Sunday, May 26, 2024
Home » ரூ.6,600 கோடி மதிப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் ஆட்சி போகும் நேரத்திலும் ‘கமிஷன் அள்ள’ அவசர டெண்டர்கள் விட்ட அதிமுக அரசு

ரூ.6,600 கோடி மதிப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் ஆட்சி போகும் நேரத்திலும் ‘கமிஷன் அள்ள’ அவசர டெண்டர்கள் விட்ட அதிமுக அரசு

by kannappan

*அதிகம்     குறிப்பிட்டவர்களுக்கு    திட்டப்பணி ஒப்படைப்பு* விதிகளை மீறி பணம் சுருட்ட நடந்த பகீர் முறைகேடுசென்னை: ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் நிலையிலும், நடத்தை விதிகள் அமலாவதற்கு சில தினங்கள் முன்பு, கமிஷன் சுருட்டுவதற்காக ரூ.6,600 கோடி மதிப்பிலான டெண்டர்களை விட்டு முந்தைய அதிமுக அரசு முறைகேடு செய்தது தற்போது அம்பலம் ஆகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. 2வது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், மக்கள் நலத்தையும், மாநிலத்தின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதற்கு மாறாக, கமிஷனுக்காக பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வேண்டியவர்களுக்கு கொடுத்து பணம் சுருட்டிய தகவல்கள் அப்போதே வெளியாகின.தேர்தல் தேதி அறிவித்து நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில தினங்கள் முன்பு கூட இதே போன்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முறைகேடாக டெண்டர் விட்டு அமல்படுத்தியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டுமே சுமார் ரூ.6,600 கோடிக்கும் மேலான மதிப்பில் பல திட்டங்கள் முறைகேடாக டெண்டர் விடப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் மழைநீர் வடிகால்வாய் திட்டம், குப்பையை முறையாக தரம் பிரித்து அழிக்க பயோ-மைனிங் திட்டம், சாலை திட்டம் போன்றவை அடங்கும். இதில் அதிக மதிப்பிலான திட்டமாக, கொசஸ்தலை ஆற்றையொட்டி அமைக்கப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் திட்டம் கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.2,400 கோடி. இதுபோல், ரூ.350 கோடியில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கிடங்குகளில், குப்பையை தரம்பிரித்து அழிப்பதற்கான பயோமைனிங் திட்டம், ரூ.2,000 கோடியில் பஸ் வழித்தடங்களில் சாலை அமைக்கும் திட்டம், நடைபாதைகள் அமைக்க ரூ.200 கோடி, ரூ.170 கோடியில் ஆறு, கால்வாயுடன் இணைக்கப்படாமல் பாதியில் நிற்கும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை நிறைவு செய்யும் பணிகள், ரூ.100 கோடியில் பேருந்து நிழற்குடைகளில் விளம்பரம் செய்வதற்கான திட்டம், ஆயிரம் கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், கழிவு நீர் அகற்றும் திட்டப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய்(இது உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. கோவளம், உத்தண்டி, நீலாங்கரை பகுதிகள்) ஆகியவற்றுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் ரூ.6,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதில் ரூ.700 கோடி வசூல் செய்யப்பட்டு, ஆளும் விஐபியிடம், மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு பொறுப்பான நந்தமான அதிகாரி ஒருவர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நந்தமான பொறியாளருக்கு 3 சதவீதம் கமிஷனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனில் பெறப்பட்ட ரூ.200 கோடியை 10 காண்ட்ராக்டர்களுக்கு பொறியாளர் வழங்கியுள்ளார். இந்த ரூ.200 கோடியைக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வழக்குகள் போடப்பட்டால் போலீஸ் மற்றும் நீதிமன்ற வழக்குகளை சமாளிப்பதற்காக கொடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆட்சிக்காலம் முடிய இருந்த நிலையிலும், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும், கொசஸ்தலையாறு திட்ட பணிகளுக்கு முன்பணமாக கான்டிராக்டர்களின் பில்  தொகை ரூ.56 கோடியை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. இதற்கும் அந்த பொறியாளர்களுக்கு பொறுப்பான அதிகாரியே செய்துள்ளார். இதுமட்டுமின்றி, திட்ட மதிப்பீட்டு தொகையில் சுமார் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் அதிகாரிகளுக்கும், அதிமுக அரசியல்வாதிகளுக்கும் சென்ற பிறகுதான் திட்டப் பணிகளையே ஒப்பந்ததாரர்கள் துவக்கியுள்ளனர். இந்த கமிஷன் தொகையை சரிகட்டுவதற்காக, அரைகுறையாக துவங்கிய திட்டப் பணிகளும் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  மேலும், மழைநீர் வடிகால்வாய் பணிகளை பொறுத்தவரை, சம்பந்தமே இல்லாத இரு வேறு கால்வாய்களுக்கு இடையில், விதிமுறைகளுக்கு எதிராக இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டில் சென்னையில் பெருவெள்ளம் வந்ததற்கு, ஆளும் அரசின் மெத்தனப்போக்கும், அதிகாரிகளின் அலட்சியமும்தான் முக்கிய காரணமாக அமைந்தது. சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது சென்னை மக்களின் மனதில் ஆறாத வடுவாக பதிந்து விட்டது. ஆனால், ஆட்சிக்காலம் முடியும் நேரத்தில் கூட, மழைநீர் வடிகால்வாய் பணிகள் விதிகளை மீறி நடந்துள்ளது, அதன் நோக்கத்தையே சீரழிப்பதாக அமைந்து விட்டது. தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னையின் சில பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதெல்லாம் மக்கள் நலனுக்காக என்றில்லாமல், கமிஷன் அடித்து காசு சுருட்டுவதற்காகவே என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல், பேருந்து நிழற்குடைகளை, ஏற்கெனவே இருந்த இடத்தில்தான் அமைத்துள்ளனர். இதனால், திட்ட நிதி பாழானதோடு, மக்களுக்கு நன்மை கிடைக்காமலேயே போய்விட்டது என, முறைகேடு குறித்து மாநகராட்சி ஊழியர்கள் சிலர் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, சில திட்டப்பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி சுமார் ₹60 கோடி வரை திட்டம் துவங்குவதற்கான நிதியாக வழங்கியுள்ளது. ஆனால், பணம் பெற்ற ஒப்பந்ததாரர்கள், எந்த பணியையும் துவக்கவே இல்லை. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடந்தது தொடர்பாக குற்றச்சாட்டுகளும், ஊழல் புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் மக்கள் மத்தியிலும் அதிமுக அரசு கடும் அதிருப்தியையும்  எதிர்ப்ைபயும் சந்தித்துள்ளது. ஊழல் செய்வதற்கு எந்த வித தயக்கமும் காட்டாமல், மக்கள் நலனை முற்றிலும் புறக்கணித்து செயல்பட்டதால், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பிலும் மக்கள் தங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இதனால், அடுத்த முறை ஆட்சியை பிடிக்க முடியாது என்று தெரிந்த நிலையில், கடைசி நேர பரபரப்பிலும் டெண்டர் சட்ட விதிகளை கடைப்பிடிக்காமல் முறைகேடாக ஒப்பந்தப்பணிகளை ஒப்படைத்து பல கோடிகளை சுருட்டியது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேற்கண்ட முறைகேடுகளை கண்டறிந்து, ஒப்பந்ததாரர்கள், உடந்தையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மக்கள் நலனை மனதில் கொண்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள் சிலரும் வலியுறுத்துகின்றனர்.தேவையற்ற இடத்தில் விளக்குகள் இரட்டிப்பு விலையில் கருவிகள்அவசர கதியில் கமிஷனுக்காக முறைகேடாக வழங்கப்பட்ட மேற்கண்ட திட்டங்களில் எல்இடி மின்விளக்கு திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.145 கோடி. இதில் தற்போது 80 சதவீதம் நிறைவுற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், விளக்குகள் செயல்படுவதை கண்காணிக்கும் அல்லது இயக்கும் கருவிகளுக்காக பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. சந்தை விலையில் ஒரு கருவி ரூ.25,000 மட்டுமே. ஆனால் ஒரு கருவி ரூ.57,000க்கு வாங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதிலும், மாநகராட்சிக்கான இந்த திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள், ஏரிகள், அங்கீகாரம் பெறாத மனைகள் உள்ள பகுதிகளில் பல விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. அதோடு, ஆட்சி முடியும் தருணத்திலும், அனைத்து மண்டலங்களிலும் உள்ள விளக்குகளின் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் 7 ஆண்டுகளுக்கு ரூ.100 கோடியில் வழங்கப்பட்டுள்ளது.வேண்டியவர்களுக்கு கிடைக்க வழி வகுத்த அதிகாரிகள்டெண்டர்களில் குறைந்த விலை குறிப்பிடுவோருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும்போது, அது வெளிப்படை தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், கடந்த ஆட்சியின் இறுதியில் நடந்த அவசரக்கோல டெண்டரில், மாநகராட்சி அதிகாரிகள் பலர் புகுந்து விளையாடியுள்ளனர். அதாவது, கான்டிராக்டர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு, குறைவாக மதிப்பீடு குறிப்பிட்டவர்களிடம் முன்வைப்பு தொகையை பெறாமல் மறுத்துள்ளனர். இதன்மூலம், அவர்களது டெண்டர் ரத்து செய்யப்பட்டு, கமிஷன் தரும் தங்களுக்கு வேண்டிய பெரிய கான்டிராக்டர்களுக்கு பணி செல்ல இது வழி வகுத்துள்ளது. கடந்த ஆட்சியில் அரசியல்வாதிகளின் வழிகாட்டுதலுடன்தான் இத்தகைய மோசடிகள் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.சந்தையை விட அதிக விலைகமிஷனுக்கு கூட்டுக் கொள்ளைபொதுவாக அரசு திட்டங்களை செயல்படுத்த டெண்டர் விடுத்து, அதில் குறைவாக குறிப்பிடும் விண்ணப்பதாரருக்கே பணிகளை ஒப்படைப்பது நடைமுறையாக உள்ளது. ஆனால், இந்த நடைமுறைகள் இதில் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை என விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கான்டிராக்டர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு, சந்தை விலையை விட அதிகமாகத்தான் டெண்டர்களில் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பெரும்பாலான டெண்டர்கள், இவ்வளவு தான் போக வேண்டும் என முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு, அதற்கேற்பத்தான் டெண்டர்கள் முறைகேடாக நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், சந்தையில் உள்ள விலையை விட கூடுதல் விலைதான் டெண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதிக கமிஷன் பெறுவதற்கு சாதகமாக அமைந்ததோடு, அரசுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.அமைச்சரின் ‘அட்சய பாத்திரம்’: பொறியில் சிக்குவாரா தில்லுமுல்லு பொறியாளர்?ஆட்சி போகும் நேரத்திலும் கலெக்‌ஷன் குறைந்து விடாத அளவுக்கு மேற்கொள்ளப்பட்ட மோசடி டெண்டரில் நந்தமான பொறியாளர் ஒருவருக்கு முக்கிய பங்கு உள்ளதாக கூறப்படுகிறது. 1993ம் ஆண்டு தென்சென்னையில் உள்ள டிப்போவில் லாரி பழுதுபார்க்கும் பொறியாளராக இருந்த அந்த பொறியாளருக்கு, லாரியை கவனிப்பதுதான் வேலை. ஆனால், அமைச்சரை ‘கவனித்தால்’ தனக்கு முன்பு பதவிக்காக காத்திருக்கும் 20 பேரை தாண்டி பதவி உயர்வை உடனே பெறலாமே என்ற ஆசையில் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால், ஊழல் பேர்வழியான அவரால் திமுக ஆட்சியில் குறுக்கு வழியில் பதவி உயர்வு பெற முடியவில்லை. இதனால் அதிமுக ஆட்சிக்கு வரும் வரை காத்திருந்துள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்காப்பு கலை கற்ற தியாகமானவரும், வெற்றியானவரும் உதவியதால், லாரியை கவனிக்கும் துறையில் இருந்து நகர திட்டமிடல் துறைக்கு மாறியுள்ளார். அதிமுக ஆட்சியில் அவரது ‘வசூல் திறமை’யை மெச்சி பதவி உயர்வுகள் தகுதிக் காலத்துக்காக காத்திருக்காமலேயே வந்து சேர்ந்தன. பல ஆயிரம் கோடிகள் வசூலித்து கொடுக்கும் அட்சய பாத்திரம் போல திகழ்ந்ததால், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எல்லா வேலையும் பார்ப்பதற்காகவே அவருக்கு பதவி தரப்பட்டதாக கூறப்படுகிறது. 6 ஆண்டு நிர்வாக பொறியாளராக இருந்தால் மட்டுமே தலைமை பொறியாளராக முடியும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், தனக்கு கமிஷன் அள்ளிக்கொடுக்க திட்டம் வகுத்து திட்டப் பணிகளை நிறைவேற்றும் அந்த நந்தமான அதிகாரியை உச்ச அதிகாரம் படைத்த அதிகாரி மூலம் ஒரே கையெழுத்தில் தலைமை பொறியாளர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார். இதற்கு கைமாறாக, தான் அடித்த கமிஷன் போக, அமைச்சருக்கு பல ஆயிரம் கோடி கமிஷன்களை பெற்றுக் கொடுத்து, ஆட்சி முடியும் வரை பண அபிஷேகம் செய்து மகிழ வைத்தார் என்கிறார்கள், விவரம் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள்….

You may also like

Leave a Comment

twenty − twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi