Saturday, June 1, 2024
Home » வேண்டுவதை அருள்வாள் காமரசவல்லி

வேண்டுவதை அருள்வாள் காமரசவல்லி

by kannappan

ஆலகால  விஷமுண்டு அகிலத்தார்க்கு அரும்பொருளாய் திகழும் ஈசனின் அருட்தலங்கள்  இம்மண்ணில் எண்ணற்றவை. “நன்னீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்று  சேக்கிழார் போற்றிய தொண்டை வளநாட்டில் பலர் அறிந்திடாத சிவத்தலங்கள் பல  உண்டு. அவற்றுள், காஞ்சிக்கு தெற்கிலும், சுகநதி என்னும் சிறு நதியின்  வடகரையிலும் அமையப்பெற்றுள்ளது அயனீஸ்வரம் என்னும் வழூர். இப்பதி சோழர்  காலத்தில் “புலியூர்க் கோட்டத்து, இரும்பேடு கூற்றத்து வழுதாவூர்” என  குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணாமலையில் தீப்பிழம்பாய் நின்ற சிவபெருமானின்  முடியைக் கண்டதாக பொய் யுரைத்ததன் [வழு] தவறு நீங்கிட பிரம்மன், தவமியற்றி,  வழிபட்ட எண்ணற்ற தலங்களுள் இதுவும் ஒன்றாகும். பிரம்மன் வழிபட்டமையால்  “இப்பதி அயனீஸ்வரம்’’ என்று அழைக்கப்பட்டுள்ளது.ஆதியில், சோழர்  காலத்தில் எழுப்பப்பட்ட இந்த அயனீஸ்வரம் என்னும் சிவாலயம், பின்னர்  மூன்றாம் குலோத்துங்கன் ஆணைக்கிணங்க செம்பியத்தரையன் என்ற சம்புவராய  மன்னனால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு தானமாக கோவில்குப்பம்,  சாத்தனூர் ஆகிய கிராமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், மாகறல் நாட்டு  ஆர்ப்பாக்கம் கிராமத்தின் வருவாயையும், புரவாநல்லூர் என்கிற கிராமத்தின்  வருவாயையும் இந்த அயனீஸ்வரர் ஆலயத்திற்கு வழங்கப்பெற்றுள்ளன. அதோடு, இருபத்திமூன்று பசு மற்றும் காளைகளையும் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.இத்தலத்தின்  முக்கிய தீர்த்தமான சுகநதி, சுகப்பிரம்ம மகரிஷி தவம்புரிந்த நெடுங்குன்றம்  என்னும் ஊரின்பால் உள்ள கிளி மலை என்னும் சுகப்பிரம்ம ரிஷி, பர்வதத்திலிருந்து உற்பத்தியாகி, படாளம் வழியாக பாலாற்றில் கலக்கிறது.  திருவண்ணாமலையில் இருந்து அருள்நெறி பரப்பிய, ஸ்ரீரமண மகரிஷி என்னும்  முத்தைக் கண்டெடுத்த இறைஞானி சேஷாத்ரி சுவாமிகள் இவ்வூரில் 21-1-1870  ஆம் ஆண்டு, வரதராஜன் – மரகதாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தவத்திரு பசுமலை  சுவாமிகள் இங்கு வருகை தந்து, தங்கியிருந்து, திருப்பணிகள் செய்து  வழிபட்டுள்ளார். ஊரின் வடபால் சாலையை ஒட்டி தோரணவாயிலுடன் நாற்புறமும்  உயரிய மதில்களோடு பிரம்மாண்டமாக திகழ்கிறது ஸ்ரீகாமரசவல்லி உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.உள்ளே சென்றதும், முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரின் தனிச்சந்நதி தெற்கு பார்த்தபடி அமைந்துள்ளது.  நடுநாயகமாக உட்பிராகாரத்துடன் கூடிய ஈசனது சந்நதி அமையப் பெற்றுள்ளன. ஆலயத்தின் தென்கிழக்கு திசையான அக்னி மூலையில், பிரம்ம தீர்த்தம் நான்கு  புறமும் படித்து சூழ அளவில் பெரிதாகக் காட்சியளிக்கின்றது. கிழக்கே கொடிமரம் மற்றும் நந்தியம்பெருமானை தரிசிக்கலாம். நேராக தூண்களுடனான மகாமண்டபம் இறைவன் சந்நதியையும், இறைவியின் சந்நதியையும் இணைக்கின்றது.இந்த  மண்டபத் தூண்களில் பதினாறு கணபதியின் திருவுருவங்கள்  புடைக்கப்பட்டிருப்பது சிறப்பு. மகாமண்டபத்தின் இடப்புறமாக தென்திசை பார்த்து அம்பிகையின் தனிச் சந்நதி அமைந்துள்ளது. அம்பிகையாக ஸ்ரீ காமரசவல்லி தாமரை மற்றும் நீலோத்பல மலர்களை ஏந்தி கருணை ரசம் சிந்துகின்றாள். தெவிட்டாத அழகு. ஆவுடை மீது நின்றபடி காட்சி தரும் இந்த  அன்னையை நாளெல்லாம் பார்த்த வண்ணம் இருக்கலாம். பக்தர்கள் விரும்பி  வேண்டுவதை வரமாகத் (காம = விருப்பம்) தருவதால் அன்னை இங்கு காமரசவல்லி என புகழப்படுகின்றாள். ஒரு சுற்றுடன் தனி விமானத்தோடு கூடியது இங்கு அம்பிகையின் சந்நதி. அற்புதமான அம்மையின் தரிசனம் கண்டு பின், அப்பனை  தரிசித்து செல்கிறோம். முறையான சிவ கோஷ்ட மூர்த்தங்களோடு கூடியது சிவன் சந்நதி. எழில்மிகு துவாரபாலகர்கள் அருகே ஐராவத கணபதி வீற்றிருக்கின்றார். கந்தன் இங்கு வாயு மூலையில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் வாசம்  செய்கின்றார். அமைதியான ஆலயம் மனம் லயிக்கின்றது.வருடத்தில் ஆடி கிருத்திகையில் முருகருக்கு திருக்கல்யாண உற்சவமும், திருவீதியுலாவும் நடக்கிறது. சித்ரா பௌர்ணமியில் ஏகதின உற்சவமும்,  பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் உண்டு. விநாயகர் சதுர்த்தி வெகு விசேஷமாக  அனுசரிக்கப்படுகிறது. திருவீதி உலாவும் நடக்கின்றது. ஏனைய சிவாலய  விசேஷங்களும் இங்கு சிறப்புற நடத்தப்படுகின்றன.அரசுக்குச்  சொந்தமான இந்த ஆலயத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.  தல விருட்சமாக சரக்கொன்றை திகழ்கிறது. சோழர் கால கல்வெட்டுகள் ஆலயமெங்கும் நிறைந்து காணப்படுகின்றன. இங்கு அன்னை காமரசவல்லியைத் திருமண வரம் வேண்டி  பிரார்த்தனை செய்து, பலனடைந்தோர் பலர். ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10  மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். இவ்வூரில்  ஸ்ரீ முத்துநாயகி அம்மனும், ஸ்ரீதேவி பூதேவி சமேத திருமால் ஆலயமும்  பிரசித்தம்.  மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அவதரித்த இந்த வழூர் திருதலத்தைக் கண்டு, வாழ்வில் வளங்கள் பல பெறுவோம்.  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும்  சாலையில் மருதாடு என்கிற ஊரை அடைந்தால், அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வழூர். மருதாட்டிலிருந்து இங்கு வர ஆட்டோ வசதி உள்ளது.  வந்தவாசியில் இருந்து மினி பஸ் வசதியும் உள்ளன….

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi