Tuesday, May 21, 2024
Home » வெண்ணாவலரசு

வெண்ணாவலரசு

by kannappan
Published: Last Updated on

அருணகிரி உலா-108க்ஷேத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கும் திருத்தலம் ‘செம்புகேசுரம்’ எனப்படும் திருவானைக்கா. ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள சிவத்தலம். தேவார மூவராலும் அருணகிரி நாதராலும் பாடப்பெற்ற திருத்தலம். பஞ்சபூதத் தலங்களுள் ஒன்றான நீர்த்தலம். இறைவி அகிலாண்டநாயகி தண்ணீரை லிங்க வடிவாகப் பிடித்து வைத்துப் பூசை செய்தபடியால் இத்தலம் அமுதீசுவரம் எனப் பெயர் பெற்றது. மூலத்தானத்தைச் சுற்றியுள்ள இடத்தில் நீர் கசிந்து கொண்டிருப்பதைக் காணலாம். காவிரி கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்குமிடையில் தரைமட்டத்திற்கும் கீழே அமைந்துள்ளது. இத்தலம் யானைகள் நடமாடும் சோலையாக இருந்தமையால் ஆனைக்கா எனப்படுகிறது. [கா-சோலை] ஆனைக்கா இறைவன் ஜம்புகேசுவரர் எனப்படுகிறார். தலத்திற்குரிய மரம் வெண்ணாவல். இறைவனை ‘வெண்ணாவலரசு’ என்று பாடுகிறார் அருணகிரியார். இதன் பின்னால் சுவையான புராணக் கதை ஒன்றும் உண்டு. இத்தலத்தில் இருந்த ஒரு வெண்ணாவல் மரத்தின் கீழ் சாரமுனிவர் என்பவர் தவம் செய்து கொண்டிருந்தார். மரத்திலிருந்து விழுந்த நாவற்பழத்தை சிவனுக்கு நிவேதித்துவிட்டுத் தான் அதை உண்டார். கொட்டையை உமிழவில்லை இறைவன் திருவிளையாடலாலால் அது முளைத்து தலைவழியே மரமாக வெளிவந்துவிட்டது. இறைவனை அம்மரத்தின் கீழ் குடிகொள்ளுமாறு முனிவர் வேண்ட, அவரும் முனிவரின் பூசையை ஏற்று நாவல் மரத்தின் கீழ் குடிகொண்டார். ஜம்புகேசுவரர் என்று பெயர். முனிவரும் பிற்காலத்தில் ஜம்பு முனிவர் எனப்பட்டார். புஷ்பதந்தன் மால்யவான் எனும் பூத கணங்கள் ஒரு சாபத்தின் காரணமாக முறையே யானையும் சிலந்தியுமாக மாறி, ஜம்புகேசுவரரைப் பூசை செய்ய வந்தனர். யானை பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபட்டது. சிலந்தி தனது எச்சிலால் பந்தல் அமைத்தது. ஆனால், யானைக்கு இது பிடிக்காததால் தினமும் பந்தலை அழித்துவிட்டு நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தது. சிலந்தி கோபத்துடன் யானையின் துதிக்கைக்குள் நுழைந்து கடிக்க இரண்டுமே இறந்தன. ஜம்புகேசுவர் அவர்களுக்குச் சாப விமோசனம் அளித்து, புஷ்பதந்தனை மறுபடியும் கணநாதன் ஆகும்படியும், அவன் நினைவால் இத்தலத்திற்கு ஆனைக்கா எனும் பெயர் ஏற்படும்படியும் ஆசியளித்தார். கஜாரண்யம் என்று பெயர் உண்டு. சிலந்தி கோச்செங்கட் சோழனாகப் பிறந்து சிவத் தொண்டுகள் புரியவும் வழிவகுத்தார். இம்மன்னன்தான் யானை புகமுடியாத சிறு வாயில்களுடைய 70 மாடக் கோயில்களைக் கட்டினான். அவற்றுள் ஜம்புகேசுவர் ஆலயமும் ஒன்று.ஆனைக்காவில் அன்னை அகிலாண்டேசுவரிக்கு மிகுந்த சிறப்பு உண்டு. அன்னை மிக உக்கிரமாக இருந்தபடியால் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் எனும்  இரண்டு சக்கரங்களைச் செய்து கொடுத்தார். இரண்டையும் தாடங்கங்களாக அணிந்த பின்னும் அன்னையின் உக்ரம் குறையவில்லை; எனவே, ஆதிசங்கரர் விநாயகப் பெருமானின் பெரிய உருவச் சிலை ஒன்றையும் பிரதிஷ்டை செய்ய, அன்னையின் உக்ரம் தணிந்தது என்று கூறுவார்கள்.அகிலாண்ட நாயகியின் திருச்சந்நதியில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழா பஞ்சப் பிராகார விழா என்பதாகும். ஒரு சமயம் பிரம்ம தேவர் தாம் படைத்த ஒரு பெண்ணின் பேரெழில் கண்டு மயங்கி தாம் செய்துவந்த படைப்புத் தொழிலையே செய்திட இயலாதவராகிப் போனார். தவறினை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்க வேண்டித் தவம் இயற்றினார். இறைவன் அன்னையாகவும், இறைவி சிவனாகவும் மாறுபட்ட வேடங்களில் காட்சி அளித்தனர். பிரமன் அவர்களைக் கண்டு வெட்கித் தலை குனிந்தார். பிரம்மோற்சவத்தின்போது ( பங்குனி மாதம்) சித்திரை நாளன்று பஞ்சப் பிராகார உற்சவம் நடக்கையில் இம்மாறுபட்ட வேடங்களில் அன்னையும் இறைவனும்  வீதி உலா வருவார்கள். வாரியார் சுவாமிகள், இந்த நாளில் இரவு 9.30 மணி முதல் காலை 8 மணி வரை திருப்புழ் பாடுவதையும், இடையிடையில் பாடல்களுக்கு உரை கூறுவதையும் தவறாமல் செய்து வந்தார். உடன் வரும் பக்தர்களும் மெய்மறந்து கேட்பார்கள்.அம்பிகையின் மேல், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அகிலாண்டநாயகி மாலை, அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ் முதலான நூல்களை இயற்றியுள்ளார். அருணகிரி நாதர் 14 திருப்புகழ்ப் பாக்களைப் பாடியுள்ளார். கருதலர் திரிபுர மாண்டு நீறெழமலைசிலை யொருகையில் வாங்கு நாரணிகழலணி மலைமகள் காஞ்சி மாநக …… ருறைபேதை களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினிகடலுடை யுலகினை யீன்ற தாயுமைகரிவன முறையகி லாண்ட நாயகி …… யருள்பாலாதேவர்கள் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாக அளித்தனர். சிவபெருமான் அதை இடக்கையில் ஏந்தி நின்றார். அது உமையம்மையின் திருக்கரம். எனவே, மேருமலையை வில்லாக வளைத்துப் பிடித்தவர் உமையம்மையே என்ற சாக்தர்கள் கருத்தை இங்கு ‘‘கருதலர் திரிபுரம் மாண்டு நீறெழ மலைசிலை ஒரு கையில் வாங்கு நாரணி’’ என்று பாடுகிறார். [ கரிவனம்  ஆனைக்கா] . இதையே, ‘‘புரத்து அப்பு புவிதரத் தோன்றி சிலை பிடிப்ப’’ என்று கந்தர் அந்தாதியில் கூறுகிறார். ‘‘பூர நன்னாளில் தோன்றிய அம்பிகை, தனது கரத்தால் மேருவைப் பிடிப்ப. . . ’’ என்பது பொருள். ‘‘ஞால முதல்வி யிமயம் பயந்தமின்நீலி கவுரி பரைமங்கை குண்டலிநாளு மினிய கனியெங்க ளம்பிகை த்ரிபுராயி நாத வடிவி யகிலம் பரந்தவளாலி னுதர முளபைங் கரும்புவெணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் பெருமாளே’’என்கிறார்.ஆனைக்கா ஜம்புகேசுவரர் கோயிலிலுள்ள பல இடங்களைப் பற்றியும் தம் பாடல்களில் குறிப்பு வைத்துள்ளார் அருணகிரியார். ‘‘ துங்கக ஜாரணி யத்திலுத்தம சம்புத டாகம டுத்ததக்ஷிண  சுந்தர மாறன்ம திட்புறத்துறை …… பெருமாளே’’. கஜாரண்யம்=  ஆனைக்காசம்பு தடாகம்  = கோயிலிலுள்ள ஒன்பது தீர்த்தங்களுள் ஒன்று. கோயிலின் தென்கிழக்கிலுள்ளது.தட்சிண சுந்தரமாறன் மதில்புறம் = சம்பு தீர்த்தத்திற்குத் தெற்கே, நாலாம் பிராகாரமாக விளங்கும் தென்மதில்; சுந்தர மாறன் புதுக்கிய அழகிய திருமதில்  என்பதால் இப்பெயர் பெற்றது. அருகே முருகன் குடிகொண்டுள்ளான்.‘‘ஆழிதே  மறுகிற் பயில்  மெய்த்திருநீறிட்டான் மதில் . . . ’’திருநீறிட்டான் மதில் =  ஐந்தாவது பிராகாரச் சுற்று மதிலைச் சிவபெருமாளே சித்தராச நின்று திருநீற்றைக் கூலியாகக் கொடுத்துப் புதுக்கிய மதில். [வீட்டிற்குச் சென்று பார்க்கும்பொழுது அவரவர் வேலைக்கேற்ப திருநீறு பொன்னாக மாறிவிடுமாம்!]‘‘திருச்சாலகச் சோதித் தம்பிரானே ’’ அருள் மிகுந்த அழகிய பலகணி வழியாயச் சோதி போல் காட்சி தரும் சிவனுக்குத் தம்பிரானே! ஜம்புகேசுவரர் சந்நதிக்கு நேரே மேற்கில் உள்ள சுவரில் ஒன்பது துவாரங்களுடன் அமைந்த சாளரம் ஒன்று உண்டு. இதன் வழியாக இறைவனைத் தரிசித்தோர் நவதீர்த்தங்களில் முழுகிய பயனைப் பெறுவார்கள். ‘‘அந்தண் மடவார்  அனவரதம் சிந்தித்துச் சேவிக்கும் எல்லைத் திருச்சாலக  நலமும்’’ஊரை அடுத்து ஸ்ரீரங்கம் இருப்பதால், திருமாலையும் குறிப்பிட்டுப் பாடுகிறார்.‘‘அரிகரி  கோவிந்த  கேசவ என்றிரு கழல் தொழ சீரங்கராஜன்’’அந்தணர்கள் ஹரிஹரி கோவிந்த கேசவ என்று கூறித் துதி செய்கின்றார்கள். திருவானைக்கா திருப்பணி மாலை என்ற  நூலில் இக்கோயிலின் மதில்கள், கோபுரங்கள், மண்டபங்கள் முதலானவை சோழர்களாலும், பாண்டியர்களாலும், பக்தர்களாலும் அவ்வப்போது திருப்பணி செய்யப்பட்ட விவரங்களைக் கூறுகிறது.க்ஷேத்திரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரிநாதர் குறிப்படும் திருத்தலம் திருவாடானை. தேவக்கோட்டையிலிருந்து 28 கி.மீ. தொலைவிலுள்ளது. இறைவன் ஆதிரத்னேஸ்வரர். இறைவி சினேகவல்லி ஆடும் யானையும் சேர்ந்த விநோத உருவத்தில் வருண… மகன் வாருணி இறைவனைப் பூசித்த தலம். ஆடும் ஆனையுமாகச் சாபம் நீங்க வழிபட்ட தலமாதலால் திரு ஆடானை ஆனது. இறைவன் அஜகஜேஸ்வரர்  = ஆடானை நாதர். [அஜம் = ஆடு, கஜம் = யானை] சூரியனுக்கு ஒளி கொடுத்து ஆதிரத்தினமாக இறைவன் அருளிய திருத்தலம்.திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தி, ஆகமங்களை அருள் உபதேசம் செய்து கொண்டிருப்பதாக ஒரு ஐதிகம் உள்ளது. திரு ஆடானை பாடலில், அருணகிரிநாதர் ‘‘ஞானாகமத்தையருள் ஆடானை நித்தமுறை பெருமாளே’’ என்று பாடியுள்ளார். தட்சிணாமூர்த்தி சந்நதியில் முறையான உபதேசம் பெற்று, பதினாறு லட்சம் முறை பஞ்சாட்சரத்தை ஜெபித்தால் இறைவனடி அடையும் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை. சினேகவல்லி எனும் தேவியின் பெயரை ‘அன்பாயியம்மை’ என்று தான் உ.வே. சா தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். சிநேகத்துடன் இறைவனைத் தழுவிய கொடி போன்றவளாதலால் ‘அன்பாயிரவல்லி’ எனும் நாமம் காலப்போக்கில் மருவி ‘ அம்பாயிரவல்லி’ என்றாகிவிட்டது வருத்தத்திற்குரியது. பத்மபீடத்தின் மீது, நின்ற கோலத்தில், சிரசின் நடுப்பகுதியில் பிறைச் சந்திரனைச் சூடியவளாகக் காட்சி அளிக்கிறாள்.வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர் நிற்கிறார். இத்தலத்தில் அருணகிரியார் பாடியிருக்கக் கூடிய பாடல்களுள் நமக்குக் கிடைத்திருப்பது ஒன்றே. ‘‘ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுடலூதாரி பட்டொழிய வுயிர்போனால்ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகிஓயா முழக்கமெழ அழுதோய நானா விதச்சிவிகை மேலே கிடத்தியதுநாறா தெடுத்தடவி யெரியூடேநாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவிநாடா தெனக்குனருள்  புரிவாயே மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடுமாயோனு மட்டொழுகு மலர்மீதே வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்வானோரு மட்டகுலகிரியாவும் ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவருமாலால முற்றவமு தயில்வோன்முன்ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்ஆடானை நித்தமுறை பெருமாளே.’’ இவ்வுயிர் உடலை விட்டுப் பிரிந்த பின், பலர் கூடி அழுது பல்லக்கில் ஏற்றி சுடுகாடு எடுத்துச் சென்று தயங்காமல் நெருப்பின் மீது வைத்து விட்டுத் திரும்பி விடுவதான அவல நிலையுடைய இப்பிறவியை நான் விரும்பாதபடி எனக்கு அருள் புரிவாயாக என்று வேண்டுகிறார். பாடலில் காளிங்கன் மீது கண்ணபிரான் நடனமாடியது பற்றியும், சிவபெருமான் நஞ்சுண்டது பற்றியும், அவர் குமரனிடம் உபதேசம் பெற்றது பற்றியுமான குறிப்புகள் உள்ளன.முருகவேள் உபதேசம் பெற்றபோது சிவபிரான் வணங்கிக் கேட்டார். ‘‘நாதா குமரா நம’’ என்று அரனார் ‘ஓதாய்’ என ஓதியது எப்பொருள் தான்?’’ [சுந்தர் அநுபூதி] ‘‘மைந்த எமக்கு அருள் மறையின் என்னாத் தன் திருச்செவியை நல்கச் சண்முகன் குடிலை என்னும் ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன்.’’- கந்தபுராணம். ‘ஓம்’ எனும் ஓரெழுத்தினின்றே ஓம் நமச்சிவாய எனும் ஆறெழுத்து விரியும் எனக் காட்டி விளக்கினான், முருகவேள். ‘‘ஆலகாலத்தை உண்ட சிவபெருமானுக்கு ஆசாரத்துடனும் பக்தியுடனும் வேதாகமங்களின் ஞானப்பொருளை உபதேசித்தவனும் ஆடானை எனும் திருத்தலத்தில் வீற்றிருப்பவனுமான முருகப்பெருமாளே’’ என்று பாடலை நிறைவு செய்கிறார்.(உலா தொடரும்)தொகுப்பு: சித்ரா மூர்த்தி

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi