Sunday, June 16, 2024
Home » பத்து பொருத்தம் பார்த்தும் பிரச்னை வருவது ஏன்?

பத்து பொருத்தம் பார்த்தும் பிரச்னை வருவது ஏன்?

by kannappan
Published: Last Updated on

சென்ற இதழ் தொடர்ச்சிராசிப் பொருத்தம் பார்ப்பது போலவே லக்னப் பொருத்தத்தினையும் அவசியம் பார்க்க வேண்டும். பெண்ணின் ஜென்ம லக்னமானது ஆணின் ஜென்ம லக்னத்தோடு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும். அடுத்ததாக மூன்றாம் பாவகம் என்பது காம ஸ்தானம் அல்லது வீரிய ஸ்தானம் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது. இதுவும் இருவரின் ஜாதகங்களிலும் நன்றாக அமைய வேண்டும். இதனைத் தொடர்ந்து ஐந்தாம் பாவகம் என்று அழைக்கப்படும் புத்திர ஸ்தானம் என்பதும் பொருத்தம் பார்க்கும்போது முக்கியத்துவம் பெறுகிறது. இருவரின் ஜாதகங்களிலும் புத்திர பாக்யம் என்பது நன்றாக உள்ளதா அல்லது வேறு ஏதேனும் தோஷம் உள்ளதா என்பதையும் ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு பொருத்த வேண்டும். இவ்வாறு ஜாதக கட்டங்களையும், அதில் உள்ள கிரகங்களின் பலத்தினையும் ஆராய்ந்து பார்த்துத்தான் திருமணத்தை நடத்த வேண்டும். அதனை விடுத்து வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து முடிவு செய்தல் கூடாது. நம்மிடையே பரவலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தவறான நம்பிக்கைகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டியது அவசியம் ஆகிறது. ஆண் அல்லது பெண் பிறந்த நட்சத்திரத்தின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வேண்டாம் என்று ஒதுக்குவது முற்றிலும் தவறானது. உதாரணத்திற்கு மூலம் என்றால் மாமனாருக்கு ஆகாது, ஆயில்யம் என்றால் மாமியாருக்கு ஆகாது, கேட்டை என்றால் மூத்த மைத்துனனுக்கு ஆகாது, விசாகம் என்றால் இளைய மைத்துனனுக்கு ஆகாது, பூராடம் நூலாடாது என்றெல்லாம் சொல்வது முற்றிலும் மூட நம்பிக்கையே. இதற்கு எந்தவொரு ஜோதிட நூல்களிலும் ஆதாரம் கிடையாது. உறுதியாகச் சொல்ல வேண்டும் என்றால் 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே ஆகும். அவரவருடைய ஜென்ம நட்சத்திரமும் ராசியும் தனிப்பட்ட முறையில் அவர்களது குணாதிசயத்தை நிர்ணயம் செய்யுமே தவிர, மற்றொருவருடைய வாழ்வினை தீர்மானம் செய்யாது. ஒருவருடைய ஜாதகம் எப்பொழுதும் மற்றவரை பாதிக்காது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் மருமகளாக வந்தால் மாமனார் இறந்துவிடுவார் என்று சொல்லப்படும் கருத்து நூற்றுக்கு நூறு தவறானது. மாமனாரின் விதி முடியவேண்டும் என்று அவரது ஜாதகத்தில் இருந்தால்தான் அவ்வாறு நடக்குமே தவிர வருகின்ற மருமகளின் ஜாதகத்தைக் கொண்டு மாமனாரின் ஆயுளை தீர்மானம் செய்ய முடியாது.பூர்வ ஜென்ம பந்தம்:  பூர்வ ஜென்ம பந்தம் என்று சொல்வார்கள். தம்பதியருக்குள் ஜென்ம ஜென்மமாய் தொடரும் உறவு இது என்பதை ஒரு சில தம்பதியரின் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ள இயலும். அதற்கான விதி இதோ…ஆணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் பாவக அதிபதி எந்த ராசியில் அமர்ந்திருக்கிறாரோ அது அந்தப் பெண்ணின் ஜென்ம ராசியாகவும், அதே போல பெண்ணின் ஜென்ம லக்னத்திற்கு ஏழாம் பாவக அதிபதி எந்த ராசியில் அமர்ந்திருக்கிறாரோ அது அந்த ஆணின் ஜென்ம ராசியாகவும் அமைந்தால் அதனை பூர்வ ஜென்ம பந்தம் என்று சொல்கிறது பழங்கால ஜோதிட நூல்.உதாரணத்திற்கு கும்ப லக்னத்தில் பிறந்த கணவனின் ஜாதகத்தில் மீன ராசியில் சூரியன் இருந்து அது அந்த மனைவியின் ஜனன ராசியாகவும், விருச்சிக லக்னத்தில் பிறந்த மனைவியின் ஜாதகத்தில் மிதுனத்தில் சுக்கிரன் இருந்து அது அந்த கணவனின் ஜனன ராசியாகவும் அமைந்திருந்தால் அங்கே பூர்வ ஜென்ம பந்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று பொருள். இதுபோன்ற அம்சங்கள் எல்லா தம்பதியருக்கும் அமைந்துவிடாது என்றாலும் அதில் உள்ள அடிப்படை கருத்துக்களை புரிந்துகொண்டு அதுபோன்று ஓரளவிற்கேனும் பொருந்துகிற ஜாதகங்களை தேர்ந்தெடுத்துத் தரவேண்டியது ஜோதிடரின் கடமையாகிறது.எங்கே தவறு செய்கிறோம்?வரன் தேடும்போது குறிப்பாக பெற்றோர் செய்யும் தவறு எதுவெனில் இவர்களாக தங்களை ஜோதிடராக எண்ணிக்கொண்டு வந்திருக்கும் வரனின் ஜாதகத்தைப் பார்ப்பதே ஆகும். ஜாதகத்தை கையில் எடுக்கும்போதே ஜோதிடரிடம் சென்று பொருந்தும் நட்சத்திரம், பொருந்தாத நட்சத்திரம் ஆகியவற்றை எழுதிக்கொடுங்கள் என்று அவரைத் தொல்லை செய்து எழுதி வாங்கிக் கொள்வது முழுமுதல் தவறு ஆகும். இதனால் பல நல்ல பலமுள்ள ஜாதகங்களையும் இவர்களாக பொருந்தாது என்று நினைத்துக்கொண்டு ஒதுக்கி விடுகிறார்கள். தானாக வந்த ஸ்ரீதேவியை இவர்களாக வேண்டாம் என்று ஒதுக்குவதற்கு சமானமாக இது ஆகிவிடுகிறது. அதேபோல ஏழுல ராகு, எட்டுல கேது என்று பெற்றோரே ஜாதகத்தைப் பார்த்து தோஷம் என்று தாங்களாக நினைத்துக் கொண்டு அந்த ஜாதகத்தை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். ஐந்தில் சனியும் கேதுவும் இணைந்திருக்கிறது, இந்த ஜாதகருக்கு புத்ர தோஷம் என்று தாமாக எண்ணிக் கொள்கிறார்கள். இது போன்ற விஷயங்களை பெற்றோர்கள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தனது மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும்போது பயோடேட்டாவினை மட்டுமே பெற்றோர் பார்க்க வேண்டும். அவர்களது பாரம்பரியம் நமது பாரம்பரியத்தோடு ஒத்துப்போகுமா என்பதை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அந்த வரனின் ஜாதகத்தை பெற்றோர் பார்க்கக் கூடாது. அதனை குடும்ப ஜோதிடரின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். உடம்பு சரியில்லை என்றால் தானாக மருத்துவம் பார்த்துக் கொள்வது என்பது எத்தனை தவறான விஷயமோ அதைப் போன்று பெற்றோரும் தாமாக ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பதும் தவறானதே. மருத்துவர்தான் உரிய பரிசோதனைகளின் மூலம் உங்கள் உடம்பிற்கான வைத்தியம் இதுவென்று சொல்ல வேண்டும். அதேபோல எந்த ஜாதகம் பொருந்தும், எது பொருந்தாது என்பதை ஜோதிடர்தான் சொல்ல வேண்டுமே தவிர பெற்றோராக முடிவு செய்வது என்பது முற்றிலும் தவறானது. ஜோதிடர்தான் பொருந்தும் நட்சத்திரம், பொருந்தாத நட்சத்திரத்தின் பெயரை எழுதிக் கொடுத்தார் என்று ஜோதிடரின் மேல் பழி சொல்வோரும் உண்டு. இவர்கள் ஒரேயடியாக இருபது, முப்பது ஜாதகங்களைக் கொண்டுபோய் ஜோதிடரிடம் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொல்லும்போது அவர் பொறுமை இழந்து இவ்வாறு செய்துவிடுகிறார். பொருத்தம் பார்க்கும் முறையை பெற்றோர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். முதலில் வயது, கல்வித்தகுதி, வேலை, நிறம், உயரம், குடும்பப் பாரம்பரியம் முதலான விஷயங்கள் பொருந்தியுள்ளதா, மணமகன் அல்லது மணமகளின் போட்டோவில் உள்ள உருவம் பிடித்திருக்கிறதா, தொலைபேசியில் பேசும்போது அவர்கள் பேசும் பாணி பிடித்திருக்கிறதா போன்றவற்றை ஆராய்ந்து அதன் பின்னர் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஜாதகங்களை பரிமாற்றம் செய்துகொண்டு அதனை எடுத்துச் சென்று ஜோதிடரிடம் காண்பித்தால் அவர் பொருத்தம் பார்த்துச் சொல்வதற்கு ஏதுவாக இருக்கும். மாறாக முப்பது ஜாதகங்களை ஒன்றாக எடுத்துச் சென்று அவர் முன் குவிக்கும்போது அவர் பொறுமையிழந்து நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று இதுபோன்ற பட்டியலை எழுதித் தந்துவிடுகிறார்.இருமனம் இணையும் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற சொற்றொடர் நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மனித முயற்சியால் மட்டும் திருமணம் என்பது நடந்துவிடாது. இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்ற கவியரசரின் பாடல் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். யார்யார்க்கு எப்படி வாழ்க்கைத்துணை அமைய வேண்டும் என்ற விதி உள்ளதோ, அப்படித்தான் அமைகிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். மூட நம்பிக்கைகளை விடுத்து இறைவனின்பால் முழுமையான நம்பிக்கையை வையுங்கள். எந்த வரன் அமைந்தாலும் அது நம் மகன் அல்லது மகளின் ஜாதக அமைப்பின்படியே அமைகிறது, அது நலமாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையை இறைவனின் திருவடியில் சமர்ப்பியுங்கள். இறைவனின் திருவருளால் மணமக்களின் வாழ்க்கை  இனிமையாக அமையும்….

You may also like

Leave a Comment

twenty − twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi