Sunday, July 14, 2024
Home » சங்கரர் போற்றும் (கஜ) சம்ஹார தாண்டவம்

சங்கரர் போற்றும் (கஜ) சம்ஹார தாண்டவம்

by Porselvi

ஆதி சங்கரர் பல பக்தி நூல்கள் செய்து இருக்கிறார். ஒவ்வொன்றும் சிரத்தின் மீது வைத்துக் கொண்டாட வேண்டிய நூல்கள் ஆகும். இதில் ஈசனைப் பற்றி அவர் பாடிய ‘‘சிவானந்த லஹரி’’ என்னும் நூல் அவர் எழுதிய பக்தி நூல்கள் அனைத்தையும் விட சிறந்தது என்றால் அது மிகையில்லை. ஈசனை எண்ணி எண்ணி பக்தி ரசம் சொட்ட சொட்ட அவர் எழுதிய இந்த நூலை இன்றும் சைவ சமயத்து அன்பர்கள் படித்து இன்புற்று, மகிழ்வதை கண்ணாரக் காணலாம்.

இந்த நூலை எழுதியது, ஸ்ரீசைலம் மலையில் மல்லிகார்ஜுன ஈசனின் சன்னதியில் தான். இவர் இந்த நூலை எழுதி முடித்ததும், மல்லிகார்ஜுனராக காட்சி தரும் ஈசன், ‘‘இந்த நூலையும், சங்கரரின் அத்வைத கொள்கையையும் ஏற்றேன்’’ என்று அசிரீரியாக சொன்னார். அதுமட்டுமில்லை சிவ லிங்கமாக இருந்த இறைவன் திரு உருவில் இருந்து திடீரென்று இறைவனது கைகள் தோன்றி, ‘‘சங்கரரது அத்வைத சாஸ்திரம் தான் சிறந்தது’’ என்று மொழிந்ததாம். இப்படி ஈசனை நேரிலேயே வரவைத்து விட்ட ஒரு பக்தி நூல் சிவானந்த லஹரி என்றால் அது மிகையல்ல. இப்படிபட்ட சிவானந்த லஹரியில் ஈசனின் கஜ சம்ஹார தாண்டவத்தை சங்கரர் அற்புதமாக பாடுகிறார்.

44ஆவது ஸ்லோகம். காட்டில் ஒரு சிங்கம் இருக்கிறது. பெரும் வீரமும் தீரமும் வாய்ந்த சிங்கம் இது. செருக்கொடு சுற்றித் திரிந்த மானை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறது. ஆரவாரம் செய்து, நானே காட்டுக்கு ராஜா என்ற அகம்பாவத்தோடு வந்த புலியை அடிக்கிறது. பிறகு அந்த சிங்கம், காட்டில் மதம் பிடித்து திரிந்து கொண்டிருக்கும் யானையின் மத்தகத்தில் அடித்து அதை வெல்கிறது. பிறகு மலையின் மீது இருக்கும் தனது குகை என்னும் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. அந்த சிங்கத்தின் முகம் அல்லது நெற்றி பெரியதாகவும், வாய்ப் பகுதி சற்று குறுகியும் இருக்கிறது. இப்படிப் பட்டசிங்கத்தை நான் சரணடைகிறேன் என்கிறார் சங்கரர்.

மேலாக படிக்கும்போது காட்டில் வசிக்கும் சிங்கத்தை பற்றிய வர்ணனை போல இது தெரியும். ஆனால், ஆழ இந்த ஸ்லோகத்தை படிக்கும்போதுதான் சங்கரர், இங்கே சிங்கத்திற்கும் ஈசனுக்கும் சிலேடையாக இந்த பாடலை பாடி இருக்கிறார் என்று தெரியும்.இறைவன் என்ற சிங்கம் உலகத்திற்கே தலைவன். அதை மறந்த தாருகாவன முனிவர்கள் இறுமாப்புடன் இருந்தார்கள். அவர்களை பொறுத்தவரையில், அவர்கள் செய்யும் கர்மங்களான, தவம், யாகம் முதலியன தான் மென்மையானது. அவைதான் உயர்ந்த பலன்கள் தருகிறது. இறைவன் என்பவன் இல்லவே இல்லை என்பது தான் அவர்களின் கொள்கை.அவர்களது ஆணவத்தை அழித்து, அவர்களுக்கு நல்புத்தி புகட்ட எண்ணினார் இறைவன்.

ஆகவே, தாருகா வனத்திற்குள் சிங்கம் போல இறைவன், பிக்ஷாடனர் வடிவில் நுழைகிறான். திருமால் மோகினி வடிவில், ஈசனோடு செல்கிறார். மோகினி வடிவில் வந்த திருமாலை கண்டு, முனிவர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்த தவத்தை மறக்கிறார்கள். மோகினியின் அழகில் ஆழ்கிறார்கள். அதே போல, பிக்ஷாடனராக வந்த இறைவனை கண்டு முனி பத்தினிகள் மோகம் கொள்கிறார்கள். தங்களது தவத்தை கலைத்த இறைவன்மீது முனிவர்கள் கோபம் கொண்டார்கள். ஆகவே, இறைவனை எதிர்த்து அபிசார வேள்வி செய்தார்கள். அந்த வேள்வியில் ஒரு கொடிய மான் தோன்றியது. இறைவனை எதிர்த்து அந்த மானை அவர்கள் ஏவினார்கள். அவர்கள் ஏவிய மாய மானை ஆயுதமாக்கி, இறைவன் கைகளில் ஏந்திக் கொள்கிறான். பிறகு வேள்வியில் தோன்றிய ராட்சஸப் புலியை ஏவுகிறார்கள்.

அவர்கள் அனுப்பிய ராட்சஸ புலியை உரித்து இடையில் ஆடையாக, இறைவன் கட்டுகிறான். பிறகு அவர்கள் அனுப்பிய ராட்சஸ யானையை உரித்து மேல் வஸ்திரமாக தரிக்கிறான். முனிவர்கள் வெட்கி தலைகுனிய நின்றார்கள். அவர்கள் முன்னே ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறான் இறைவன். இதைத் தான் கஜசம்ஹார தாண்டவம் என்று சொல்வார்கள். இப்படி அந்த வனத்தில் தன் ராஜ்ஜியத்தை நிறுவிவிட்டு, கயிலை மலையென்னும் வெள்ளைப் பனிமலையில் தனது சிங்காசனத்தில் ஐந்து முகங்களோடு அமர்ந்து அருளாட்சி செய்கிறான். இப்படி சங்கரர் சிங்கத்துக்கும் ஈசனுக்கும் செய்த சிலேடையை சமஸ்கிருதம் தெரிந்தவர்களும், பக்தர்களும் படித்துப் படித்து இன்புறுவார்கள்.

85 ஆவது ஸ்லோகத்தில் சிவனுக்கு தன்னால் பூஜை செய்ய முடியாது என்கிறார் சங்கரர். ஆம் அப்படித் தான் சொல்கிறார். நமது கலாச்சாரப்படி பூஜை என்றால் என்ன? இறைவனை பாவனையாக நமது வீட்டிற்கு அழைத்து, அவருக்கு உணவு, உடை, முதலியன தந்து, அர்ச்சனை, பிரார்த்தனை துதிகள் முதலியன செய்து வழிபடுவது தான் இல்லையா?

இப்போது ஈசனை நாம் பாவனையாக உணவு உண்ண அழைக்கிறோம். அவன் விரும்பி உண்ணும் உணவு என்ன? ஆலகால விஷம். அந்த விஷத்தை எடுக்க நம்மால் பாற்கடலை கடையவா முடியும்? முடியாதே! ஆகவே இறைவனுக்கு நம்மால் உணவு படைக்க முடியாது. சரி இறைவன் அணியும் ஆபரணங்களையாவது அவனுக்கு தந்து பூஜிக்கலாம் என்று நமக்கு அடுத்து தோன்றும். ஆனால் அவன் ஆபரணமாக அணிவது, தாருகாவனத்து முனிவர்கள், இறைவனை அழிக்கும் பொருட்டு அவன் மீது ஏவிய பாம்புகள்தான் இல்லையா?. இந்த பாம்புகளை நம்மால் பிடிக்கத் தான் முடியுமா? இல்லை பிடிக்க முடிந்தாலும் அதை அடக்கிக் கொண்டு வந்து ஈசனுக்கு அளிக்க முடியுமா? முடியாதே! சரி ஈசனுக்கு வஸ்திரமாவது சமர்ப்பணம் செய்யலாம் என்று நமக்கு அடுத்து தோன்றும்.

ஆனால் அவர் உடுப்பது, தாருகாவன முனிவர்களின் அபிசார வேள்வியில் தோன்றிய புலியின் தோலும், யானையின் தோலும். புலித்தோலும், யானைத்தோலும் எடுத்து வர நம்மிடத்தில் வேட்டையாடும் திறனும் தைரியமும் இல்லை. ஆகவே இறைவனுக்கு நம்மால் வஸ்திரமும் அர்ப்பணம் செய்யமுடியாது. பிறகு வேறு எப்படித் தான் இறைவனை வழிபடுவது? என்று சிந்தித்த சங்கரர் ஒரு முடிவுக்கு வந்தார். தனது மனம் என்னும் மலரை இறைவன் காலடியில் வைப்பதை விட சிறந்த வழிபாடு வேறு எதுவும் இல்லை என்பதுதான் அது.

அடுத்து 96 மற்றும் 97 ஆவது ஸ்லோகம். இங்கே சங்கரர் தன்னிடம் ஒரு யானை இருக்கிறது என்று சொல்கிறார். இந்த யானை சரியான மதம் பிடித்த யானை. இதனை யாராலும் அடக்க முடியவில்லை. மதம் பிடித்த யானை எப்படி அனைத்தையும் நாசம் செய்யுமோ, அதுபோலவே இதுவும், எனது நல்கதிக்கு நான் சேர்த்து வைத்த அத்தனையையும் நாசம் செய்கிறது. கரியதாயும் பெரியதாயும் இருக்கும் இந்த யானை வேறு எதுவும் இல்லை என் மனம்தான்.

உலகாயத விஷயங்களில் கொண்ட ஆசையாலும் பற்றாலும் இந்த யானை கட்டுக்கடங்காமல், சிற்றின்ப நுகர்ச்சி என்னும் மதம் பிடித்து திரிகிறது. இதை நான் தைரியம் என்னும் அங்குசத்தாலும், புலனடக்கம் என்னும் அங்குசத்தாலும் அடக்கி இருக்கிறேன். இந்த மதம் பிடித்த யானையை, உனது திருவடி என்னும் கட்டுத்தறியில் அறிவு என்னும் இயந்திரத்தால் தயவு செய்து கட்டி அடக்கி அருளும் என்று, சங்கரர் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறார்.

அதனை தொடர்ந்து வரும் ஸ்லோகமும் இதே போல நயமான ஒன்றுதான். அதையும் பார்ப்போம் வாருங்கள். சிற்றின்ப நுகர்ச்சியில் பற்று என்னும் மதம் பிடித்துத் திரியும் மனம் என்னும் இந்த யானையை, பக்தி என்னும் கயிற்றால் கட்டி அடக்கி அருள வேண்டும் என்று இறைவனை, சங்கரர் பிரார்த்திக்கிறார்.

இந்த இரண்டு ஸ்லோகங்களும், தாருகாவன லீலையை அழகாக விளக்கிவிட்டது. அபிசார வேள்வி செய்து, முனிவர்கள் ஏவிய ராட்சஸ யானையை, மனத்தோடு ஒப்பிட வேண்டும். ஆசை என்னும் தீயிலும், பல விதமான சிந்தனை என்னும் தீயுலும் சதா உழலும் மனதை, அக்னியில் இருந்து தோன்றிய யானையோடு ஒப்பிடுவது சரி தானே? யானையோ அளவில் மிகப் பெரியது. மனிதனின் மனதில் இருக்கும் ஆசையோ எல்லையில்லாத அளவுக்கு நீள்கிறது. யானையின் நிறம் கறுப்பு, மனிதனின் மனம், காமம் குரோதம், சுயநலம், கர்வம், பொறாமை என்ற கெட்ட குணங்களின் மிகுதியால் இருண்டு கறுப்பாகி இருக்கிறது. யானைக்கு மதம் பிடிக்கும். மனதிற்கு ஆசையை அடைய வேண்டும் என்ற வெறி பிடிக்கும். யானை மதம் பிடித்தால் தன்னையே மறந்து மொத்தத்தையும் துவம்சம் செய்யும்.

மனிதனுக்கு வெறி பிடித்தால் அவனும் தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ துன்புறுத்துகிறான். யானையை அடக்க யானை பாகன் வேண்டும். மனதை அடக்க இறைவன் என்ற யானைப் பாகன் வேண்டும். யானை பாகன் அங்குசம் என்னும் ஆயுதத்தால், யானையின் காதுகளை குத்தி அதை நெறிப்படுத்துவான். இறைவன் இருண்ட மனதிற்குள் புகுந்து அதை அடக்கி கோவிலாக்கிக்கொள்கிறான். இப்படி ஆசையால் நெறிதவறி மதம் பிடித்து திரியும் மனதை இறைவனை எண்ணி சரணடைந்த மாத்திரத்தில், இறைவன் அதை அடக்கி ஆள்கிறான்.

இருண்டமனம் அவன் புகுந்த பின், அவனுக்கு அர்ப்பணம் செய்ய உகந்த ஒரு பொருளாக மாறுகிறது. அவனும், நாம் நமது மனதை அவனுக்கு அர்ப்பணம் செய்ய, அதை அவன் ஆனந்தமாக ஏற்கிறான். இதைத் தான் இறைவன் கஜாசூரனை கொன்று அல்லது அடக்கி அவனது தோலை ஆடையாக அணிந்து நமக்கு உணர்த்துகிறார். இதையேதான் சங்கரர் சிவானந்த லஹரியின் 96 மற்றும் 97 ஆவது பாடலில் சொல்கிறார்.

ஜி.மகேஷ்

You may also like

Leave a Comment

5 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi