Tuesday, April 30, 2024
Home » நாகதோஷங்கள் நீக்குவார் முருகநாதேஸ்வரர்

நாகதோஷங்கள் நீக்குவார் முருகநாதேஸ்வரர்

by kannappan

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்த தலமென்ற நம்பிக்கையும் உள்ளது. முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவவழிபாடு செய்த பெருமைக்கு உரியது. ஸ்ரீமங்களாம்பிகையுடன் ஸ்ரீமாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு,  இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு.முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சந்நதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம்; இடப்புறத்தில் ஞானதீர்த்தம்; வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சந்நதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாகத் தொன்நம்பிக்கை உள்ளது. சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்த இடமான கூப்பிடு விநாயகர் கோவில் அவினாசிக்கு அருகில் அமைந்துள்ளது.இக்கோயிலில் வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழ தேவன், விக்கிரம சோழதேவன், வீர நஞ்சையராய உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேஸ்வரர் எனப் பெயர்பெற்றார் என்ற மரபு வரலாறும் வழக்கத்தில் உள்ளது. அகத்தியர், மார்க்கண்டேயர் துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். இதற்கு மாதவிவனம் என்றும் பெயர். துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவிமர (குருக்கத்தியை) த்தை இங்குக் கொண்டு வந்தார் என்பர். சுந்தரர் இவ்வழியே செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம். சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சந்நதிகள். மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியுள்ளது.வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய (வேடுபறி நடந்த இடம்) ‘கூப்பிட்டுவிநாயகர்’ அவிநாசிக்குப் போகும் வழியில் 1 கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார். கோயில் நுழைவு வாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நதி உள்ளது. இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்புறம் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டு (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும் மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன. கோயில் பிராகாரத்தில் பைரவர் சந்நதியும் நவகிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நதி சிறப்பானது. பிரம்மதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்கள் உள்ளன. தலமரம் = வில்வம். இத்தலம் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய தலம். சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவதையும், பல நாட்கள் இங்கேயே தங்கியிருப்பதையும் இன்றும் காணலாம். இங்குள்ள பிரமதாண்டவ நடராஜர் சந்நதி விசேஷமானது. இக்கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதி. இது விசேஷமானது. சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். (சுயம்புமூர்த்தி என்று சொல்லப்படுகிறது) கோயிலின் முன் மண்டபம் உள்ளது. எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, இம்மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயச் சுவற்றில் நிருதி விநாயகர், கேது ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. இத்தலத்திற்குத் தலபுராணம் உள்ளது. செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடியது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி மாதத்தில் 11 நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது.தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் சுந்தரமூர்த்தி நாயனார். அவருடைய தெள்ளுதமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து செல்வங்களை அபகரித்துச் சென்றார். இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்தின் கோயிலுக்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது தல புராணம். சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது. லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை,  தட்சிணாமூர்த்தி, சூரிய  சந்திரர், பைரவர், நவகிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம். கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீமாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. நாகதோஷங்கள் நீங்கி வாழ்வில் நல்லன அனைத்தும் நிறைவேற, நீங்களும் ஒருமுறை திருமுருகன்பூண்டி இறைவனைத் தரிசித்து திருவருள் பெற்று வாருங்களேன்! திருப்பூர் ரயில்நிலையத்துக்கு வடக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவை செல்லும் எல்லா பேருந்துகளும் திருமுருகன்பூண்டியில் நிற்கும்.…

You may also like

Leave a Comment

ten + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi