Saturday, May 18, 2024
Home » யோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள் : நீச்ச பங்க ராஜயோகம்

யோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள் : நீச்ச பங்க ராஜயோகம்

by kannappan
Published: Last Updated on

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதற்கேற்ப. இறைவன் அருள் கூர்ந்து, கருணையுடன் நாம் பல்வேறு பிறவிகளில் செய்த பாவ, புண்ணிய கணக்குப்படி ஒருவருக்கும் மனித பிறவியை தருகிறான். இந்த பிறவி  என்பது நமக்கு யோகமா, அவயோகமா, நாம். வாங்கி வந்த வரம் என்ன என்பதை நாம் பிறக்கின்ற நேரத்தில் எந்தெந்த கிரகங்கள் எப்படி, எப்படி அமைந்துள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ளும் சாஸ்திரம் தான் ஜோதிடம். இந்த சாஸ்திரத்தில் பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு பல வகையான பெயர்களில் கட்டங்கள் உள்ளது. இருந்தாலும் ராசிக் கட்டம், நவாம்ச கட்டம், பாவ கட்டம் என்ற மூன்று கட்டங்கள் மட்டும் தான் தற்காலத்தில் நடைமுறையில் உள்ளது. அதில் ராசிகட்டம், நவாம்ச கட்டம் மிகவும் முக்கியம். சிலர் வெறும் ராசிக் கட்டத்தை மட்டும் பார்ப்பதால் பலன்கள் மாறிவிடுகின்றன.நம்முடைய ஊழ்வினை கர்ம கணக்கின்படி நாம் இந்த இடத்தில் இப்படிப்பட்ட கிரக அமைப்புடைய கால கட்டத்தில் பிறக்க வேண்டும் என்பது முன்கூட்டியே இறைவனால் தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும். நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவையாகும். மிகச்சரியாக சொல்வது என்றால் ஒருவர் பிறக்கின்ற லக்னம் தான், ஒரு ஜாதகத்தை யோகமாகவோ, அவயோகமாகவோ மாற்றக்கூடிய சக்தி படைத்தது. அதே போல் ராசிக்கட்டமும், நவாம்ச கட்டமும் உடலும், உயிரும் போலாகும். ராசிக் கட்டத்தில் உள்ள கிரகச்சாரங்கள் அடிப்படையில் தான் நவாம்ச கட்டம் அமைகிறது.இந்த அம்சம், யோகம், பாக்கியம், கொடுப்பினை, அதிர்ஷ்டம், என பல விஷயங்கள் ஒருவரின் உயர்ந்த உன்னதமான உச்சக்கட்ட வாழ்க்கையை பற்றி குறிப்பிடுவதாகும். ஒரு சிலருக்கு வம்சா வழியாக பரம்பரை செல்வச் செழிப்பு உண்டாகும். சிலருக்கு தாத்தா, தகப்பன் படாத பாடுபட்டு பெரும் செல்வத்தை சேர்த்து வைத்திருப்பார்கள். தற்காலத்தில் கல்வி செல்வத்தின் மூலம் பெரும் பொருள் செல்வம் குவிந்து விடுகிறது. அரசியல், கட்சி பதவிகள், அரசு உயர்பதவி, M.P, M.L.A, மந்திரி என பலவகைகளில் வாழ்க்கையில் உயர்ந்த உச்ச நிலையை அடைந்து விடுகிறார்கள். பெரும் பாலானவர்களின் வாழ்க்கை பரமபத விளையாட்டு போல விறுவிறு என்று ஏணியில் ஏறுவதும், பாம்பில் சறுக்கி இறங்குவதுமாக சகடயோக அமைப்பு உடைய ஜாதகமாக இருக்கிறது. சிறிய முதலீட்டில் தொடங்குகின்ற தொழில் நன்றாக விருத்தி அடைந்து பல கோடிகளை தொட்டு கிளைகளை பரப்பி செழித்து வளர்ந்து பலன் கொடுக்கிறது. பெரிய அளவில் படாடோபமாக ஆரம்பிக்கின்ற தொழில் குறுகிய காலத்திலே கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து, நஷ்டம் அடைந்து தலை தூக்க முடியாத நிலைக்கு கொண்டு வந்து விட்டு விடுகிறது. இதைத்தான் கோள்களின் விளையாட்டு, கட்டங்கள் தரும் கஷ்டங்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.உழைப்பு உயர்வு தரும். அவரவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப உயர்வு இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் தான் கிடைக்கும். அதேநேரத்தில் உழைப்புடன் அதிர்ஷ்டமும், வாய்ப்பும், சந்தர்ப்பமும் இணையும் போது ஒருவர் உயர்ந்த உச்ச நிலையை தொட முடியும். அதற்கு காலச் சக்கரம் என்ற நாளும், கோளும் ஜாதகத்தில் சாதகமாக அமைய வேண்டும்.‘‘அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா’’ என்பது ஔவையார் வாக்கு. நாம் என்ன தான் முயற்சி மேல் முயற்சி செய்து கஜகர்ணம், கோகர்ணம் போட்டாலும்  அந்த கால நேரம் வரவேண்டும். அந்த கால நேரத்தை நமக்கு ஏற்படுத்தி தருவது ஜாதக கட்டத்தில் உள்ள கிரக யோக அமைப்புக்களாகும்.ஈட்டி எட்டும் வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும், பணம் பத்தும் செய்யும். ஆக எல்லாம் பணத்தில் இருந்து தொடங்குகிறது பணம் சேர சேர தொழில், வியாபாரம், செல்வம், செல்வாக்கு, சொத்து, பட்டம், பதவி, புகழ் என எல்லாம் அணிவகுத்து நிற்கிறது. அவரவர் பூர்வ புண்ணிய ஸ்தான பலத்திற்கேற்ப யோக பலன்கள் அமைகிறது. இப்படிப்பட்ட சூட்சும, நுட்பமான விஷயங்களை பல ஜோதிட சுவடிகள் குறிப்பிட்டு காட்டி உள்ளது. ஜாதக அலங்காரம், பிரகத்ஜாதகம், சந்திர காவியம், சப்தரிஷிநாடி, பல தீபிகை போன்ற முக்கியமான ஜோதிட நூல்களில் சக்கர வர்த்தியோகம், மகாராஜா யோகம், முத்திரிகா யோகம், சிங்காதன யோகம், ஹர்ஷயோகம் என பல முக்கியமான ராஜயோகங்களை பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவை தவிர, கிரக சேர்க்கைகள், பார்வைகள் மூலம் பல ஆயிரக் கணக்கான யோகங்கள் அமைகின்றன. எல்லா ஜாதகங்களிலும் ஏதாவது ஒரு வகையான யோக அமைப்பு இல்லாமல் இருக்காது. அந்த யோக அமைப்பின் தன்மை பலத்திற்கேற்ப அந்த ஜாதகர் பலன்களை அனுபவிப்பார்.பொதுவாக ஜாதக அமைப்புக்களை பார்க்கும் போது அனுபவ பூர்வமாக சில யோகங்களை பெரும்பான்மையான ஜாதகங்களில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் ‘‘நீச்ச பங்க ராஜயோகம்’’ என்பது மிக மிக முக்கியமான அம்சமாகும். நீசம் என்பது மிகவும் தாழ்ந்த நிலையாகும், கீழ்நிலை என்றும் சொல்லலாம். ஒரு கிரகத்தின் வலிமை குன்றிய அமைப்பு நீசமாகும். இதை விட பலம் குறைந்த அமைப்பு ஜாதகத்தில் கிடையாது. குறிப்பாக சமூகத்திலே கிராமப்புறங்களில் ஒருவரை கடும் சொற்களால் திட்டும் போது அவன் நீச்சன் என்று சொல்வார்கள். நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சொல்வன், நீச்ச தொழில் செய்பவன், நீச்ச தொடர்பு உள்ளவன் என சொல்வார்கள். அந்த வழக்கம் இந்த நீச்ச கிரக தன்மையை மையமாக வைத்து சொல்லப்பட்டது, பேசப்பட்டதாகும். பொதுவாக ஜாதகத்தில் ஏதாவது ஒருவகையான யோகம் இருக்கும் என்பது அனுபவ பூர்வமாக மிகச் சரியாக உள்ளது. அதே போல பரவலாக சமூகத்தில் தர்மகர் மாதிபதி யோகம், பஞ்சமகா புருஷ யோகங்கள் உடைய ஜாதகங்கள் அதிகமாக பார்க்க முடிகிறது. ஒருவர் ஏதாவது ஒரு துறையில் பெரிய அளவில் வெற்றி பெறுகிறார், தொழில் அதிபராகிறார், கோடிகளில் புரள்கிறார், மந்திரி, M.L.A, M.P, போன்ற அரசு பதவிகளில் இல்லாமல் அவர்களால் அந்த இடத்தில் அமரமுடியாது. இதே போன்று கல்வி சார்ந்த வகையில் வக்கீல், ஆடிட்டர். கம்ப்யூட்டர் துறை, வங்கி, அரசுத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ரிஜிஸ்ட்ரர், தாசில்தார் போன்ற உயர்ந்த உச்ச பதவிகளில் அமருவதற்கு ஜாதகத்தில் உள்ள ராஜயோக அமைப்புக்கள் தான் காரணம் என்பதை அந்த பதவியில் இருக்கும் ஜாதகரின் கிரக சேர்க்கைகள் தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றது.இந்த நேர்வகை ராஜயோக அமைப்புக்களை போலவே நீசபங்க ராஜயோகம் என்ற அமைப்பும் பல லட்சக்கணக்கான ஜாதகங்களில் காணப்படுகிறது. காரணம் இந்த கிரக சஞ்சார அமைப்பில் எல்லா கிரகங்களும் இந்த 12 ராசிக்கட்டங்களை சுற்றி வரும் போது அந்த கிரகத்தினுடைய நீச்ச வீட்டில் வந்து அமர்கிறது. சந்திரனை எடுத்துக் கொண்டால் தினக்கோள் என்று சொல்வார்கள். தினசரி ஒவ்வொரு நட்சத்திரமாக பயணித்து ஒரு மாதத்தில் 12 ராசிகளையும் சுற்றி வந்து விடும் இப்படி வரும் போது சந்திரன் விருச்சிக ராசியில் இருப்பது நீச்ச அமைப்பாகும். இந்த கணக்குப்படி சந்திரன் மாதம் ஒருமுறை நீச்சமாகும். அதேபோல் சூரியன் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் துலாம் ராசியில் ஒருமாதம் நீச்சமாக இருப்பார். மேலும் சூரியன் இருக்கும் ராசியில் இருந்து சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் முன்பின்னாக செல்லும். பெரும்பாலான ஜாதகங்களில் சூரியன், புதன் இணைந்து இருக்கும். இந்த கணக்கின்படி சுக்கிரன் கன்னி ராசியில் நீசம் அடைவார். புதன், மீன ராசியில் நீசம் அடைவார். குரு 12 வருடத்திற்கு ஒருமுறை மகர ராசியில் நீசம் அடைவார். சனி 30 வருடங்களுக்கு ஒருமுறை மேஷ ராசியில் நீசம் அடைவார். செவ்வாய் கடக ராசியில் நீசம் அடைவார். இந்த கிரக சஞ்சார கணக்கின்படி கிரகங்கள் நீச்சம் அடைவதற்கு அந்தந்த கால கட்டம் வழி வகுக்கிறது. ஆகையால் பெரும் பாலான ஜாதகங்களில் ஏதாவது ஒரு கிரகம் அல்லது இரண்டு கிரகம் நீச்சம் அடைவதற்கு மிக அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது. அப்படி இந்த கிரகம் நீச்சம் அடையும் போது, அந்த நீச்ச கதி பங்கமாகி ராஜயோகத்தை தருமா என்பது தான் கேள்விக்குறி. நம்முடைய இந்து தர்ம சாஸ்திரங்கள், ஆலய ஆக சாஸ்திரங்கள், மற்றும் புராணங்களில் உள்ள விளக்கங்கள் எல்லாம். பஞ்சாங்கம், மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள வழிமுறைகள், விதி முறைகளை அனுசரித்துதான் பல விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே எந்த ஒரு விஷயத்திற்கும் பரிகாரம், விதிவிலக்கு இருக்கிறது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திர விதிகளின் படி நீச்சமான கிரகம் நீச்சம் நீங்கி ராஜயோகத்தை தருவதற்கான கிரக அமைப்புக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை கோடிட்டு காட்டியுள்ளது. அந்த விதிகளின் படி ஏதாவது ஒரு அமைப்பு இருந்தால் அந்த ஜாதகம் நீச்ச பங்க ராஜயோக வகையைச் சேரும். இந்த நீச்ச பங்க ராஜயோகம் உள்ள ஜாதகங்களில் மற்ற யோக கிரகங்களான லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, தனாதிபதி போன்ற கிரகங்களும் நல்ல பலத்துடன் அமைந்து இருந்தால் ஜாதகரை சகல மதிப்புடனும், பெருமையுடனும் வாழவைக்கும். நீச்ச பங்க ராஜயோகம் உள்ள கிரகத்தின் தசா புக்திகளில் பெரும் ஏற்றம் உண்டாகும். நீச்ச பங்கம் பெற்றுள்ள கிரகத்துடன் சேர்ந்துள்ள மற்ற கிரகங்களின் புக்திகளிலும் அனுகூலமாக யோக பலன்கள் கிடைக்கும்.நீச்ச பங்க ராஜயோக விதிகள்.நீச கிரகம் எப்போது ராஜயோகம் கொடுக்கும் ?1). நீச்சம் இருக்கும் ராசி அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெறுவது.2). நீச்ச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பது நீச்ச பங்கராஜயோகம். சில நூல் ஆசிரியர்கள் லக்னத்திற்கு கேந்திரத்தில் இருந்தாலும் நீச்ச பங்கராஜயோகம் என்று சொல்கிறார்கள்.3). நீச்ச கிரகம் பரிவர்த்தனை என்ற அமைப்பில் இருந்தால் ராஜயோகம்.4). நீச்ச கிரகம் வர் கோத்தமம் அடைந்தால் நீச்ச பங்கராஜயோகம். அதாவது ராசிகட்டத்தில் நீச்சம் அடைந்து, நவாம்ச கட்டத்திலும் நீச்சம் அடைவதாகும்.5). நீச்ச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்ப்பது நீச்ச பங்கராஜயோகம்.6). ராசிக் கட்டத்தில் நீசமாக இருக்கும் கிரகம் நவாம்ச கட்டத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் நீச்ச பங்கராஜயோகம்.7). நீச்சமடைந்த கிரகம் வக்கிரமாக இருந்தால் நீச்ச பங்கராஜயோகம்.8). நீச்ச கிரகத்துடன் ஓர் உச்ச கிரகம் கூடினால் நீச்ச பங்க ராஜயோகம்.மேலே உள்ள கிரக அமைப்பு விதிகள் காலம் காலமாக ஜோதிட நூலாசிரியர்கள், ஜோதிட வல்லுனர்களால் பின்பற்றப்பட்ட விதிமுறைகளாகும். இந்த விதிகள் அனுபவ பூர்வமாக பல ஜாதகங்களில் மிகச் சரியாக பலன்கள் தந்துள்ளது. இந்த வகையில் பல்வேறு விதமான தொழில் துறைகளில் மிகப் பிரபலமாக உள்ளவர்களின் ஜாதகங்களில் இந்த நீச்ச பங்க ராஜயோக அமைப்பு உள்ளது. மேலும் இந்த கட்டுரையில் பிரபல மானவர்களின் ஜாதகங்களை தவிர்த்து விட்டு என் அனுபவத்தில் நான் பார்த்த சாதாரண நிலையில் உள்ள ஜாதகர்கள் எப்படி மிக மிக யோகமாக ராஜயோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை அவர்களின் ஜாதக அமைப்பு எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம்.(தொடரும்)…

You may also like

Leave a Comment

one × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi