Tuesday, May 21, 2024
Home » மணப்பெண்களின் ஃபேவரைட் போட்டோகிராபர்!

மணப்பெண்களின் ஃபேவரைட் போட்டோகிராபர்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி தீபாவளி ஸ்பெஷல் ‘‘கல்லூரியில் விஸ்காம், இதழியல் என மீடியா துறை சார்ந்த படிப்புகளைப் பயின்றாலும், புகைப்படக் கலைஞராகும் எண்ணம் துளிகூட எனக்கிருந்தது இல்லை’’ என்கிறார் ஐஸ்வர்யா ரமேஷ். இப்போது நான்கு வருடங்களாகத் திருமண புகைப்படக் கலைஞராக இருக்கும் இவர், 2018ல் ஹாப்பி சோல்ஸ் (www.hapesouls.com) என்ற நிறுவனத்தை உருவாக்கி திருமண நிகழ்ச்சிகள் முதல் அனைத்து புகைப்படங்களையும் எடுப்பதில் கைத்தேர்ந்தவராகியுள்ளார்.‘‘தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்குமளவு, இப்போது புகைப்படம் மீது ஈர்ப்பு இருந்தாலும், கல்லூரி நாட்களில் கேமரா இல்லாமல் என்னோட போட்டோகிரபி ப்ராஜெக்ட்டை முடிக்க முடியவில்லை’’ என்கிறார். ‘‘கல்லூரியின் இரண்டாம் ஆண்டுதான் அப்பா எனக்காக கேமரா ஒன்று வாங்கிக் கொடுத்தார். கேமரா வாங்கினாலும், அதில் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று பெரிய ஆர்வம் எல்லாம் எனக்கு ஏற்பட்டது இல்லை. கல்லூரிக்காக போட்டோகிராபி ப்ராஜெக்ட் முடிக்க மட்டுமே நான் அந்த கேமராவை உபயோகித்தேன். மற்றபடி அது அப்படியே அலமாரியில்தான் இருக்கும். என் செல்போனில் செல்ஃபி எடுக்கும் ஆர்வம் கூட எனக்கு இருந்தது இல்லை. ஆனால், கல்லூரி இறுதி ஆண்டில் என் சீனியர் ஒருவர், திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க என்னை உதவிக்கு அழைத்தார். அதிலிருந்து அந்த அண்ணாவோடு அவருக்கு உதவியாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். அப்படித்தான் கேமராவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன். அதில் உள்ள ஒவ்வொரு அம்சங்களை அவர் எனக்கு சொல்லிக் கொடுத்தார். எந்த ஆங்கிள் வச்சா எப்படி புகைப்படம் நல்லா வரும். லைட்டிங் எப்படி கட் செய்யணும்ன்னு எல்லாமே சொல்லிக் ெகாடுத்தார். நானும் அவர் கூப்பிடும் நிகழ்ச்சிக்கு எல்லாம் சென்று வந்தேன். சில மாதங்களில், அவர் வெளிநாட்டில் படிக்கச் சென்றுவிட்டார். அவர் போன பிறகு, அவருக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாரும் என்னை புகைப்படம் எடுக்க அழைக்க ஆரம்பித்தனர். அப்படித்தான் என்னுடைய கேமரா காதல் பயணம் துவங்கியது’’ என்றார். ‘‘நான் இதுநாள் வரை என்னுடைய நண்பர்கள் மூலம் வந்த நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு தான் புகைப்படம் எடுத்தேன். ஒரு முறை ஒரு குடும்ப நிகழ்ச்சிக்குப் புகைப்படங்கள் எடுக்க வாய்ப்பு வந்தது. அதன் பிறகு அவர்களின் அனைத்து உறவினர்கள் நிகழ்ச்சிக்கும் நான் போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். சொல்லப்போனால் அவங்க குடும்ப போட்டோகிராபராகவே மாறிட்டேன்’’ என்றவர் இந்த துறையில் தான் சந்திக்க சிக்கல்கள் பற்றி விவரித்தார்.‘‘பெண் புகைப்படக் கலைஞராக இருப்பதில் பெரிய; சிக்கல் நேரமும் தூரமும்தான். நிகழ்ச்சி முடிய இரவு அதிக நேரமாகும். சில சமயம் தூரமாக இருக்கும். எவ்வளவு தூரமாக இருந்தாலும் பகல் நேரம் என்றால் பயமிருக்காது. அதுவே இரவு என்றால் வீட்டில் கொஞ்சம் பயப்படத்தானே செய்வாங்க. நான் பத்திரமாக வீடு திரும்பும் வரை வீட்டில் எல்லாரும் வாசலையே பார்த்துக் கொண்டு இருப்பாங்க. முன்பு கேமராக்கள் அதிக எடையுடன் இருக்கும். அதை அனைவராலும் சுலபமாகக் கையாள முடியாது. ஆனால் இப்போது குறைந்த எடையுள்ள கேமராக்கள் அதிகம் வந்துவிட்டன. இது எங்களுக்கு ப்ளஸ்தான். மேலும், பெண்கள் புகைப்படம் எடுக்கும் போது மணப்பெண்ணுடன் நல்ல புரிதலுடன், அவர்களின் விருப்பப்படி கூச்சமில்லாமல் புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்க முடியும். திருமண நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வகையான சடங்குகள் நடக்கும். அதை முன்கூட்டியே அங்கிருக்கும் பெரியவர்களிடம் கேட்டுத்; தெரிந்துகொள்வேன். இதனால் முக்கிய சடங்குகளைத் தவறவிடாமல் புகைப்படம் எடுக்க வசதியாய் இருக்கும். இப்படி அந்த குடும்பத்துடன் ஆரம்பம் முதல் கடைசி வரை பயணிப்பதால், ஒவ்வொரு நிகழ்ச்சியும் என் குடும்ப விழாவைப் போன்றுதான் இருக்கும்’’ என்றார்.இன்று மணமகளின் ஃபேவரைட் போட்டோகிராபராக இருக்கும் ஐஸ்வர்யா, “திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் மணமக்களுக்கானது மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்குமே இது ஒரு முக்கிய நிகழ்வுதான். அந்த கொண்டாட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்ச்சியுடன் இருப்பார்கள். பல வருடம் கழித்துச் சந்திக்கும் உறவுகள் அங்குக் குழந்தைகளாக மாறி அன்பை வெளிப்படுத்திக்கொள்வார்கள். அந்த தருணங்களை ஆவணப்படுத்தும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்காகவே இந்த கேமரா மீது அளவற்ற ஆர்வம் உண்டாகியது” என்கிறார். ;‘‘என்னுடைய வழிகாட்டியாக இருப்பது என் சீனியர் மற்றும் ஜூனியர் பெண்கள்தான். என்னுடைய சீனியர்களில் பலர் திருமணமாகி குழந்தைகள் என்று வந்த பிறகும், இந்தியா முழுவதும் பயணித்து புகைப்படங்கள் எடுத்துவருகின்றனர். அதே போல, இப்போது என் ஜூனியர் மாணவிகள் பலரும் வீடியோ கிராபியும் செய்து வருகின்றனர். இவர்களின் ஆர்வம்தான் எனக்கு ஒருவிதத்தில் உந்துதலாக இருக்கிறது. பெண் புகைப்படக் கலைஞர்களின் வளர்ச்சிக்கு சமூக வலைத்தளமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் மூலம் புகைப்படம், அலங்காரம், மேக்-அப், சமையல்… போன்ற பல தொழில்களில் பெண்கள் சுலபமாக தங்கள் திறமையை வெளிப்படுத்த முடிகிறது. புகைப்படக் கலைஞர்களுக்கான மதிப்பும் இப்போது அதிகரித்துள்ளது. என்னுடைய திறமைக்கான பாராட்டும் கிடைக்கிறது. அதனால், இது நாள் வரை நான் எந்தவொரு கசப்பான அனுபவத்தையும் சந்திக்கவில்லை. பெண்களுக்கு மிகவும் ஏற்ற துறைன்னுதான் சொல்வேன்” என்கிறார்.தன் எதிர்கால திட்டமாக, பெண் போட்டோ கிராபர்கள் மட்டுமே கொண்ட ஒரு குழுவை உருவாக்கவேண்டும் என்ற கனவுடன் உழைத்து வருகிறார். அதன் முதல் படியாக விரைவில் நடக்கவிருக்கும் தன் திருமணத்திற்கு மூன்று பெண் புகைப்படக் கலைஞர்களை புக் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின், இந்தியா முழுவதும் பல திருமண நிகழ்ச்சிகளுக்குச் சென்று, அவர்களின் தனித்துவமான கலாச்சாரங்களையெல்லாம் புகைப்படமாக்கும் திட்டத்தையும் செயல்படுத்த இருக்கிறார் ஐஸ்வர்யா.தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்படங்கள்: ஜி.சிவக்குமார்

You may also like

Leave a Comment

twenty − seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi