வாஷிங்டன்: ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் டேவிட் வார்னர், புற்றுநோய் பாதிப்பால் காலமானார். கடந்த 1997ம் ஆண்டு வெளியான ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் டேவிட் வார்னர் (80), கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 18 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூத்த நடிகரான டேவிட் வார்னர் காலமானார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி திரைத்துறையை சார்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த பேட்டியில், ‘கடந்த 18 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வந்தார். அதனால் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை கூட சந்திக்கவில்லை. மிகவும் இரக்கமுள்ள மனிதர்; அவரது மறைவால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம்’ என்று கூறினர். டேவிட் வார்னருக்கு மனைவி லிசா போவர்மேன் மற்றும் மகன் லூக் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….