Sunday, June 16, 2024
Home » துளசிதேவியை வழிபட்ட ராதாதேவி

துளசிதேவியை வழிபட்ட ராதாதேவி

by kannappan

பாண்டீரவனம் என்ற பெயர் கொண்ட அற்புத வனம் அது. தேவலோகமே பூமிக்கு வந்துவிட்டதோ என்று மலைக்கச் செய்யும் எழில் கொஞ்சும் வனம். மாலதி, மல்லிகை முல்லை, ஜாதி, இருவாச்சி, செண்பகம் என்று மலர்கள் பூத்துக் குலுங்கும் செடி கொடிகள். நறுமணம் கமழும் அந்த வனம் கண்ணுக்கும் கருத்துக்கும் இதம் தந்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. போதாக்குறைக்கு யமுனா நதியின் குளிர்ந்த இதமான வாடைக் காற்று. அப்பப்பா! சொல்லிக்கொண்டே போகலாம்….அந்த அழகிய வனத்திலே, அந்திசாயும் பொழுதினிலே, பூஜைக்கு மலர் பறிக்க வேண்டி, மகாராஜா விருஷபானுவின் அருந்தவப் புதல்வி, பர்சானாவின் அன்பு இளவரசி, பூலோகம் வந்துவிட்ட திருமாலின் தேவியான ராதை வந்தாள். அந்த வனப்பு மிகுந்த வனத்தின் எழிலை ரசித்தபடி ராதாதேவியின் கைகளில் மலர் கூடையோடு நடந்து கொண்டிருந்தாள். அப்போது சில்லென்று ஒரு தென்றல் காற்று வீசியது. வீசிய காற்றில் பறந்து வந்த மல்லிகையும், முல்லையும் அவளது பாதத்தில் அஞ்சலி செய்வதுபோல விழுந்தது. இது என்றும் நடக்கும் விஷயம்தான். இதே வனத்திற்கு ராதை பலமுறை வந்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் இந்த அஞ்சலி நடக்கும். ஆனால், இம்முறை அதில் சிறிது வித்தியாசம் இருந்தது. ஆம். வீசும் அந்த தென்றல் காற்றிலே, மோகனக் குழல் ஓசை, பாலில் தேன் கலந்ததுபோல, கலந்து வந்து ஒலித்தது. பாடும் குயிலும், ஓடும் மானும், வீசும் காற்றும் கூட ஒருமுறை தன்னை மறந்து நின்றுவிடும்படி, வெகு அழகாக இருந்தது, அந்த ராக ஆலாபனை. திடமான ராதையின் இதயம் கூட அதைக் கேட்ட மறுகணம் அலை பாய்ந்தது. கேட்ட அடுத்த கணம், தான்யார் என்பதை மறந்தாள், அப்பா விருஷபானுவை மறந்தாள், பிறந்த நகரமான பர்சானாவை மறந்தாள், தான் பெண் என்பதை மறந்தாள், ராதை என்ற தன் நாமத்தை மறந்தாள். அவளது செவ்விய பாதங்கள் அவளையும் அறியாமல், குழலோசை வந்த திக்கை நோக்கிச் சென்றது. அங்கே நீல வானத்தை பிடித்து வந்தது போல ஒரு திருமேனியைக் கண்டாள். உச்சியில் மின்னும் மயில் இறகைக் கண்டாள். தாமரைப்பூ கண்களைக் கண்டாள். மன்மதனை பழிக்கும் மந்தஹாசத்தை கண்டாள். உலகிற்கே புகலாக விளங்கும் இரு சரணங்களை கண்டாள். கண்டதும் தன்னை மறந்தாள். மனிதனாக அவள் பிறந்தபின், முதன்முதலாக தன் பிறப்பின் முழு அர்த்தத்தை ஒரே நொடியில் கண்டுவிட்டு, செய்வதறியாது சிலையாக நின்றாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? என்பது உண்மைதான் என்பதுபோல பேச வார்த்தையும் வரவில்லை அங்கிருந்து அசைய கால் கைகளும் இசையவில்லை.அந்தக் கார்மேக வண்ணனுக்கும் அவளுக்கும் பல ஜென்ம பந்தம் நிச்சயம் இருந்தே தீரவேண்டும் என்று அவளது ஆழ்மனது, அவளுக்கு மட்டும் கேட்பதுபோல கிசுகிசுத்தது. அது உண்மையாக இருந்து விடாதா? என்ற நப்பாசையில் தன்னை மறந்து வெகு நேரம் அங்கே நின்றிருந்தாள், அந்தக் காரிகை. பிறகு அவளை வந்து, அவளது தோழி லலிதா அழைத்துக் கொண்டு மாளிகைக்குச் சென்றாள்.மாளிகைக்குச் சென்றபின், அவளுக்கு உணவும் செல்லவில்லை உறக்கமும் பிடிக்கவில்லை. சந்தனத்தை எடுத்து மார்பில் பூசினால் ‘‘நெருப்புக் கட்டியை ஏனடி மார்பில் வைத்தாய்?’’ என்றாள். நுரையை போன்ற நல்ல பட்டுப் பீதாம்பரமோ, சுடு மணலைப் போல சுடுகிறது என்றாள். பாலும் புளித்துப் போனது. தேனும் கசந்து போனது. எந்த நேரமும் அந்த மோகனப் புன்னகை, மனக்கண் முன்தோன்றி பாடாய்படுத்தியது. தன்னை அறியாமல் அந்தக் காரிகை கண்ணயர்ந்தாலும் அங்கும் அந்தக் கண்ணன் வந்து அவளை படுத்தினான்.‘‘பாழும் இந்த உடல் இன்னும் எத்தனை நாள் அந்த மன்னனை சேராமல் வீணாகக் கழிக்கப் போகிறதோ?” என்று அலறி எழுந்து விடுவாள் அந்தக் காரிகை. இப்படி அவள் இன்னல் படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல், அவளது தோழி லலிதாவும், விஷாகாவும் அவளோடு சேர்ந்து வருந்தினார்கள். அப்போது, ராதையின் உள்ளே பக்தி என்னும் வேள்வித் தீயை வளர்த்த அந்த கண்ணன், வேத மந்திரமாக ஒலிக்கும் குழலை ஊதியபடி வந்தான். அவனது மதிமுக தரிசனத்தை, வீட்டின் ஜன்னல் வழியே கண்ட காரிகை, ஜென்ம சாபல்யம் (பிறவிப் பயன்) அடைந்தாள். ‘‘அந்த ஆசை முகத்தை இனி ஒரு போதும் மறக்கக் கூடாது” என்று தீர்மானித்த அவள், ஒரு வெள்ளைப் பட்டுத் துணியில் அந்த முகத்தை சித்திரமாக வரைந்தாள். (கம்பன் ஓவியத்தில் எழுத முடியாத வடிவம் என்று சொன்ன அதே வடிவத்தை தான் வரைந்தாள். முடியாததை பக்தியால் சாதித்தாள் ராதை)அப்போதுதான் தோழி லலிதாவிற்கு தலைவியின் உள்ளக் கொதிப்பு புரிந்தது. உடனே கண்ணனிடம் ராதைக்காக தூது சென்றாள். லலிதா வந்த விஷயத்தை அறிந்த, யசோதையின் இளஞ்சிங்கம் பின்வருமாறு பேசியது. ‘‘லலிதா! ராதையும் நானும் தான் மூல பரம்பொருள் என்பதை உணர். நானும் அவளும் வெளியில் வேறு வேறாக தோன்றினாலும் உண்மையில் நாங்கள் இருவரும் ஒன்றே. பாலில் நெய்போல என்னுள் அவளும், அவளுள் நானும் கலந்து நிறைந்திருக்கிறோம். எங்களுக்கு என்றும் பிரிவே கிடையாது. எங்களை ஒன்றாக எண்ணி நன்றாக பூஜிப்பவன் வைகுண்டம் சேர்வான். தவத்தால் அடையப்படுவதால் எனக்கு மாதவன் என்று பெயர். அதிலும் பலன் கருதாமல் செய்யப்படும் கர்மங்களால் நான் மிகவும் மகிழ்கிறேன். ராதை என்னை நினைத்து நினைத்து உருகி, பக்தியில் கரை கண்டு விட்டாள். இனி கர்ம யோகத்தின் வழி அவள் என்னை அடையலாம்! கலக்கம் வேண்டாம்.”‘‘ஆனால் சுவாமி! பக்தி யோகத்தின் வழி நின்ற ராதை உங்களை கர்ம யோகத்தால்தான் அடைந்தாள் என்பது பக்தி யோகத்திற்கு இழுக்கு ஆகாதா?’’ லலிதா நியாயமான கேள்வி கேட்டாள். அவளது கேள்விக்கு, சிங்காரமாக சிரித்த படியே விடை பகர்ந்தான் அந்த தீனதயாளன். ‘‘உலகிற்கு என்னை அடையும் வழிகளை நான் பின்னாளில்  (பகவத் கீதையில்) உபதேசிக்கப் போகிறேன். உபதேசம் செய்தவனே உபதேசத்தை கடைபிடிக்காவிட்டால் உலகம் அதை ஏற்குமா?. கண்ணனாக இருந்து உபதேசத்தை செய்யும் நான், ராதையாக இருந்து அதை கடைபிடிக்கப் போகிறேன். இதற்குத்தான் முதலிலேயே எங்களுக்குள் பேதம் கிடையாது’’ என்று கூறினேன். ‘‘கண்ணனின் விளையாட்டு நான்முகனுக்கே, புதிராக இருக்கும்போது, பேதைப் பெண் நான் விளங்கிக் கொள்வது கடினம் தான். ஆகவே கண்ணா! ராதையை பலன் கருதாமல் செய்யும் கர்மமார்க்கத்தின்படி உன்னை பூஜிக்கச் சொல்கிறேன். இப்போது விடை பெறுகிறேன்’’ என்றபடி கண்ணனிடம் விடைபெற்று ராதையிடம் சென்றாள் லலிதா. ராதை, லலிதா சொல்வதுபோல விரதம் இருக்க ஆரம்பித்தாள். அவள் இருந்த விரதம் சாதாரண விரதம் இல்லை. கண்ணன் விரும்பி சூடும் துளசி தேவியை வேண்டி விரதமிருந்தாள் ராதை. காரணம் இல்லாமல் இருக்குமா?ஒரு மனிதன் நட்ட துளசிச்செடியானது இந்தப் பூமியில் கிளை, இலை, பூ, விதை என்று வளர்ந்து கொண்டிருக்கும்வரை அவனது குடியில் பிறந்த அனைவரும், வைகுண்டப் பட்டினத்தில் ஸ்ரீஹரிக்கு சேவை செய்பவர்களாக இரண்டாயிரம் கல்பங்களை கழிப்பார்களாம். எல்லா இலைகளையும் மலர்களையும் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வதால் வரும் பலன், ஒரே ஒரு துளசி தளத்தை இறைவன் காலடியில் வைப்பதால் கிடைக்கிறது. எந்த வீட்டில் துளசி வனம் இருக்கிறதோ அதுவே ஒரு புனிதத் தலமாகும். நூறு பாரம் தங்கத்தையும் வெள்ளியையும் தானம் செய்வதால் வரும் பலன், ஒரே ஒரு துளசியை நட்டு பக்தியோடு பூஜிப்பதால் கிடைக்கிறது. துளசி வனம் இருக்கும் வீட்டில் யமன் மீது பட்ட காற்றுகூட படுவதில்லையாம். துளசியின் மஞ்சரியை (கொத்தை) தலையில் வைத்துக் கண்டு இறப்பவனை, எமதர்மராஜன் தீண்டுவதற்கும் அஞ்சுவான். இன்னும், துளசியின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி மகிமைகள் பல உடைய துளசியை பூஜிப்பதே மாலவனை அடைய ஒரே வழி என்று தோழி சந்திரரானாவும் லலிதாவும் சொல்லக் கேட்டு நேம நிஷ்டையாக துளசி விரதம் இருந்தாள் ராதை. கேதகீ வனத்தில், நூறு அடி வட்டமான பூமியில் நவரத்தினத்தாலும் சிந்தாமணியாலும் இழைத்த கோவிலை அமைத்து அதில் அபிஜித் முகூர்த்தத்தில் துளசி தேவியை நட்டு கர்க்க முனிவரை குருவாக முன்னிறுத்தி விரதம் இருக்க ஆரம்பித்தாள், ராதை. ஐப்பசி மாத சுக்ல பட்ச பௌர்ணமி முதல் சித்திரை மாதத்து பௌர்ணமி வரை அந்த விரதம் நீடித்தது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ரசத்தால் துளசிக்கு சேவை செய்தாள், ராதை. கார்த்திகையில் பாலாலும், மார்கழியில் கரும்புச் சாறாலும், தையில் திராட்சை ரசத்தாலும், மாசியில் மாம்பழ ரசத்தாலும், பங்குனியில் பல வஸ்துக்கள் கலந்த கற்கண்டு ரசத்தாலும், சித்திரையில் பஞ்சாமிர்தத்தாலும் சேவைகள் செய்தார். இவ்வாறு விரதத்தை நிறைவேற்றிய ராதை, விதிப்படி வைகாசி மாதம், கிருஷ்ணபக்ஷ பிரதமை அன்று உற்சவம் நடத்தி பூஜையை நிறைவு செய்தார். இரண்டு லட்சம் மாலவன் அடியார்களுக்கு 56 வகை உணவு படைத்து, ஆடை அணிகலன்களை தானமாக வழங்கி வெகு விமர்சையாக அவள் விரதம் முடிக்கும் வேளையில், தேவர்கள் மலர்மாரி பொழிய, கந்தர்வர்கள் இன்னிசை முழங்க, நான்கு கைகளோடும், கண்ணனை போன்றே மேக வண்ணத்தோடும், பட்டுப் பீதாம்பரம் உடுத்தி, கருடன் மீது சேவை சாதித்தாள் துளசி தேவி. அம்பிகையை கண்ட ராதை பிறவிப் பயனை அடைந்தவளாக உணர்ந்து, அவளது பாதத்தில் சரணாகதி செய்தாள். அவளைத் தூக்கி ஆதரவாக அனைத்த துளசி தேவி, ‘‘ராதா! என்னருளால் கண்ணனை விட்டு நீங்காத பதவியை அடைவாய். பாலும் நெய்யும்போல, எண்ணெயும், எள்ளும்போல, பேதமின்றி அவனோடு கலப்பாய். இது நீ அன்போடு பூஜித்த துளசி தேவியாகிய நான் தந்த வரம். ஆசிகள் மகளே!’’ என்று ஆசி வழங்கியபடியே காற்றில் கரைந்து மறைந்து போனார், துளசிதேவி. ஊனை வருத்தி உள்ளொளி பெருக்கி கானகத்தில் முனிவர்கள் தவமிருந்தபோதும் காணாத பெரும் பேற்றை தன்னை பூஜித்த அடியவர்களுக்கு அனாயாசமாக அளித்துவிட்டு மறைந்த துளசி தேவியின் மகிமையை என்னவென்று சொல்வது? கர்க்க சம்ஹிதையில், விருந்தாவன காண்டத்தில், துளசிபூஜை என்னும் பதினாறாவது அத்தியாயமாக இருக்கும் இந்தக் கதையை படிப்பவனும் கேட்பவனும் கூட நல்லகதி பெறுவான் என்று நாரத முனிவரே கூறும்போது இதற்கு வேறு என்ன சாட்சியங்கள் வேண்டும்?ராதையை போல விமர்சையாக துளசியை வழிபட வேண்டும் என்பது இல்லை. நம்மால் முடிந்த அளவுக்கு நமது சக்திக்கு ஏற்ப அவளை வழிபட்டாலே வேண்டிய பலன்களை வாரிவாரி வழங்குவாள் துளசிதேவி! மேலும், துளசியை பூஜிப்பது விஞ்ஞானரீதியாகவும் சிறந்த பலன்களை தருவது என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆகவே விஞ்ஞானமே புகழும் மெய்ஞானமாகிய துளசி வழிபாட்டை தவறாமல் செய்வோம். ஸ்ரீதுளசியம்மன் துதிஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மாவெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற- மாதாவேசெவ்வாய்க் கிழமை தன்னில் செழிக்க வந்த செந்திருவேதாயாரே உந்தன் தாளடியில் நான் பணிந்தேன்பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தேபரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தேஅற்பப் பிறப்பை தவிர்ப்பாய் – நமஸ்தேஅஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் – நமஸ்தே (1)ஹரியுடைய தேவி அழகி நமஸ்தேஅமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய்- நமஸ்தேவனமாலை என்னும் மருவே நமஸ்தேவைகுண்ட வாசியுடன் – மகிழ்வாய் – நமஸ்தே (2)அன்புடனே நல்ல அருந்துளசி -கொண்டு வந்துமண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல நீர்ஊற்றிமுற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டுசெங்காவி சுற்றுமிட்டுத் திருவிளக்கும்ஏற்றிவைத்துபழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்துபுஷ்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்குஎன்ன பலனென்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்கமங்களமான துளசி மகிழ்ந்து உரைப்பாள் (3)மங்களமாய் என்னைவைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்தீவினையைப் போக்கி சிறந்த பலன் நானளிப்பேன்அரும்பிணியை நீக்கி அஷ்டஐஸ்வர்யம் நானளிப்பேன்தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்(4)புத்திரன்இல்லாதவர்க்க்குப் புத்திரபாக்கியம் நானளிப்பேன்கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்க்ரஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்முமுக்க்ஷர்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன்(5)கோடிக்காராம் பசுவைக் கன்றுடனே கொண்டு வந்துகொம்புக்குப் பொன்னமைத்துக் குளம்புக்கு வெள்ளிகட்டிகங்கைக் கரை தனிலே கிரஹண புண்யகாலத்தில்வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்தபாலன்நானளிப்பேன் சத்தியமென்று நாயகியும் சொல்லுமேஅப்படியே ஆகவென்று திருமால் அறிக்கையிட்டார்இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்அற்புதமாய் வாழ்ந்திடுவார் பர தேவி தன்னருளால்! (6)ஜி.மகேஷ்…

You may also like

Leave a Comment

9 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi