Sunday, May 12, 2024
Home » பிள்ளையார்பட்டி. முக்குறுணி கொழுக்கட்டை

பிள்ளையார்பட்டி. முக்குறுணி கொழுக்கட்டை

by kannappan

எந்த கோயில்? என்ன பிரசாதம்?“ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது வினைகள் அனைத்தையும் விலக்குபவர் விநாயகர். அப்படி வேண்டும் பக்தர்களின் அனைத்து வினைகளையும் தீர்க்கும் பிள்ளையார்பட்டி அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் சிறப்புகளை இங்கு காணலாம்.பிள்ளையார்பட்டி தல வரலாறு சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் ஒரு “குடைவரை” கோயிலாகும். இந்த வகை கோயில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் “பல்லவ” மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோயில் என்று ஆய்வுகள் கூறுகின்றன.இக்கோயிலின் மூலவரான விநாயகர் “கற்பக விநாயகர்” என அழைக்கப்படுகிறார். தென்னிந்தியாவில் “அர்ஜுன வன திருத்தலங்கள்” நான்கு இருக்கிறது. அதில் தமிழ் நாட்டில் மூன்றும், ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் “பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலும்” ஒன்று.இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன. இரண்டு ராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில்.இக்கோயிலில் நான்கு முறையாகத் திருப்பணி நடந்திருப்பதாகத் தெரிகின்றது. முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும் திருக்கோயிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற குடைவரைக் கோயிலாகும்.இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பகுதி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்களுக்கு இடையே தென்வடல் ஓடிய இரட்டைப் பகுதி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறத்தில் தென்புறம் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் மூலவர் கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார். அதற்கு மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர். உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள்.  அந்த மேல்புறத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய மாடம் குடையப் பெற்றுள்ளது.அதன் நடுவிலே கடைந்த பெரிய மகாலிங்கம் உள்ளது. இந்த மூர்த்திதான் திருவீசர். இவர் திருவீங்கைக்குடி மகாதேவர். அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்.விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பிள்ளையார் ஞானத்தின் நாயகன். கூர்ந்துகவனிக்க அவரின் முகமே பிரணவமாம் “ஓம்”.இங்குள்ள விநாயகரின் சிறப்பு:1. இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.3. அங்குச பாசங்கள் இல்லாமல்விளங்குவது.4. வயிறு, ஆசனத்தில் படியாமல் கால்கள் மடித்திருக்க அமர்ந்திர்ப்பது.5. வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம்குருகியும் காணப்படுவது.6. வலக்கரத்தில் சிவலிங்கத்தைத்தாங்கியருள்வது.விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேஸ்வரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும்.9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மகா அபிஷேகமும் நடத்தப்படும்.ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஞ்ஞூரு வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிராகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும், உமாதேவி உடனுறை சந்திரசேகரப் பெருமானும் திருவீதி உலா வருவார்.பிள்ளையார், மருதங்குடி நாயனார் சந்நதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழிதிருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி உடனுறை நடராசப் பெருமான் திருவீதி உலா வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி, கொடியேற்றம் நடக்கும்.10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும், உச்சிகால பூசையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும், இரவு ஐம்பெருங்கடவுளரும், தங்க, வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவர்.  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டிக்கொள்ளலாம். விநாயகருக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.முருகனுக்கு தான் ஆறு படை வீடுகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன.  பிள்ளையார்பட்டி கோயிலின் சிறப்பாக, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய “கொழுக்கட்டை” விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும், பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது.கல்விகளில் மேன்மை பெற, வறுமை நிலை மாற, குழந்தை பாக்கியம் பெறுவதற்காக பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து படைக்கப்படும். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.முக்குறுணி கொழுக்கட்டை செய்முறை18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து கட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவர்.பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து மூலவருக்கு உச்சிகால பூஜையில் படையல் செய்வர். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர் நகரத்தார், ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து உண்ணக்கொடுப்பார்கள்.பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.  கோயில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.ந.பரணிகுமார்…

You may also like

Leave a Comment

ten − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi