Monday, May 20, 2024
Home » நான் கதை சொல்லி!

நான் கதை சொல்லி!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி வித்யா தன்ராஜ்‘‘பெரும்பாலும் குழந்தைகளோடு பயணிப்பதே எனக்குப் பிடிக்கும். குழந்தைகள் உலகம் கற்பனைகள் நிறைந்தது. அதில் யானைகள் பறக்கும்.. சுவர் பேசும்.. பட்டாம் பூச்சி பாடும்.. டெட்டி பியர் ஒளிந்து விளையாடும்.. நமது குழந்தைப் பருவத்தில் கதை சொல்லி நமக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களே மனதில் நிற்பார்கள். இங்கு நானும் கதை சொல்லியானதே ஒரு கதை’’ எனப் பேசத் தொடங்கிய வித்யா குழந்தைகள் கூடி இருக்கும் இடத்தை நோக்கி கதை சொல்ல தினம் தினம் நகர்கிறார். குழந்தைகளுக்காக S4 Stories; எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.‘‘எனது சொந்த ஊர் சேலம். நான் குழந்தையாக இருந்தபோது அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி குழந்தைகள்னு பயணித்தவள். அவர்களில் நான் பெரியவள்தான் என்பதால் அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என்னுடையதாக இருந்தது. எங்களைப் பார்க்க தாய் வழி பாட்டி நாமக்கல்லில் இருந்து அடிக்கடி வருவார். பாட்டி வந்ததுமே மொட்டை மாடியில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு வானத்தைப் பார்த்தபடி அருகே படுத்து கதை கேட்கத் தொடங்குவேன். தினம் ஒரு கதை பாட்டியிடம் இருந்து எனக்கு வரும். அதில் ந்ந்ந்இறுதியாய் ஒரு நல்ல செய்தி இருக்கும்.பள்ளி இறுதிப் படிப்பை முடித்து பி.இ. எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் இஞ்சினியரிங்கை திருச்செங்கோடில் முடித்து, டெக் மகிந்திராவில் வேலை கிடைத்தது. ஹைதராபாத், பெங்களூரு எனப் பயணித்தேன். மன நிறைவின்றி, எனக்கான தளத்தை மனம் தேடத் தொடங்கியபோது எனக்குத் திருமணம் ஆனது. கணவரின் பணி நிமித்தம் சிங்கப்பூர், லண்டன் எனப் பயணித்தேன். லண்டனில் வசித்தபோது என் மகள் மூன்று மாதக் குழந்தை. பிறந்த குழந்தைகளை அங்கே மிகச் சுலபமாய் வெளியில் எடுத்துக்கொண்டு வருவார்கள். லண்டன் குளிரில் குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருப்பது சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை.; சிறுவயதில் என் பாட்டி எனக்குச் சொன்ன கதைகள் நினைவில் வர, என் மகளும் அது போன்ற கதைகளைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கை குழந்தைகளுக்கான சில்ட்ரன் சென்டர்களை லண்டனில் அரசாங்கமே நடத்துகிறது. குழந்தைகள் பள்ளி செல்லும்வரை பெற்றோர் சென்டருக்கு அழைத்துச் செல்லலாம். குழந்தை பெயரை பதிவு செய்ததுமே, எல்லா வாரமும் டைம் டேபிள் தருவார்கள். நமக்கு பிடித்த டைமுக்கு குழந்தைகளை அங்கே கொண்டு செல்லலாம். பள்ளி செல்லும் முன் குழந்தைக்கு என்னவெல்லாம் தேவை என்பதை அரசாங்கமே சிறப்பாக திட்டமிட்டு அங்கு செய்கிறார்கள். அந்த அளவுக்கு குழந்தைகள் மீது அரசாங்கம் அக்கறை செலுத்துகிறார்கள். வீடு அருகே இருந்த சென்டரில் பதிவு செய்து, என் மகளை தினம் அங்கு தூக்கிச் செல்வேன். குழந்தைகளை அங்கு வயதின் அடிப்படையில் பிரித்திருப்பார்கள். அது ஒரு நவம்பர் மாதக் குளிர் காலம். ஒரு வயதுக் குழந்தைகள் வரை ஸ்டோரி டெல்லிங் நிகழ்ச்சி அன்று இருந்தது. இன்று மார்க் வருகிறார். குழந்தைகளுக்கு கதை சொல்லப் போகிறார் எனச் சொன்னார்கள். அனைத்து அம்மாக்களும் மார்க் வருகிறார்.. மார்க் வருகிறார்.. என மகிழ்ச்சி காட்டினர். எனக்கோ யார் அந்த மார்க் என ஆர்வம் பொங்கியது. 85 வயது மதிக்கத்தக்க வயதான மனிதர் கையில் கிட்டாரோடு அப்போது உள்ளே நுழைந்தார். நான் அவரின் வயதான தோற்றத்தைப் பார்த்து, குட்டிக் குழந்தைகளுக்கு இவர் என்ன கதை சொல்லப் போகிறார் என ஆச்சரியத்தோடு அவரையே பார்த்தேன். காரணம் எல்லாமே ஒரு வயதுக்கு உட்பட்ட தவழுகிற.. உட்கார முயற்சிக்கும் குழந்தைகள். என் மகள் 6 மாதக் குழந்தை.மார்க்கை அண்ணாந்து மட்டுமே குழந்தைகளால் பார்க்க முடியும். அத்தனை உயரம் அவர். ஒரு சில குழந்தைகளுக்கு ஏற்கனவே மார்க் பரிட்சயம் என்பதால் அவரைப் பார்த்ததுமே முகத்தில் அப்படியொரு புன்னகை. குழந்தைகள் அண்ணாந்து மார்க்கையே பார்க்க, அவர் கிட்டார் எடுத்து வாசிக்க ஆரம்பித்ததும் குதித்து குதித்து மகிழ்ச்சியை குழந்தைகள் வெளிப்படுத்தினர். ஒரு குழந்தையும் அழவில்லை. சில குழந்தைகள் வாய் திறந்த நிலையில் ஆ வென அவரையே கண் எடுக்காமல் பார்த்தனர். எனக்கு ரொம்பவே வியப்பாக இருந்தது. கதையினை அவர் பாட்டாய் படித்து படங்களை காட்டத் தொடங்கினார். குழந்தைகளுக்கு எண்ணத் தெரியாது என்றாலும், படங்களில் கரடி, பூனை எத்தனை இருக்கு என எண்ணிக் காட்டுவார்.தன் குரலை விலங்குகள் குரலில் மாற்றி மாற்றி பேசி வாய்ஸ் மாடுலேசன் செய்து கேரக்டராகவே மாறிவிடுவார். குழந்தைகளோ சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள். கதைகளுக்கு நடுவே ஃப்ரிட்ஜ் உள்ளிருந்து வொய்ய்ய்ய்ய்னு சத்தம் வந்தது… கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு அலாரம் அடித்தது.. என சத்தங்களையும் எழுப்புவார். அவரின் சத்தங்களை குழந்தைகள் உன்னிப்பாய் கவனிப்பார்கள்.அவரையே பின்பற்றி கதைப் புத்தகங்களை என் மகளுக்கு அறிமுகப்படுத்தினேன். தினமும் வாய்ஸ் மாடுலேசனோடு வாசித்துக் காட்டத் தொடங்க… கொஞ்ச நாளில் அவளே புத்தகத்தைக் கொண்டு வந்து என்னை படித்துக் காட்ட கேட்கத் தொடங்கினாள். கதையில் முடியும் வார்த்தையை 6 மாதத்திலே சொல்லத் தொடங்கினாள். புத்தகம் படிக்கும் ஆர்வம் அவளுக்குள் வரத் தொடங்கியது. அடுத்த அடுத்த கதைப் புத்தகத்தை நோக்கி அவளை நகர்த்தினேன். என் வீட்டு அலமாரியில் புத்தகங்களின் எண்ணிக்கை கூடியது. மார்க்கை பார்ப்பதுபோல் என்னையும் எனது மகள் மிகவும் ஆர்வமாய் பார்க்கத் தொடங்கினாள். அது எனக்கான ஸ்பார்க்காக அமைந்தது.எல்லாக் குழந்தைகளுக்காகவும் கதை சொல்வதை ஒரு புரொஃபஷனாக ஏன் செய்யக் கூடாது எனத் தோன்ற, மார்க்கை சந்தித்து ஆலோசனை கேட்டேன். ‘எல்லோராலும் எல்லாமும் முடியும்’ என்கிற நம்பிக்கையை மார்க் எனக்குள் விதைத்தார். தொடர்ந்து குழந்தைகள் குறித்து ஆழமான வாசிப்பைத் தொடங்கி, டிப்ளமோ இன் இயர்லி சைல்ட் கேர் படிப்பையும் முடித்து, தொடர்ந்து எம்.பி.ஏ. படித்தேன்.இதற்கிடையில் எங்கள் குழந்தை இந்தியாவில்தான் வளர வேண்டும் என முடிவெடுத்து தமிழகம் திரும்பினோம். அவளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்ப அழைத்து வரும்போது அருகில் இருக்கும் குழந்தைகளுக்கும் கதை சொல்லத் தொடங்கினேன். குழந்தைகள் என்னோடு ரொம்பவே ஒட்டிக் கொண்டார்கள். என்னை விரும்பிப் பார்க்கத் தொடங்கினார்கள். குழந்தைகளை கூட்டாகச் சேர்த்து கதைகளைச் சொல்லத் தொடங்கினேன். வேடமிட்டும் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தேன். பப்பட் ஷோ, ஆர்ட் அண்ட் க்ராப்ட் வேலைகளையும் கதைகளின் கேரக்டரில் புகுத்தினேன். அடுத்து என்னுடைய S4 Stories சென்டர் உதயமானது. இன்டர் நேஷனல் ஸ்டோரி டெல்லர் ஜீவா ரகுநாதன் அறிமுகம் கிடைக்க, குழந்தைகளுக்குள் குழந்தையாக கதை சொல்லும் அவரின் வித்தை கண்டு வியந்து, அவரிடத்திலும் ஆலோசனைகளைப் பெற்றேன். எப்படி கதைகளை பிரேம் பண்ணலாம், குழந்தைகளுக்கு இன்னும் எப்படி சிறப்பாகக் கதைகளைச் சொல்லலாம் என்பதைக் கற்றுத் தந்தார். அவரின் வாய்ஸ் மாடுலேஷனும் என்னை ஈர்க்க, நானும் குழந்தைகளிடத்தில் வாய்ஸ் மாடுலேசனை முக்கிய டூலாகப் பயன்படுத்தி வருகிறேன்.இந்தத் துறையில் 11 ஆண்டுகள் கடந்தாச்சு. சமூக அக்கறையை வளர்த்தெடுக்கும் நோக்கில் ப்ளாஸ்டிக் பொல்யூஷன், நேச்சர் லவ்வர், பாலியல் வன்கொடுமை என சமூகம் சார்ந்த விசயங்களை கதை வடிவில் குழந்தைகளுக்கு சொல்வதோடு, தியேட்டர் பயிற்சி, கதை எழுதப் பயிற்சி தருகிறேன். கதைகளை புத்தக வடிவில் கொண்டு வரவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. குழந்தைகள் இருக்கும் இடத்திற்கு யார் அழைத்தாலும் கிளம்பிவிடுவேன். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், புற்றுநோய் மருத்துவமனையில் இருக்கும் கேன்சர் பாதிப்புக் குழந்தைகளைத் தேடிச் சென்று கதை சொல்கிறேன்.குழந்தைகள் புத்தகம் வாசிப்பது மிகவும் முக்கியம். தானாக புத்தகத்தை எடுத்து குழந்தை வாசிக்கும் வரை தினம் ஒரு கதை புத்தகத்தை பொறுமையாக வாசித்து காட்டுங்கள். இயற்கையோடு அவர்களை விளையாட விடுங்கள். 6 மாதத்தில் தொடங்கி ஆறு வயதுவரை என் மகளுக்கு புத்தகத்தை வாசித்துக் காட்டினேன். மூன்றாவது படிக்கும் என் மகளுக்கு இன்று ஒரு ஹாரிபாட்டர் புத்தகத்தை கையில் கொடுத்தால் மதியத்திற்குள் பார்வையாலே வேகமாகப் படித்து முடித்து விடுவாள்.பொறியியலில் நான் கோல்ட் மெடலிஸ்ட். என்றாலும் எனக்கான தளம் இது இல்லை என்று உணர்ந்தபோது திருமணம் முடிந்திருந்தது. இங்கு படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. குழந்தைகள் ஆர்வம் காட்டும் விசயத்தில் அவர்களை வளர்த்தெடுங்கள்.செய்தி: மகேஸ்வரி நாகராஜன்படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

You may also like

Leave a Comment

17 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi