Tuesday, May 14, 2024
Home » புரட்டாசி மாதத்தின் தனிச்சிறப்புகளும், புகழும்!

புரட்டாசி மாதத்தின் தனிச்சிறப்புகளும், புகழும்!

by kannappan
Published: Last Updated on

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்“நவக்கிரகங்களுக்கு நாயகன்” – எனப் போற்றப்படுபவரும், மறைந்த நம் முன்னோர்களுக்கும், நமக்கும் இடையே தெய்வீகத் தொடர்பைப் பாதுகாத்து வருவதால், பித்ருகாரகர் என்ற ஈடிணையற்று பெருமை படைத்துவரும், கடமை, தெய்வ பக்தி, ஒழுக்கம் ஆகிய நற்குணங்களை மக்களுக்கு அளித்தருள்வதால், “ஆத்மகாரகர்” எனப் பூஜிக்கப்படுபவருமான சூரியன், அவரது பகை வீடும் கல்விக்கு அதிபதியுமான புதனின் ராசியுமான கன்னியில் சஞ்சரிக்கும் காலத்தையே புரட்டாசி மாதம் எனவும், “பாத்ரபத மாதம்” – எனவும் ஜோதிடக்கலை விவரித்துள்ளது. ஆவணி 26 ம் தேதியன்று ஆரம்பித்த, மஹாளய பட்சம் எனும் மகத்தான 15 நாட்களாகிய பித்ருகாலம் புரட்டாசி 8 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முடிவடையும், மஹாளய அமாவாசை எனும் புண்ணிய தினமும் இந்தப் புரட்டாசி மாதத்தில்தான் நிகழ்கிறது. நம்மைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, திருமணமும் செய்துவைத்து, நமக்கு வாழ்வளித்த நம் தாய் – தந்தையர் உள்ளிட்ட முன்னோர்களை 15 நாட்கள் பூஜித்து, அவர்களின் ஆசிபெற்று, அவரவர்களது உலகங்களுக்கு நாம் வழியனுப்பி வைக்கும் மகா புண்ணிய தினமான “மஹாளய அமாவாசை”யும் இந்தக் கன்னி மாதத்தில்தான் அமைகிறது! வேறெந்த மாதத்திற்கும் இல்லாத பெருமை, இப்புரட்டாசி மாதத்தையே சேரும். புரட்டாசி மாதத்தை “பித்ருக்காலம்” எனப் போற்றிப் புகழ்கிறது, பண்டைய ஜோதிட நூலான, “ஜோதிட அலங்காரம்”. இதனையே, “அரசியல் ஞானி” எனப் போற்றப்படும் சாணக்கியரும், தனது அற்புத நூலான “அர்த்த சாஸ்த்திர”த்தில் கூறியுள்ளார். மேலும், திருமலை – திருப்பதி திருவேங்கட வனின் திருவுள்ளம் உகந்த மாதமும் இந்தப் புரட்டாசி மாதமாகும். புரட்டாசி மாதப் பிறப்பன்று அதிகாலையிலேயே வீதியில், “கோவிந்தா… கோவிந்தா…!!” எனும் திவ்ய நாம சப்தம் நம் ஒவ்வொருவரின் செவிப்பறைகளிலும், காலங்காலமாக ஒலிப்பது கண்கூடு!! இத்தகைய தெய்வீகப் பெருமை பெற்ற புரட்டாசி மாதத்தின் புண்ணிய தினங்களை நினைவுபடுத்திக்கொண்டு, ராசிபலன்களையும் “ஷோடஸ ஸதவர்க்கம்” எனும் துல்லிய கணித முறையின் மூலம் கணித்து, எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய “தினகரன்” வாசக அன்பர்களுக்கு வழங்குவதில்  மனநிறைவைப் பெறுகிறோம்! புரட்டாசி மாதப் புண்ணிய தினங்கள்! புரட்டாசி 5, 22-9-2022 – வியாழக்கிழமை: ஸன்யஸ்த மஹாளயம் – மஹாளயபட்சத்தில் வரும் மிக, மிக முக்கிய தினம். துறவியருக்கு, துறவியாக இருந்து, மரித்திருந்தால், அவர்கள் துறவறம் ஏற்பதற்கு முன் பிறந்துள்ள பிள்ளைகள் திதி-பூஜைகளைச் செய்ய வேண்டிய புண்ணிய தினம். பல தலைமுறைகளுக்கு புண்ணிய பலன் கிட்டும். புரட்டாசி 7, 24-9-2022 – சனிக்கிழமை: ஸஸ்திரஹத மஹாளயம் – குடும்பத்தில் எவராவது விபத்துக்களினாலோ அல்லது ஆயுதங்களினாலோ மரணமடைந்தவர்களுக்கு அவர்களது புதல்வர்கள் திதி-பூஜைகள் செய்ய வேண்டிய புண்ணிய தினம். அந்த ஜீவன் நற்கதி அடைவதனால், குலம் தழைக்கும்.புரட்டாசி 8, 25-9-2022 – ஞாயிற்றுக்கிழமை: மஹாளய அமாவசை எனும் 15 புனித நாட்கள், காலஞ்சென்ற நமது மூதாதையர்கள் – எம தர்மராஜர், சூரியன் ஆகியோரின் அனுமதி பெற்று, அவரது கிரணங்கள் மூலம் தங்க விமானங்களில் பயணித்து, மஹாளய பட்சம் எனும் 15 நாட்கள் நம்முடன் தங்கியிருந்து, அந்தப் பதினைந்து தினங்களும், நாம் பக்தி – சிரத்தையுடன் இயற்றும் பித்ரு பூஜைகளை ஏற்று, நம்மை ஆசீர்வதித்து, மஹாளய அமாவாசையன்று, தங்க மயமான விமானத்தில், அதே சூரிய கிரணகங்களின் மூலம் அவரவர்களது பித்ரு லோகங்களுக்கு நாம் வழியனுப்பி வைக்கும் புண்ணிய தினம்தான் இன்று! இந்த 15 நாட்களும் நமது இல்லங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சிறு விஷயங்களுக்குக்கூட சண்டை போடக்கூடாது. மனத்தில் தூய்மையான எண்ணங்கள் மட்டுமே இருக்க வேண்டும். வசதியும், சக்தியும் உள்ளவர்கள் இந்த 15 நாட்களுமே தினமும் தர்ப்பணம் முதலிய பித்ரு பூஜைகளைச் செய்ய வேண்டும். வசதியும், சக்தியுமற்றவர்கள், தங்களது தாய் – தந்தையர் இறந்த திதி தினத்தன்று மட்டுமாவது செய்ய வேண்டும். பித்ருக்களைக் குறித்து, தினமும் எள் கலந்து 5 சாத உருண்டைகள் காகத்திற்கு வைத்து வரவேண்டும். இதுவே நம் முன்னோர்களுக்கு அமுதமாக மாறி, அவர்களது பசிப்பிணியைப் போக்கும். அவரவர்களது சக்திக்கு ஏற்ப, ஏழைகளுக்கும், பசுக்களுக்கும் அன்னமளிக்க வேண்டும். இவற்றின் புண்ணிய பலன்கள் பல தலைமுறைகளுக்குத் துணை நிற்கும். பித்ருக்கள் ஆசியின் சக்தி விவரிப்பதற்கு அரியது!  இந்த 15 மஹாளய பட்ச பித்ருக்கள் பூஜையின் சக்தியினால், குடும்பங்களில் ஏற்படும் கடன் பிரச்னைகள், வறுமை, நோய்கள், உறவினர்களுக்குள்ளாக நிலவும் ஒற்றுமைக் குறைவு, எதிரிகளின் தொல்லை, விவாகம் தடைபடுதல் ஆகிய துன்பங்கள் நீங்கும். அனுபவத்தில ஏற்பட்டுவரும் உண்மை இது!! புனிதத் திருத்தலங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, கிருஷ்ணா, பிரயாகைகள், தாமிரபரணி, கர்ணப்ரயாகை, ருத்ரப்ரயாகை போன்ற புண்ணிய நதித் தீரங்கள் ஆகியவற்றில் மஹாளய புண்ணிய நாட்களைக் கழிப்பதும், பித்ரு தர்ப்பணங்கள் செய்வதும் கற்பனைகள் அனைத்தையும் மீறிய நற்பலன்களைத் தரும். “இகத்திலும், பரத்திலும் தனது நன்மைகளை விரும்புபவர்கள் மஹாளய புண்ணிய காலத்தைத் தவறவிடமாட்டான்…” என்கிறது,  “தர்ம சாஸ்திரம்” எனும் ஒப்புயர்வற்ற நூல்!! நமக்கு உதவியவர்களுக்காகவும்….!மஹாளய காலப் பித்ரு பூஜைகளுக்கு மற்றுமோர் விசேஷ சிறப்பும் உள்ளது. நாம் துன்பப்படும்போது, நம்மீது கருணையினாலும், அன்பினாலும் எவ்விதக் கைம்மாறும் எதிர்பாராது, நமக்கு உதவியவர்களுக்கும்கூட, மஹாளய தர்ப்பணம் செய்து, நமது நன்றியைச் செலுத்துகிறோம். இவர்களை “காருணிக பித்ருக்கள்” எனப் புராதன நூல்கள் அழைக்கின்றன! “காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது…” எனப் போற்றிப் புகழ்ந்துள்ளார் திருக்குறள் எனும் ஒப்பற்ற நூலை நமக்குத் தந்தருளிய வள்ளுவப் பெருந்தகை!!புரட்டாசி 3 (20-9-2022) சுக்கிர ஜெயந்தி புரட்டாசி 5 (22-9-2022) ஸன்யஸ்த மஹாளயம். குடும்பத்தில் எவராவது துறவியாக இருந்து, மரித்திருந்தால், அவர்கள் துறவறம் ஏற்பதற்கு முன் பிறந்துள்ள பிள்ளைகள் திதி, பூஜைகளைச் செய்ய வேண்டிய புண்ணிய தினம். பல தலைமுறைகளுக்கு புண்ணிய பலன் கிட்டும். புரட்டாசி 7 (24-9-2022) – ஸஸ்திரஹத மஹாளயம் – விபத்துக்களினாலோ அல்லது ஆயுதங்களினாலோ மரணமடைந்தவர்களுக்கு அவர்களது புதல்வர்கள், திதி பூஜைகள் செய்யவேண்டிய புண்ணிய தினம். அந்த ஜீவன் நற்கதியடைவதால் குலம் தழைக்கும்; கேதாரேஸ்வர விரதம்; மாத சிவராத்திரி விரதம். இந்நாளில் மஞ்சளிலோ அல்லது சந்தனத்திலோ பன்னீர் தெளித்து, “சிவலிங்கமாக” பிடித்து வைத்து, வில்வ இலைகொண்டு அர்ச்சித்தும், லிங்காஷ்டம் படித்தால், அஷ்ட லக்ஷ்மியின் ஐஸ்வர்யங்களும் நித்யவாசம் புரிவர் உங்கள் இல்லங்களில்! இதனால் சகல பாவங்களும் நீங்கிவிடுவதால், திருமணத் தடங்கல் நீங்கி, சுப-நிகழ்ச்சிகளால் வீட்டில் சந்தோஷமும் அதனால் மனமகிழ்ச்சியும், மனநிறைவும் உண்டாவதை அனுபவத்தில் காணலாம். புரட்டாசி 8 (25-9-2022)  இன்று மஹாளய அமாவாசை: மஹாளய பட்சம் 15 புனித நாட்கள், நமது காலஞ்சென்ற மூதாதையர்கள், தர்மராஜன், சூரியன் ஆகியோரின் அனுமதிபெற்று, அவரது கிரணங்களின் மூலம் தங்க விமானங்களில் வந்து மஹாளயபட்சம் எனும் 15 நாட்கள் நம்முடன் தங்கி இருந்து, நாம் பக்தியுடன் செய்யும் 15 நாட்கள் பித்ரு பூஜைகளை ஏற்று, நம்மை ஆசீர்வதித்து, மஹாயளய அமாவாசையன்று தங்க மயமான விமானத்தில் அதே சூரியகிரணங்களின் மூலம் அவரவர்களின் பித்ரு உலகங்களுக்கு நாம் வழியனுப்பி வைக்கும் புண்ணிய தினமும் ஆகும்.நவராத்திரி எனும் ஒன்பது புண்ணிய நாட்கள்!புரட்டாசி 9, 26-9-2022 – திங்கட்கிழமை: இன்றிலிருந்து, 9 புனித தினங்கள், அம்பிகை ஸ்ரீபார்வதி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் நமது வீடுகளுக்கு எழுந்தருளி நம்முடன் தங்கியிருந்து, நமது துன்பங்ளைப் போக்கி, நல்வாழ்வளிக்கும் புண்ணிய தினங்களாகும். இம்மூன்று தேவியரும் நமக்கு மனிதப் பிறவியை அளித்துள்ள அன்னையர் ஆவர்!! நவ (9) ராத்திரி எனும் இந்தப் புண்ணிய தினங்களில் நம் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். புஷ்பங்கள், மாவிலைத் தோரணங்கள் ஆகியவற்றால் அலங்கரித்து,  மூன்று தேவியரையும் பூஜிக்க வேண்டும். தினமும் பால் பழம், பாயாசம், கற்கண்டு, முந்திரிப் பருப்பு, திராட்சை, பாதாம் பருப்பு என ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சக்தியும், வசதியும் இருப்பின், ஏழைப் பெண் ஒருவருக்கு ஸ்நானத்திற்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், புதிய ஆடைகளும் கொடுத்தால் மகத்தான புண்ணியம் சேரும். குடும்பத்தில் கடன் தொல்லைகள், வறுமை நீங்கி சுபிட்சம் ஏற்படும். வியாதிகள் விலகி, ஆரோக்கியம் உண்டாகும். விவாக முயற்சிகளுக்கு ஏற்படும் தடங்கல்கள் விலகி, நல்ல வரன் அமையும். பாவங்கள் நீங்கும்; அனுபவத்தில் காணலாம்!! கோ பூஜை மற்றும் பசுக்களுக்கு அகத்திக்கீரை அல்லது ஒரு கைப்பிடி “பசும்புல்” கொடுத்தால்கூட, ஏதும் முடியாவிடினும், பசுவின் கழுத்துப் பகுதியை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தாலே விசேஷ பலனை அடையலாம்புரட்டாசி 14 (1-10-2022) சஷ்டி விரதம்: ஒவ்வொரு மாதமும், வளர்பிறை தேய்பிறையிலும் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், எடுத்த காரியங்கள் அனைத்திலும் ஜெயம், அஷ்ட ஐஸ்வர்யங்களும், நோய்-நொடியில்லாத, நல்ல ஆரோக்கியத்துடன்கூடிய நீண்ட ஆயுள் கிடைப்பது உறுதி. புரட்டாசி 17, 4-10-2022 – செவ்வாய்க்கிழமை: சரஸ்வதி பூஜை – “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு…”- என்பது ஆன்றோர் வாக்கு.  அத்தகைய அழியாக் கல்விச் செல்வத்தைத் தந்தருளும் ஸ்ரீசரஸ்வதி தேவியைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். வீரத்தின் சின்னமான ஆயுதங்களைப் பூஜிக்க வேண்டிய தினமும் இன்றுதான்!!புரட்டாசி 18, 5-10-2022 – புதன்கிழமை: மத்வ ஜெயந்தி – “த்வைதம்” எனும் சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீமத்வர் எனும் ஆச்சார்ய மகான் அவதரித்த புண்ணிய தினம்.’ விஜய தசமி; சிரவண விரதம் – ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவருக்கு உகந்த புண்ணிய தினம். அன்றைய தினம் உபவாசமிருந்து, ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவரை துளசி இலையால் அர்ச்சிக்க, வாழ்வில் மகத்தான உயரத்தை அடைந்து, வளமாகவும் நலமாகவும்  வாழ்க்கைத் துணையுடன் அந்நியோன்ய ஒருமித்த தம்பதியராய் பரிமளிப்பர்.புரட்டாசி 22 (9-10-2022) கௌமதி ஜாகா விரதம்புரட்டாசி 25 (12-10-2022) சந்திரோதய கௌரி விரதம்: இவ்விரதத்தைக் கடைப்பிடித்தால், வரன்கள் ஏதும் அமையாமல் – களத்திரஸ்தானம் பாதிக்கப்பட்டோருக்கும், நெடுநாளாக திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னியருக்கும், தடைகள் அனைத்தும் விலகி, மனத்திற்கேற்ற மணாளன் அமைவார்; ஆயுள் விருத்தியடையும். மனமகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் தீர்க்க சுமங்கலியாக மனமொத்த தம்பதிகளாக வாழ்வர்.புரட்டாசி 30 (17-10-2022) ஈஸ்வாரஷ்டமி: சகோதரர்களுக்கிடையே நிலவி வந்த மனக்கசப்பு நீங்கி, ஈருடல் ஓருயிராக மாறி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஸ்ரீராமன் – லக்ஷ்மனனைப் போலவும், தன் சகோதரனுக்காக தன் இன்னுயிரைத் தரத் துணியும் வண்ணம், பாசம் அதிகரிக்கும்; இவ்வுலக சுகங்களை அனுபவித்து, மேலுலக நித்ய இன்பத்தை நுகர்வர் என்பது திண்ணம். திருவேங்கடத்து இன்னமுதனின் கருணையினால், ஒவ்வொரு ராசியினருக்கும் இந்தப் புரட்டாசி மாதம் அளிக்கவுள்ள பலா – பலன்களை இப்போது பார்ப்போம். எந்த ராசியினருக்குப் பரிகாரங்கள் அவசியமோ, அவற்றையும், புராதன நூல்களிலிருந்து எடுத்துக் கூறியிருக்கிறோம். செய்வதற்கு எளிதானவை; பலன்களோ அளவிடற்கரியவை!!…

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi