Friday, May 17, 2024
Home » மழை ரகசியம்!

மழை ரகசியம்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 34 (பகவத் கீதை உரை கர்ம யோகம்)நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்று சொல்வார்கள். அதில் உள்ள ‘நல்லார்’ என்பவர் தனக்கென வாழாதவர் ஆவார். பிறர் நலனிலேயே அக்கறை கொண்ட அவர், தனக்காகக்கூட மழையை வேண்டுவதில்லை; ஊராருக்காகத்தான் வேண்டுகிறார். ரிஷ்யசிருங்கர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் செல்லுமிடமெல்லாம் மழை பொழிந்து, அந்த இடத்தில் வளம் செழிக்கும். அவர் யாகங்கள் வளர்ப்பதிலும், யக்ஞங்கள் இயற்றுவதிலும் முழுமையாக ஈடுபட்டவர். தசரதன் தனக்குக் குழந்தை வரம் வேண்டி, மேற்கொண்ட `புத்ரகாமேஷ்டி’ யாகத்தை நடத்திவைத்தவர் இந்த ரிஷ்யசிருங்கர்தான். வறட்சி மிகுந்த பகுதியிலுள்ளோர் அவரைத் தங்கள் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவரும் மனமுவந்து வருவார். உடனே அங்கே மழை பொழியும், வறட்சி தீரும். இப்படி நன்மை அடையப்பெற்ற ஊர்மக்கள், அவரிடம் நன்றியைத் தெரிவிப்பார்கள். அவர், ‘அப்படியா, மழை பொழிந்ததா? நல்லது. நீங்கள் எல்லோருமே நல்லவர்கள். அதனால்தான் மழை பொழிந்திருக்கிறது. நான் வந்தது தற்செயல்தான். எல்லாப் பெருமையும், புகழும் உங்களுக்கே,’ என்று சொல்லிவிட்டு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் மென்முறுவலுடன் சென்றுவிடுவார். இந்தவகையில் இயற்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் உண்டான தொடர்பை கிருஷ்ணன் மிகச் சுருக்கமாகக் கூறுகிறார். இயற்கைதான் எத்தனை ரகசியமாகத் தன் அருளை மக்களுக்கு வாரி வழங்குகிறது! கடல் நீர் ஆவியாகிறதே, அந்த ஆவியை நம்மால் பார்க்க முடிகிறதா? அந்த ஆவி பெருகி மேகமாக மாறுவதும்தான் எத்தனை ரகசியமாக நடைபெறுகிறது! மழை பொழியும்போதுதான், அதன் மூலத்தை ஆராய முற்படுபோதுதான், கடல்நீர் ஆவியாகி மேலே போன உண்மை புரிகிறது. ஆனாலும், அப்படிப் போகும் ஆவி நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. யக்ஞம் இயற்றுபவனும் இப்படிப்பட்டவன்தான். தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன்னால் பிறர் அடையும் பயனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவன் அவன். இயற்கை, நாம் அறியாதபடி இன்னொரு அற்புதத்தையும் புரிகிறது. கடல் ஆவியைப் போலவே கண்ணுக்குத் தெரியாத கரியமிலவாயுவை (நாம் சுவாசித்து நம் நாசியிலிருந்து நீக்குவது அதாவது நாம் வெளிப்படுத்தும் நம்முடைய விஷம்!) தாவரம் பெருமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, நமக்குப் பிராணவாயுவைத் தருகிறது! நாம் ஒதுக்கி வெளியேற்றும் நம் சுவாசக் கழிவை, அது ஏற்று நம் பிராணன் நிலைக்கும்படியாக நமக்கே ஆக்ஸிஜனை வழங்குகிறது. மனிதரைவிட இந்தத் தாவரம்தான் சரியான யக்ஞத்தில் ஈடுபட்டிருக்கிறதோ!மழைவேண்டி ஒரு ஊரில் யாகம் நடத்தினார்கள். பெரியவர்களாகக் கூடி எடுத்த தீர்மானம் அது. அதற்காகப் பெரிய யாகசாலை அமைக்கப்பட்டது. வேள்விப் பொருட்கள், தீயிலிடவேண்டிய ஆஹுதிகள் என்று அந்தக் கொட்டகையில் பாதி நிரம்பிவிட்டது. வேதியர்களும் வந்து குழுமிவிட்டார்கள். யாகத்தால், மழை பொழியப்போகும் அதிசயத்தைக் காண ஊர்மக்களும் யாகசாலைக்கு வெளியே வெள்ளமாகத் திரண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு சிறுவன் மழைவரும் என்று மிகத் திண்மையாக நம்பினான். ஆமாம், அவன் கையில் ஒரு குடை இருந்தது!யாகம் ஆரம்பித்தது, ஆரவாரமாக நடந்தது, மண்டப உச்சியை நோக்கி ஓங்கி வளர்ந்தது யாகத்தீ. அதன் புகை விண்ணோக்கிச் சென்றது. தன் நிறம் ஒத்த கருமேகங்களை அழைக்க முயன்றது. இந்த கட்டத்தில், மழை பொழியுமானால் அது இரண்டு காரணங்களுக்காகத்தான் இருக்க முடியும். ஒன்று, அர்ப்பணிப்புப் பூர்வமான தொனியில் உச்சரிக்கப்பட்டிருக்கும் யாக மந்திரங்கள் – இறைவனிடம் சமர்ப்பணமாகும், சரணடையும் மனப்பக்குவமும் அதில் இணைந்திருக்கும். இரண்டாவது, அந்தப் பையன். சான்றோர்களையும், ஆன்றோர்களையும் விட, ஆயிரம் கோடி யாகங்கள் இயற்றிய ஆத்மார்த்த நம்பிக்கையைக் குடையாகக் கொண்டு வந்திருந்தானே அந்தப் பையன்! இயற்கையும், மனிதமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றுக்கு ஒன்று வாழ்வாதாரமாக இருக்க வேண்டியவை. வானில் செல்லும் மேகம் கீழே மக்களைப் பார்த்தபடிதான் செல்கிறது. இவர்களுக்கு என்னாலான நல்லதைச் செய்ய வேண்டும் என்று யோசித்தபடிதான் செல்கிறது! ‘உணவினால் உற்பத்தியாகிறான் மனிதன்,’ என்பது கிருஷ்ணனின் வாக்கு. உணவு நம்மை வளர்க்கிறது என்பதைத்தான் அவர் தெரிவிக்கிறார். நாம் உட்கொள்ளும் உணவு நமக்குள் ரத்தமாகிறது, நரம்பாகிறது, எலும்பாகிறது, தசையாகிறது, இன்றியமையாத உறுப்புகள்கொண்ட உடலாகிறது. எல்லாவற்றிற்கும் மேல், நம் உயிர் உடலில் நிலைக்கிறது. சிறு குழந்தை கட்டத்திலிருந்து முதிய நிலைக்கு நம்மை வளர்க்கிறது. அதாவது, இதுவரை ஆத்மாவை ரகசியமாகப் பாதுகாக்கிறது! சுயநலமில்லாத நற்செயல்களை மனிதன் செய்யும்போது, அவன் அச்செயல்களின் பலன்களை இறைவனுக்கே அர்ப்பணித்து விடுகிறான் என்றும் கிருஷ்ணன் சொல்கிறார். இப்படித் தன்னலம் நோக்காத பண்பு அவனுக்குள் எப்படி ஏற்படுகிறது? ஏனென்றால் இவனுடைய கவலைகள் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வதால்தான்! மனிதனுக்கு எதையெதை, எவ்வப்போது, எப்படியெப்படித் தர வேண்டும் என்று பகவானுக்குதான் தெரியும். அந்தந்த கட்டங்களில் அதது கிடைக்கும்போது, அதையெல்லாம் அப்படியே இறைப் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டியது மனிதனின் பொறுப்பு. ‘சர்வம் இறையர்ப்பணம்’ என்ற மனப்பக்குவம் வந்து விட்டால், அவ்வாறு ஏற்றுக்கொள்வது சுலபமாகி விடும். யக்ஞம் என்பதும் இதுதான் – அதாவது இறையர்ப்பணமான கர்மங்கள். கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம் (3:15)‘‘கர்மம் என்பது வேதத்திலிருந்து உதித்ததாகும். அந்த வேதம் எங்கிருந்து வந்தது? அழிவற்ற பரமாத்மாவிடமிருந்து! ஆகவே, எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மமாகிய வேதம் எப்போதும் யக்ஞத்திலேயே நிலை பெற்றிருக்கிறது என்பதை அறிக.’’எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மமாகிய வேதம் என்பதிலிருந்து, அது முழுமையாக இயற்கையைச் சார்ந்திருப்பதைக் குறிப்பிடுவதாகவே கொள்ளலாம். எங்கும் வியாபித்திருப்பது இயற்கைதானே! இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆற்றல் பரமாத்மாவுக்கும் உண்டல்லவா? இதனால்தான் ‘யக்ஞம் என்பது ஞானத்திலிருந்து பிறந்த கர்மமாகக் கருதப்பட வேண்டியது. அதாவது, இதுவே கர்ம ரூபி. இப்படி கர்மம் ஞானத்திலிருந்து பிறந்தது என்றால், அந்த ஞானம் எங்கிருந்து வந்தது? வேறெங்கு, இறைவனிடத்திலிருந்துதான்!’ என்று வலியுறுத்துகிறார் கிருஷ்ணன்.கர்மத்தை முறையாகச் செய்தால் அது யக்ஞமாகிறது. அதாவது, வாழ்க்கை என்ற கர்மத்தை ஒழுக்கநெறி தவறாமல் செய்தோமானால் அதுவே யக்ஞம். அதே சமயம், நாம் அகங்காரம்கொண்டு கர்மங்களை நிறைவேற்றுவோமானால், அந்த கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திலிருந்து புறப்பட்டவையாகவே இருக்கும். இவற்றை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? நம்மிடம் அகங்காரம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள விரும்பாத எண்ணம் நம்முள் நிலவும்வரை, அகங்காரத்துடன் நாம் வாழும் இந்த வாழ்க்கைதான் சரியானது என்று போலியாக நம்மைச் சுற்றி ஒரு திரை போட்டுக்கொள்ளும்வரை, அத்தகைய கர்மங்களை அடையாளம் தெரிந்து கொள்வது இயலாத செயல்தான். ஆனால், அந்த கர்மங்களால் நாம் பந்தத்தில் ஈடுபட வேண்டி வருமானால், துக்கத்தை, வேதனையை, பொருமலுடன் கூடிய ஏக்கத்தை நாம் உணருகிறோமென்றால், அந்த கர்மாக்கள் அஞ்ஞானத்திலிருந்து பிறந்தவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். துரதிருஷ்டவசமாக தர்மத்துக்குப் பாற்பட்ட, ஒழுக்கத்துக்குப் புறம்பான அந்த வேதனைகளை நாம் சகித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அடையாளம் கண்டுகொண்டு விட்டு விலக இயலாதவர்களாகவே இருக்கிறோம். எந்தக் கர்மங்களை இயற்றும்போது நாம் ஆனந்தம் அடைகிறோமா, அவற்றால் பிறர் மகிழ்வுறுகிறார்களா, பரிபூரண நிம்மதி கிடைக்கிறதா, அந்தக் கர்மங்கள் எல்லாம் ஞானத்திலிருந்து பிறந்தவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஏனென்றால், இப்படிப் பிறருக்கு ஆனந்தம், மகிழ்ச்சி மற்றும் பூரண நிம்மதி அளிக்கக் கூடிய கர்மங்களை நாம் அனுசரிக்கிறோம் என்றால், நமக்குள் அப்படி அனுசரிக்கும்போது அகங்காரம் என்பது எள்ளளவும் இல்லை என்றுதான் அர்த்தம்! இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதானால், அப்படி அகங்காரம் இல்லாத மனிதரோடுதான் இறைவனும் இருக்கிறார்! அதாவது எங்கும் வியாபித்திருக்கக் கூடிய பரம்பொருளுக்கு, நமக்குள் மட்டும் இடம் கொடாதிருப்பது நம்முடைய அகங்காரத்தினால்தான்! ஒரு பணக்காரர் ஒரு மகானிடம் வந்தார். ‘‘நான் நிறைய தருமங்கள் செய்திருக்கிறேன், என்னால் பலரும் பயனடைந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்னிடம் நேரடியாக, வாயார நன்றி சொல்கிறார்கள். அப்படியென்றால் என்னிடம் இறைவன் குடிகொண்டிருக்கிறார் என்றுதானே அர்த்தம்?’’ என்று கேட்டார்.‘‘அவர் எப்படி உனக்குள் குடியிருப்பார்?’’ என்று மகான் திருப்பிக் கேட்டார். ‘‘உன் மனதுக்குள்தான் ‘நான் ஒரு பெரும் பணக்காரன், நான் தருமம் செய்கிறேன், நான் எல்லோருக்கும் உதவியாக இருக்கிறேன், என்னிடமிருந்து உதவி பெறுபவர்கள் என்னைப் பாராட்டுவதும், எனக்கு நன்றி தெரிவிப்பதும் என்னை மேலும் தர்மம் செய்ய ஊக்குவிக்கிறது’ என்றெல்லாம் எத்தனையோ அகங்கார அழுக்குகளை சுமந்துகொண்டிருக்கிறாய்.இந்த பல்லி, பூரான், கரப்பான், எலி என்று அந்த மன வீட்டிற்குள் வாழத் தகுதியற்ற எத்தனையோ ஜந்துகளுக்கு வாழ்வளித்தும் கொண்டிருக்கிறாய். அவற்றால் உன்னுடைய மனமென்ற வீடு இருண்டுகிடக்கிறது. உள்ளே புக கடவுளுக்கு எங்கே வாய்ப்பளிக்கிறாய்? அவருக்கு உள்ளே கொஞ்சம்கூட இடமேயில்லையே! பிறகு எப்படி இறைவன் குடிகொள்வார் என்று நீ எதிர்பார்க்கலாம்?’’ பணக்காரர் தலைகுனிந்தார். தன்னிடம் இருக்கும் செல்வமோ, வசதிகளோ எல்லாமும் இறைவன் அளித்தவை. அவற்றைப் பிறருக்குக் கொடுக்கச் சொல்லித்தான் இறைவன் கொடுத்திருக்கிறார். அதாவது, தன் பொறுப்பைச் சிறிதளவு ஏற்றுக்கொள்ளுமாறு மனிதனைப் பணிக்கிறார். இதைப் புரிந்து கொள்ளாமல், எல்லாம் தானே சம்பாதித்தது, தனக்கு மட்டுமே உரிமையானது; ஆகவே அதிலிருந்து எடுத்து யாருக்காவது கொடுக்கும்போது அதற்கான பிரதிபலனை எதிர்பார்ப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்ற மிதர்ப்புடன் செயலாற்றுவது, கர்மம் இயற்றுவதாக ஆகாது.விருப்பு வெறுப்பற்று கர்மம் இயற்று வதாலேயே உண்மையான ஞானத்தை அடைய முடியும். அதன் மூலமாக இறைவனை நமக்குள் இருத்திக்கொள்ளமுடியும்.(கீதை இசைக்கும்)தொகுப்பு: பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

12 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi