Sunday, June 16, 2024
Home » தூது சென்ற தூயவன்

தூது சென்ற தூயவன்

by kannappan

திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று திருப்பாடகம். ‘பாடு’ என்றால் ‘மிகப் பெரிய’; ‘அகம்’ என்றால் ‘கோயில்.’ எனவே இது திருப்பாடகம், பெரிய கோயில் என்றானது. கிருஷ்ணன் பாண்டவர் தூதனாக துரியோதனன் சபைக்குச் சென்றபோது துரியோதனனின் சதியால் தன் ஆசனத்துடன் பாதாளத்தில் விழ, அப்போது கண்ணன் எடுத்த விஸ்வரூப திருக்கோலமே இக்கோயில் மூலவர் உருவம்.  இந்த விஸ்வரூப கோலத்தை ஜனமேஜெய மகாராஜாவுக்கு கிருஷ்ணன் காட்டியருளி நிலைகொண்டது இக்கோயிலில்தான். கருவறை விமானம் பத்ரவிமானம் என்றும் வேதகோடி விமானம் என்றும் போற்றப்படுகிறது. இன்னார் தூதன் என நின்றான் என்றும், குடை மன்னரிடை நடந்த தூதர் என்றும் திருமங்கையாழ்வார் இக்கண்ணனைப் போற்றிப் பாடியுள்ளார். கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் பிரமாண்டமான வடிவத்தில் என்றும் மாறா புன்னகை திருமுகத்தில் தவழ, கிழக்கு நோக்கி பெருமாள் சேவை சாதிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே இத்தனை உயர (25அடி) பெருமாள் அருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மணவாளமாமுனிகள் இங்கு எழுந்தருளி பெருமாளை மங்களாசாஸனம் செய்தருளியுள்ளார். கம்பீரமாகத் திகழும் திருமாலின் திருமார்பில் பிராட்டியும், வீற்றிருக்கிறாள். நிலவறையை பெயர்த்து தலைக்கு மேல் வைத்தால் எப்படி இருக்குமோ அதேபோன்று தோற்றமளிக்கிறது கருவறை. உற்சவமூர்த்தியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவிக்குப் பதிலாக இத்தலத்தில் ருக்மிணி, சத்யபாமா வீற்றிருப்பது வித்தியாச அற்புதம். ஆண்டாள், நர்த்தன கண்ணன், சுதர்சனர் ஆகியோரையும் கருவறையில் தரிசிக்கலாம். சந்திரனின் மனைவியான ரோகிணி கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்து சந்திரனை மணமுடித்த தலம் இது. ஆகவே இது ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பரிகாரத் தலம். ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு ரோகிணி தீபம் ஏற்றி, அது அணையும்வரை அடி பிரதட்சிணம் செய்து கண்ணனுக்கு முறுக்கு, வெண்ணெய், சீடை நிவேதித்து விநியோகித்தால் உத்யோகத்தடை, திருமணத்தடை நீங்குகின்றன. தனக்கு ஞானம், சக்தியளித்து விஸ்வரூப தரிசனமளித்த கண்ணனை, ரோகிணி தினமும் சூஷ்மவடிவில் வழிபடுவதாக ஐதீகம். கிருஷ்ணர் தன் கால் கட்டைவிரலை அழுத்தி விஸ்வபாத யோகத்தைப் பரப்பியதால் இது கிருஷ்ண பூமி என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் அங்க பிரதட்சிணம் செய்தால் உடலின் 72,000 நாடிகளும் சுத்தி பெறும் என்கிறார்கள். திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோர் இவரை மங்களாசாஸனம் செய்துள்ளனர். ராமானுஜரிடம் வாதப் போரிலே தோற்ற யக்ஞ மூர்த்தி என்பவர் ராமானுஜரின் ஆற்றலை உணர்ந்து அவருடைய சீடராகி அருளாளப் பெருமான் என்றழைக்கப்பட்டார். இவருக்கு  தனி சந்நதி ஒன்று உள்ளது. புதன்கிழமை, சனிக்கிழமை, அஷ்டமி திதி, ஆங்கில மாத எட்டாம் தேதிகளில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தேவர்களுக்கும் வேண்டியதைத் தரும் இறைவன் என்று பாண்டவதூதனைப் புகழ்கிறார். திருவூரகத்தில் நின்றபடியும், திருப்பாடகத்தில் இருந்தபடியும், திருவெஃகாவில் கிடந்த படியும் தொண்டை மண்டலத்தில் பெருமாள் அருள்வது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுகளில் பாண்டவதூதர், தூதஹரி என குறிப்பிடப்பட்டுள்ளார். பிறவியிலேயே பார்வையிழந்த திருதராஷ்ரனும் கண்டு ரசிக்கும்படி தன் விஸ்வரூப திருக்கோலத்தை கண்ணன் காட்டியருளிய தலம் இது. பெரிய காஞ்சிபுரத்தில், கங்கைகொண்டான் மண்டபத்தின் அருகில் அமைந்திருக்கிறது திருப்பாடகம்….

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi