Monday, June 17, 2024
Home » மாமங்களங்கள் அருளும் சப்த மாதர்கள்

மாமங்களங்கள் அருளும் சப்த மாதர்கள்

by kannappan

ஆதி சங்கர பகவத் பாதாள் வகுத்த ஷண்மத ஸ்தாபனம் என வழங்கப் படும் சூரியன், விநாயகர், முருகன், அம்பிகை, திருமால், சிவன் ஆகிய  தெய்வங்களின் வழிபாட்டில் அம்பிகை வழிபாடு தேவியை பல ரூபங்களில் வழிபட வகுக்கப்பட்டு உள்ளது.அதில் சப்தமாதர்கள் என வழிபடப்படும் பிராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வாராஹி, வைஷ்ணவி, மாஹேந்தி, ஐந்த்ரீ என ஏழு தேவியரின் வடிவங்களின் தோற்றத்தையும், குணங்களையும், வழிபடு பலன்களையும் அறிவோம்.பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் இந்த எழுவரின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. ‘‘கன்னிமார்’’ என பண்டைய காலத்தவர்கள் இவர்களை அழைத்து வழிபட்டுள்ளனர். மார்க்கண்டேயபுராணம், வாமன புராணம், விஷ்ணு தர்மோத்திரம், பத்ரகாளி மகாத்மியம் போன்ற நூல்களிலும் இவர்களின் பெருமைகள் பரக்கப்பேசப்படுகின்றன.பாரதப் போர் நடப்பதற்கு முன் கௌரவர் சபைக்குக் கண்ணன் தூது செல்லும் சமயம், கோபத்தால் தன்  அரிய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினார். அப்போது அவரைத் துதித்து அமைதிப்படுத்திய தேவர்கள் ‘மதனப்புத்தேன்… எனும் துதியால் துதித்தனர். அதில்  இமயனும், வருணனும், எண்வகை வசுக்களும், வீரப்பெண்மையின் மெல்லியர் எழுவரும்’ என எழுச்சிமிகு இந்த கன்னியர் எழுவரும் அந்த விஸ்வரூபத்தில் தரிசனம் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.கண்ட முண்டாசுரர்கள் சாமுண்டாதேவியினால் போர்க்களத்தில் வீழ்ந்தனர். அதனால் சினமுற்ற சும்பாசுரன் தம் படைவீரர்கள் அனைவரையும் மகாசரஸ்வதியுடன் போர்புரிய ஏவினான். அச்சமயம் அசுரர்களை வதைக்கவும், தேவர்களுக்கு நன்மைகள் கிட்டச் செய்யவும் பிரம்மா, ருத்ரன் போன்றவர்களின் சக்திகள் அவரவர்கள் உலகினின்றும் அவரவர்கள் தரித்துள்ள ஆயுதங்களுடன் தோன்றினர் என தேவி பாகவதத்திலும் கூறப்பட்டுள்ளது. அப்படித் தோன்றிய எழுவரும் பண்டாசுர வதம் நிகழ நடந்த போரில் பராசக்திக்கு உதவ அவளின் திருமுக மண்டலத்தினின்று ப்ராம்ஹியும், காதுகளிலிருந்து மாஹேஸ்வரியும், கழுத்திலிருந்து கௌமாரியும், கைகளிலிருந்து வைஷ்ணவியும், பிருஷ்டபாகத்திலிருந்து வாராஹியும், ஸ்தனங்களிலிருந்து இந்திராணியும், வெளிவந்து தேவியின் உடலிலிருந்து நேராக உதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.அம்பிகையுடன் அம்பாசுரன் நேரிடையாகப் போர் புரியும்போது சப்த மாதர்களும் அவளுக்குத் துணையாய் நின்று பெரும் போர் புரிந்தனர்.அது கண்டு கோபமுற்ற அம்பாசுரன் பராசக்தியை நோக்கி நீ தனித்து நின்று என்னுடன் போர் புரிய முடியாது. சப்த மாதர்களுடன் நீ போர்புரிவது தான் உன் வீரமோ? என எள்ளி நகையாடினான். அதற்குப் பதிலளித்த தேவி, ‘‘அம்பாசுரா! உலகில் நான் ஒருவள்தான் உள்ளேன். என்னைத் தவிர வேறு சக்திகள் கிடையாது. இவர்கள் எழுவரும் என் அம்சமே. இவர்கள் ஒன்றுடன் ஐக்கியமாகி விடுவதைப் பார் என்றாள். உடன் எழுவரும் தேவியின் உடலிலேயே ஒன்றி தேவி ஒருத்தியாகவே எஞ்சி நின்றாள். எனவே, இந்த சப்த மாதாக்கள் தேவி நினைத்தால் வெளிவருவாள். தேவையில்லாதபோது அவளின் தேகத்திலேயே அடங்கியிருப்பர். இனி இவர்களைப் பற்றி அறிவோம்.பரந்து விரிந்துள்ள இந்த உலகிற்கு எல்லா மங்களங்களையும் வழங்கக்கூடிய இந்த ஏழு மாதர்களும் எட்டாவதாக மகாலட்சுமியும் அனைத்து தெய்வீக யந்திரங்களிலும் அஷ்ட தளங்களிலும் இடம் பெற்று அருள்கின்றனர்.ஸ்ரீசக்கரத்தில் முதல் ஆவரண பூஜையில் இந்த சப்தமாதர்கள் பூஜை செய்யப்படுகின்றனர். பகவதி ஸ்தோத்ரமாலையில் சப்தமாதர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கலிங்கத்துப் பரணியிலும் சப்தமாதர்களுக்கு கடவுள் வாழ்த்தில் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.சிந்து சமவெளி நாகரிகத்தில் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரையில் காணப்படும் சப்தமாதர்களின் தலையில் சிகை அலங்காரத்தைக் குறிக்கும் அடையாளங்களுடன் உள்ளன. சாளுக்கியர் வணங்கிய சப்தமாதர்களின் சிற்பங்கள் பாண்டியர் குகைக் கோயில்களில் காணப்படுகின்றன. இந்த எழுவரையும் பற்றி சிலப்பதிகாரத்திலும் கூறப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர், கோலாரில் உள்ள கோலாரம்மன், தென்காசியில் உள்ள ஒரு தனிவீதி, ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில் என பல்வேறு இடங்களிலும் எழிலாக அருளாட்சி புரிகின்றனர்.- ஜெயலட்சுமி…

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi