Thursday, May 16, 2024
Home » ராஜராஜ சோழன் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிய நாடு புதைநகரமாக காட்சியளிக்கும் கொங்கராயகுறிச்சி

ராஜராஜ சோழன் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிய நாடு புதைநகரமாக காட்சியளிக்கும் கொங்கராயகுறிச்சி

by kannappan

*  9,11ம் நூற்றாண்டு பாண்டியர், சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு* அகழாய்வு மேற்கொள்ள வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தல்பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ஜோசப்ராஜ். இவர், வைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி சட்டநாதர் கோயில் மற்றும் வலம்புரி விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கொங்கராயகுறிச்சி ராஜராஜ சோழனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சிற்றரசன் ஆண்டதாக கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது.இதுகுறித்து உதவி பேராசிரியர் ஜோசப்ராஜ் கூறியதாவது: கிபி 11ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சியில் அவர்களுக்கு கீழ் சிற்றரசர்கள் பலர் இருந்தனர். கொங்குராயன் என்ற சிற்றரசன் வைகுண்டம் பகுதியை கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. ஆகவே, கொங்குராயகுறிச்சி கொங்குராயர் பெயரை நினைவூட்டும் விதமாக உள்ளது. குறிச்சி என்பது மலைவாழ் மக்கள் வசித்த பகுதியை குறிப்பிடுவதாக இருந்தது. குறிஞ்சி நிலத்தில் வசித்த மக்கள் என்பதால் குறிஞ்சி என்பதில் இருந்து குறிச்சி என பெயர் மருவியுள்ளது. அருகில் உள்ள மணக்கரை சிவன் கோயிலிலும் கொங்குராயனின் பெயரில் கல்வெட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் கொண்ட ஊர் கொங்குராயகுறிச்சி என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது. இங்குள்ள வீரபாண்டீஸ்வரர் கோயிலின் மொத்த பரப்பளவு சுமார் 3 ஏக்கர் ஆகும். தென்பாண்டி நாட்டுக்குப் பெருந்தொண்டு செய்த பாண்டியன் வல்லபன் ஆவார். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மணப்படைவீடு அம்மனுக்குரிய படைவீடுகளில் ஒன்றாக இருந்துள்ளது. ஜடாவர்மன் அல்லது சடையவர்மன் வல்லபன் கி.பி.1070ல் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசனாக முடிசூடிக் கொண்ட முதலாம் குலோத்துங்க சோழனின் சமகாலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னராவார்.முதலாம் ராஜராஜ சோழன் (கிபி 985-1014) காலத்தில் பாண்டியநாடு சோழர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆத்து பகுதி ‘ராஜராஜ சோழ வளநாடு’ என்று சோமநாதர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.” முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் மதுரை, ெநல்லை பகுதியில் சோழ பாண்டிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பெருங்குளம் திருவழுதீஸ்வரர் கோயிலிலும் ராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதே கோயிலில் சடையவர்மன் வல்லபனின் மெய்க்கீர்த்தியும் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் தான் கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோயில் எழுப்பப்பட்டு அதில் சடையவர்மன் வல்லபனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டாக உள்ளது. வீரபாண்டீஸ்வரர் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் தெளிவாக காணப்படுகிறது. கருவறை நிலையின் மேற்பகுதியில் இரண்டு வரிகள் கொண்ட கல்வெட்டு ஒன்றும், கருவறையின் இடது நிலைப்பகுதியில் 16 வரிகள் கொண்ட வல்லப பாண்டிய மன்னனின் மெய்க்கீர்த்தியும் பொறிக்கப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புற பகுதியில் கல்வெட்டுகள் இருந்துள்ளது. அவை வெள்ளப்பெருக்கினால் கருவறை முழுவதும் மணலால் மூடி இருந்துள்ளது. ஆகவே எழுத்துக்கள் சிதைந்து விட்டது.17ம் நூற்றாண்டில் நாயக்கர்கள் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்கள் தென்பாண்டி நாட்டில் ஏராளமான கோயில்களில் திருப்பணிகள் செய்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. வீரபாண்டீஸ்வரர் கோயிலில் மகாமண்டபம் மற்றும் சுற்றுப்புற மண்டபங்களைக் கட்டி அதில் உள்ள தூண்களில் நாயக்க மன்னர்களின் உருவத்தை சிற்பமாக செதுக்கியுள்ளனர். இதனால் 17ம் நூற்றாண்டில் இந்த கோயில் சிறப்பு பெற்று விளங்கியதை அறிய முடிகிறது. நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்குத் தானங்களும் வழங்கியுள்ளனர்.கொல்லம் ஆண்டு 872 (கி.பி.1696)ல் வீரபாண்டீஸ்வரர் கோயிலுக்கு நாயக்க மன்னர்கள் தானம் வழங்கியது செப்பு பட்டயம் மூலம் அறிய முடிகிறது. 1810ம் ஆண்டு ஆனி மாதத்தில் கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோயிலுக்கு சுப்பிரமணிய பிள்ளை குமாரன் மாணிக்கம்பிள்ளை என்பவர் ஒரு வெண்கல மணியை உபயமாக வழங்கியுள்ளார்.கொங்கராயகுறிச்சியின் பழமையான வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ள கோயில் வலம்புரி விநாயகர் கோயிலாகும். வீரபாண்டீஸ்வரர் கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 200 அடி துரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் நுழைவாயில் நிலைப் பகுதியில் 9ம் நூற்றாண்டு மற்றும் 11ம் நூற்றாண்டை சார்ந்த இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. வீரபாண்டீஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்கு முன்பு வலம்புரி விநாயகர் கோயில்தான் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த முதன்மை கோயிலாக இருந்துள்ளது. 9ம் நூற்றாண்டு கல்வெட்டு மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னனின் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று உள்ளது. மற்றொரு கல்வெட்டு 11ம் நூற்றாண்டு கல்வெட்டு. இது இராஜராஜ சோழனின் காந்தளுர் சாலை போர் வெற்றியைக் குறிப்பிடுகிறது. வலம்புரி விநாயகர் கோயிலின் கருவறையின் மீது விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாக காணப்படுகிறது. கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் கூடிய சிறிய கோயிலாகக் காட்சியளிக்கிறது. சுமார் 20 அடி நீளமும். 9 அடி அகலமும் கொண்டதாக காணப்படுகிறது. இக்கோயில் தரைதளத்திற்கும் மேலாக ஆற்று மணல் சூழ்ந்து காணப்படுகிறது. கருவறையைச் சுற்றியுள்ள ஆற்று மணலை அகற்றினால் அதில் பல்வேறு கல்வெட்டுகள் இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இந்த பகுதியில் ஒன்றிய, மாநில அரசு அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் ஏராளமான வரலாற்றுப் பொக்கிஷங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். கொங்கராயகுறிச்சியில் உள்ள விநாயகர் கோயிலில் கிபி 9, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர், சோழர்கால கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.19ம் நூற்றாண்டில் 10 முறை வெள்ளப்பெருக்குகோடைக்காலம் தவிர பிற மாதங்களில் தாமிரபரணி ஆறு கரைபுரண்டு  பாய்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. 19ம் நூற்றாண்டில் சுமார் 10 முறை  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1869 நவம்பர் மாதத்தில் பெய்த கனமழை  காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாளையங்கோட்டையையும், திருநெல்வேலியையும் இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலம் பாதிப்புக்குள்ளானது. இதில் 4 வளைவுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போதைய மாவட்ட கலெக்டர் பக்கிள்துரை தான் அதை  சீரமைத்தார். பின்னர் 1877ம் ஆண்டு ஒரே ஆண்டில் 2 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.ஆற்றுமணலால் மூடப்பட்ட வீரபாண்டீஸ்வரர் கோயில்தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர்  கோயில் முழுவதும் ஆற்றுமணலால் மூடப்பட்டு விட்டது. கோயிலில் தேர்  இருந்ததாகவும், அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மக்கள் கூறி  வருகின்றனர். 21ம் நூற்றாண்டில் கிராம மக்களின் முயற்சியினால் மணல் அகற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது….

You may also like

Leave a Comment

ten − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi