Sunday, June 16, 2024
Home » பரந்தாமன் கற்பித்த பாடம்!

பரந்தாமன் கற்பித்த பாடம்!

by kannappan
Published: Last Updated on

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-62‘‘அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!’’- என்பது தாயுமானவரின் தமிழ்.‘அன்பர் பணி’ எனத் தனியாக அடையாளமிடப்பட்டு ஒன்று இருக்கிறதா? நாம் எப்பணியை ஏற்றாலும் அது நம் அன்பர்க்குச் செய்யும் பணி என ஆக்கிக்கொண்டு விட வேண்டும். அப்போதுதான் சம்பளத்தையே எதிர்பார்த்துச் செய்யும் சாகசங்கள் அதில் இருக்காது. ஊதியத்திற்காகச் செய்யும் ஒப்பனைகள் அதில் கலக்காது.பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னாள் என்பது மகாகவி பாரதியாரின் மணிவாக்கு. செய்தல்  உன் கடனே! – அறம் செய்தல் உன்  கடனே! அதில்எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே! – என்பதுதானே பகவத் கீதையின் பாடுபொருள்.‘கர்ம யோகம்’ நாம் செய்யும் வேலையை எளிதாக்குகிறது. நம் சிந்தையைத் தெளிவாக்குகிறது. நம் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்குகிறது. மொத்தத்தில் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. விரைவாக வளரும் இந்த விஞ்ஞான உலகில் போட்டிகள் நிறைந்த இந்த பூமியில் படித்துப் பட்டம் பல பெற்றாலும் உரியபணி உடனே கிடைத்து விடுவதில்லை.‘இந்த வேலைவாய்ப்பு என்னும் கழுதைக்குஎத்தனை பட்டக் காகிதங்களைக் கொடுத்தாலும் பசி தீர்வதில்லை’- என புதுமையாகக் குரல் கொடுக்கிறான் இன்றைய புதுக் கவிதையாளன்! உரியபணி கிடைக்கவில்லை! ஏதோ ஒரு தொழிலில் ஒட்டிக் கொள்வோம் வாழ்ந்தாக வேண்டுமே என பணி ஒன்றில் ஈடுபடுகிறோம். கொஞ்ச நாட்களுக்குத்தானே எனத் தொழிலில் ஒட்டியும் ஒட்டாமல் பட்டும் படாமலும் இருக்கலாமா!கூடாது!அப்போது கிடைத்த வேடத்திற்கு ஏற்ப நாடகத்தில் நடிக்க வேண்டுமே தவிர வரவில்லையே எனக்குரிய வாய்ப்பு எனப் புலம்பிக் கொண்டிருந்தால் ரசிகர்களின் கல்லடிதானே காணிக்கையாகக் கிடைக்கும்! கூம்பும் பருவத்தில் கொக்கைப் போலத் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்பவன்தான் உறுமீன் வரும்பொழுது கூரிய அலகால் குத்தமுடியும் !எனவே, ஏற்றுக்கொண்ட பணியில் இதயப் பூர்வமாக ஈடுபட வேண்டும்.நாம் செய்யும் தொழிலே நம் கரங்களுக்கு விலங்காகவும், மனத்திற்குப் பாரமாகவும் ஆகிவிட நாமே அனுமதிக்கலாமா?வையகம் காக்கும் தொழிலானாலும், வாழைப் பழக்கடை வியாபாரமானாலும் கர்மயோகமாக அதைக் கருதுபவன்தான் நிம்மதியும், நிறைவும் வாய்க்கப் பெறுகிறான். உலகைப் படைத்தும், காத்தும், அழித்தும் தீராத விளையாட்டு நடத்தி வரும் அந்தத் திருமாலுக்குத் தேர் ஓட்டுகிற பணிதான் கிடைத்தது. ‘அர்ஜூனன்போல் தேருக்குள் அமர்ந்து கொள்ள முடியவில்லையே’ என அவர் அங்கலாய்க்கவில்லை.மாறாக அவர் என்ன செய்தார் என்பதை மகாபாரதக் கதை விவரிக்கிறது. குருக்ஷேத்திர யுத்தகளம்! கதிரவன் மேற்கு வானில் சாய்ந்த நேரம். எல்லோரும் பாசறை திரும்பினர். அர்ஜூனன் போர்க் கவசங்களைக் களைத்தான். சந்தியாவந்தனக் கடமைகளை முடித்துக் கிருஷ்ணன் எங்கே என அங்குமிங்கும் பார்த்தான். பாசறையில் பரந்தாமனைக் காணவில்லையே என்று தேடினான்.கடைசியில் கிருஷ்ணர் குதிரை லாயத்தில் இருந்ததைப் பார்த்தான். அர்ஜூனன் கண்ட காட்சி அவனை ஆச்சர்யமும்பட வைத்தது.கிருஷ்ணர் ஓட்டிவந்த குதிரைகளைத் தேரிலிருந்து அவிழ்த்து தண்ணீர் காட்டி, தடவிக் கொடுத்து உணவளித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த விஜயன் ‘என்ன கண்ணா இது’ இந்த வேலையைச் செய்ய எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நீதான் இவற்றையெல்லாம் செய்யவேண்டுமா?’ என்றான்.கிருஷ்ணர் சிரித்தபடியே ‘அர்ஜூனா! நான் இப்போது தேரோட்டி. என் கடமையினின்று நான் சிறிதும் வழுவ மாட்டேன். ஏற்றுக்கொண்ட வேலையை ஒழுங்காகச் செய்வதுதான் கர்மயோகம் என்பது. தேரோட்டி அவன் குதிரைகளைக் குளிப்பாட்டி, உணவு தரவேண்டும். அப்போதுதான் குதிரைகளுக்கும் தன் எஜமானனிடம் விசுவாசம் ஏற்படும்!’’ என்றார்.பார்த்தசாரதியாக இருந்து கிருஷ்ணர் பாடம் நடத்திய பாங்கே அலாதியாக இருக்கிறதல்லவா!‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்கிற பொருள் புலப்படும் முறையில்தான் தமிழில் தொழில் என்ற சொல்லே அமைந்துள்ளது.எப்படி என்கிறீர்கள் ?தொழத்தக்கது. அதனால் தொழில் என்கிறது தமிழ்மொழி !வழிபாடாகத் தொழிலைத் தொடர்பவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான். மனதில் நிறைவடைகிறான்.இந்தக் கல்லைச் சுமக்க வேண்டியிருக்கிறதே! எல்லாம் என் தலையெழுத்து என நினைப்பவன் மனம் சோர்வடைகிறான். இந்தக் கல்லைச் சுமந்துதான் ஆகவேண்டும்! அப்போதுதான் நெல் கிடைக்கும் என நினைப்பவன் சற்றே ஆறுதலடைகிறான். இந்த ஆலயம் அமைவதற்கு நானும் தொண்டு செய்ய ஆண்டவனின் அனுக்கிரகம் கிடைத்ததே என்று நினைத்த வண்ணம் கல்லைச் சுமப்பவனுக்கு அது பாரமாகத் தோன்றவில்லை. அபாரமாக அமைந்து விடுகிறது! இதுதான் கர்மயோகத்தின் சூட்சுமம்! பகவத்கீதை காட்டும் பரிவான பாதை !செய்யும் தொழிலைத் தெய்வமாக  மதித்து வினையாற்றுபவர்கள் தான் விழி எதிர்காணும் தெய்வங்கள் என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறார் மகாகவி பாரதியார்.இரும்பைக்  காய்ச்சி  உருக்கிடுவீரே !யந்திரங்கள் வகுத்திடுவீரே !கரும்பைச்  சாறு பிழிந்திடுவீரே !கடலில் மூழ்கிநன்  முத்தெடுப்பீரே !அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்ஆயிரம் தொழில் செய்திடுவீரே !தேட்டம் இன்றி விழி எதிர் காணும்தெய்வமாக விளங்குவீர் நீரே !‘போர் புரிய வந்து விட்டாய்! பிறகு ஏன் புலம்புகின்றாய்?’ என்று வில்விஜயனுக்கு விழி திறந்து வைத்து பரந்தாமன் கற்பித்த பாடம்தானே பகவத்கீதை !இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி, கடமை அமைந்து விடுகிறது. எதிர்பார்க்கும் தொழில் எல்லோர்க்கும் கிடைப்பதில்லை. அதனால் ஏற்றுக் கொண்ட தொழிலை இதய பூர்வமாகச் செய்வதுதான் வாழ்வாங்கு வாழும் வழிமுறை. கவியரசர் கண்ணதாசன் அற்புதமாக உரைக்கின்றார் !ஆரம்பத்தில் பிறப்பும் உன்கையில் இல்லை! – என்றும்அடுத்தடுத்த நடப்பும் உன்கையில் இல்லை!பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்? – அதில்பயணம் நடத்திவிடு! மறைந்திடும் பாவம்.திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்…

You may also like

Leave a Comment

sixteen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi