெனில், கிருஷ்ணர் ஜீவன் முக்தர். அவருக்கு ஞானி, அஞ்ஞானி என்கிற பேதமில்லை. ஏனெனில், தனக்கு அந்நியமாக இன்னொருவரே இல்லை. அதனால், தன்னிலிருந்து அதாவது கிருஷ்ணரிலிருந்து தனக்கு வேறல்லாத சத்யபாமை எனும் ஞானக் கருணையைக் கொண்டு இந்த ஞானவதத்தை நிகழ்த்தினார். இப்போது கூறுங்கள். தீபாவளி என்பது தனிப்பட்ட ஜீவனுடைய ஞான யாத்திரையில் பிரம்மானந்த நிலையை எய்திய விஷயமே ஆகும்.அப்போது அங்கிங்கெனாதபடிக்கு எங்கும் ஒளி வெள்ளம்தான். அதையே நாம் வெளிப்புறத்தில் தீபமேற்றி கொண்டாடுகின்றோம். வெளியே உள்ள தீபம் உள்ளேயும் அணையாமல் இருப்பதை அறிந்துகொள்வதே தித்திக்கும் தீபாவளியின் தத்துவமாகும்.அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் :கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

You may also like

Leave a Comment

eighteen − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi