Sunday, June 16, 2024
Home » நிறைவான செல்வம் அருளும் லட்சுமி குபேர பூஜை :வீட்டில் நீங்களே செய்ய எளிய முறை…

நிறைவான செல்வம் அருளும் லட்சுமி குபேர பூஜை :வீட்டில் நீங்களே செய்ய எளிய முறை…

by kannappan

ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் ஒருவர் செய்யவேண்டிய மிக சிறந்த பூஜை குபேர லட்சுமி பூஜையே. இதன் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் ஒருசேர பெறமுடியும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை  5 மணி முதல் இரவு 8  மணி வரை குபேர காலமாகும். இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தைப்  பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள்  தீரும். செல்வம் பெருகும்.  ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது. வட இந்தியாவில், தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.இந்த பூஜையை செய்வது மிக மிக எளிது. ஆனால் இதனால் கிடைக்கப்பெறும் பலன் மிக மிக பெரிது. வாருங்கள் இந்த பூஜையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும். சாதாரணமாக வீட்டில்  நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு  முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர்  நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு  மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும். பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியதுதான். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை  பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரங்கள் (அ) “குபேராய  நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் (அ) பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை, லட்சுமி மற்றும்  குபேரனுக்கு உகந்த மலர். பின் நைவைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள்  வைக்கப்பட வேண்டும். அதனை பூஜை முடிந்தவுடன் எடுத்து நமது பெட்டகங்களில் வைத்துவிடலாம். இந்த பூஜையை செய்ய இரண்டே இரண்டு நிபந்தனைகள் மட்டுமே உள்ளது. ஒன்று நாம் சரியான நாளை தேர்ந்தெடுப்பது அவசியம். இதை ஒன்பது வாரமோ அல்லது ஒன்பது மாதமோ தொடர்ந்து ஒரே நாளில் செய்யவேண்டும். அதாவது ஒன்பது வாரம் செய்ய நினைப்போர் வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யலாம். அதுபோல் ஒன்பது மாதம் செய்ய நினைப்போர் மாதா மாதம் பௌர்ணமி நாட்களில் செய்யலாம். இதை ஒருவரே தொடர்ந்து செய்ய வேண்டும். அவருக்கு உடல்நல குறைவு ஏற்படும் பட்சத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம். இதை செய்ய ஒரே மாதிரியான 81 நாணயங்கள் தேவை. உங்களுடைய வசதிக்கு ஏற்ப ஒரு ருபாய் நாணயமோ 10 ருபாய் நாணயமோ எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் 81 நாணயங்களும் ஒரே மதிப்பிலான நாணயங்களாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ருபாய் என்றால், 81 நாணயங்களும் ஒரு ருபாய் நாணயமாக தான் இருக்க வேண்டும். நீங்கள் பூஜை செய்ய தேர்ந்தெடுத்துள்ள நாளில் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றவேண்டும். அடுத்து இந்த பூஜை தடைபடாமல் இருக்க மகாகணபதியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பிறகு அந்த நாளின் நல்ல நேரத்தில் ஒரு பலகையை எடுத்துக்கொண்டு அதில் கீழே தரப்பட்டுள்ள படத்தில் இருப்பது போல் கட்டங்களை வரைந்து எண்களையும் எழுதுங்கள். – கட்டத்தை குங்குமத்தால் வரைவதும், எண்களை அரிசிமாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “ஸ்ரீ’ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இந்த கோலத்தின் பெயர் குபேர எந்திர கோலம் ஆகும். இதை வரைந்த பிறகு கட்டங்களின் உள்ளே எண்களுக்கு பக்கத்தில் ஒரு நாணயம் வையுங்கள். நாணயம் எண்களை மறைப்பது போல் வைக்கக்கூடாது. ஆகையால் அதற்கு ஏற்றால் போல் கட்டங்களை முன்பே வரைந்துகொள்ளுங்கள். நாணயம் மகாலட்சுமியின் அடையாளம் ஆகையால் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இப்போது பூஜை செய்ய சிறிது உதிரிப்பூக்களை எடுத்துக்கொள்ளுங்கள். கட்டங்கள் வரையப்பட்டுள்ள பலகையை பூஜை அறையில் வைத்து பின்பு அதற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றுங்கள். சக்கரை கலந்த பாலோ அல்லது பால் பாயசமோ இறைவனுக்கு படையுங்கள். பிறகு வீட்டில் செல்வம் சேரவேண்டும் என்று மகாலட்சுமியிடம் மனதார வேண்டிக்கொண்டு கீழே உள்ளே மந்திரத்தை கூறுங்கள். மகாலட்சுமியே போற்றி! மங்கள லட்சுமியே போற்றி! தீபலட்சுமியே போற்றி! திருமகள் தாயே போற்றி! அன்னலட்சுமியே போற்றி! கிருக லட்சுமியே போற்றி! நாரண லட்சுமியே போற்றி! நாயகி லட்சுமியே போற்றி! ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி! இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே நீங்கள் எடுத்துவைத்திருக்கும் உதிரி பூவை குபேர எந்திரத்தில் உள்ளே ஒவ்வொரு கட்டத்திலும் போடுங்கள். அப்படியே தொடர்ந்து கீழே உள்ளே மந்திரத்தை கூறுங்கள். வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி! குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி! செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி! உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி! பிறகு குபேரனை நன்கு வேண்டிக்கொண்டு தீபாராதனை காட்டுங்கள். அவ்வளவுதான் உங்களுடைய பூஜை சிறப்பாக முடிந்தது. அன்று மாலை உங்களால் முடிந்த மங்கள பொருட்களை சுமங்கலிகளுக்கு கொடுங்கள். பின்பு பெருமாள் கோயிலிற்கு சென்று தாயாரை தரிசியுங்கள். அடுத்தநாள், குபேர எந்திரத்தில் வைத்த நாணயங்களை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டு ஒரு ஈர துணி கொண்டு எந்திரம் வரையப்பட்டுள்ள பலகையை துடைத்து விடுங்கள். பிறகு இதே போன்று அடுத்த வாரமோ அடுத்த மாதமோ தொடர்ந்து செய்யுங்கள். ஒன்பது வார அல்லது மாத முடிவில் உங்களிடம் 81 நாணயங்கள் சேர்ந்திருக்கும். அதை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று அல்லது பௌர்ணமி அன்று சிவன் கோயிலில் உள்ள உண்டியலில் போட்டுவிடுங்கள். சிவனே குபேரனுக்கு செல்வம் அனைத்தையும் அளித்தவர். அதனாலேயே சிவன் கோயில் உண்டியலில் போடவேண்டும். பின்பு மங்கள பொருட்களை வைத்து சுமங்கலிகளுக்கு கொடுங்கள். அப்போது மகாலட்சுமியே ஏதாவது ஒரு சுமங்கலி ரூபத்தில் வந்து பொருட்களை பெற்று உங்களை ஆசிர்வதிப்பாள் என்பது நம்பிக்கை. தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்னை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில்  பூரட்டாதி  நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும்.    …

You may also like

Leave a Comment

twenty + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi