Tuesday, June 18, 2024
Home » துயர் துடைப்பார் ஏரிகாத்த ராமர்

துயர் துடைப்பார் ஏரிகாத்த ராமர்

by kannappan

மதுராந்தகம்ஸ்ரீராம நவமி 2-4-2020ராம நாமம், சைவ-வைணவ ஒற்றுமைக்கோர் உதாரணம். திருமாலின் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டாட்சர மந்திரத்திலுள்ள ‘ரா’வும், எந்நாட்டவர்க்கும் இறைவனாம் பரமேஸ்வரனின் ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்திலுள்ள ‘ம’வும் சேர்ந்து அமைந்ததே ‘ராம’நாமம். இந்த தாரக நாமத்தை, காசியில் உயிர் விடுபவர்களின் காதுகளில் தனது திருவாயாலே எடுத்துரைத்து அவர்கள் மோட்சம் பெற வழிவகுக்கிறார் சிவபெருமான்.மற்றைய பல திருவிழாக்களைப் போல நாட்டின் ஒரு பகுதிக்குரிய திருவிழாவாக இல்லாமல், இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும் மற்றும் உலகளாவிய நிலையிலும் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் 2-4-2020 அன்று ஸ்ரீராமநவமி அமைகிறது. இச்சமயத்தில், தமிழ்நாட்டில் சில தலங்களில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ராமபிரானை தரிசிக்கலாமா? மதுராந்தகம் சென்னையிலிருந்து திண்டிவனம் பாதையில் அமைந்துள்ளது மதுராந்தகம். இங்கே, கொள்ளை அழகுடன் பேரருள் புரிகிறார் ஏரிகாத்த ராமன்.பெருமழை பிடித்தொழுக, ஊரெல்லாம் வெள்ளக்காடாகிவிட்டது. மிகப் பெரிய பரப்பளவுள்ள மதுராந்தகம் ஏரியில் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு உயர்ந்து ஏரியே உடைப்பெடுத்துவிடுமோ என்று மக்கள் அஞ்சி ஊரைவிட்டே வெளியேறிவிடத் துடித்தார்கள். அப்போது அந்தப் பகுதியில் கலெக்டராகப் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரி செய்வதறியாது திகைத்தார். இயற்கையின் சீற்றத்துக்கு எப்படி பதில் சொல்வது, மக்களை எப்படிக் காப்பது என்று பெரும் கவலையில் ஆழ்ந்தார். அவருக்கு ஆட்சி நடைமுறையில் உதவி வந்த சில தமிழ் அதிகாரிகள் அவரிடம், மதுராந்தகம் ராமரை வேண்டிக்கொண்டால் அவர் அந்த அபாயத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றுவார் என்று யோசனை தெரிவித்தார்கள். ஆங்கிலேயருக்கு அதில் உடன்பாடில்லை.ராமர் அவர்கள் சொல்லும் அளவுக்கு அத்தனை பராக்கிரமசாலியாகவா இருப்பார்? இத்தனைக்கும் ஆன்மிக உணர்வுக்கும் அவரவர் உள்ளத்துக்கும் மட்டுமே தெரியக்கூடிய ராமர், பிறர் கண்களுக்கு வெறும் கற்சிலையாகவே காட்சியளிக்கும் அவர், எப்படி இந்த சீறும் இயற்கையைக் கட்டுப்படுத்தமுடியும்? ஒவ்வொரு விநாடிக்கும் அதன் ஆர்ப்பாட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறதே, மனித முயற்சிகளைப் பரிகாசம் செய்யக்கூடிய இந்த அட்டகாசத்தை கோயிலில் குடிகொண்டிருக்கும் ஒரு சிலை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? கலெக்டர் அலட்சியமாக அவர்களுடைய யோசனையை விலக்கினார். ‘வேறு ஏதாவது பேசுங்கள்,‘ என்றுசொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.அன்றிரவு, என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று பரிதவித்தபடி தூக்கமே பிடிக்காமல் படுக்கை யில் படுப்பதும், எழுந்து உட்காருவதும், அறையிலேயே நடப்பதும், சாளரத்தின் வழியாக கொட்டித் தீர்க்கும் மழையையும், மேலே மேலே ததும்பி, ஏரிக்கரையினின்று வெளியேற முயற்சிக்கும் தண்ணீரையும் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். அப்போது அந்த ஏரிக்கரைமீது இரண்டு பேர் நெடிதுயர்ந்த தோற்றத்தினராய், ஒருவர்பின் ஒருவராக நடந்து வந்து கொண்டிருப்பதை மின்னல் ஒளியில் பார்த்தார், கலெக்டர். யார் அவர்கள்? மதுராந்தகம் கோயிலில் உள்ள சிலைகள் போலவே இருக்கிறார்களே! சிலைக்கு உயிர் வந்துவிட்டதா? இடது கையில் வில்லேந்தி, வலது கையில் அம்பு ஏந்தி, ‘போதும் இயற்கையே, உன் ஆரவாரத்தை நிறுத்து,’ என்று ஆணையிடுவதுபோல வானத்தைப் பார்த்தபடி அவர்கள் உறுதியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். என்ன அதிசயம்! மின்னல் மறைந்தது, இடி ஒடுங்கியது. கருமேகங்களோ அப்பாவியாக வெண்மை வண்ணத்துக்கு மாறின. மழை முற்றிலுமாக நின்றுவிட்டது. தேங்கிய உபரி நீரெல்லாம் பள்ளம் நோக்கிப் பாய ஏரியின் நீர் மட்டமும் ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்தது.உடல் சிலிர்த்தார் கலெக்டர். உடனே தன் அதிகாரிகளைக் கூப்பிட்டார். ‘நீங்கள் சொன்னது அப்படியே உண்மை. உங்கள் ராமன், தன் இளவல் லட்சுமணனுடன் இந்த ஏரிக்கரை மீது நடந்து சென்று இயற்கையை எல்லை மீறாதபடி தடுத்து நிறுத்தியிருக்கிறார். உங்களுடைய பக்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்,’ என்று பெருந்தன்மையுடன் கூறியதோடு, அந்த ராமர் கோயிலை புனரமைக்கவும், அக்கோயிலின் வழிபாடுகளுக்கு எந்த இடையூறும் வராதபடியும் சில ஏற்பாடுகளைச் செய்தார்.உடனிருந்த தமிழ் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி. உடனே அவர்கள், ‘ஐயா, இந்த அற்புதம் உங்கள் பக்தியாலும் ஏற்பட்டதுதான். ஆமாம், வெள்ளம் சூழ்கிறதே, மக்கள் பரிதவிக்கிறார்களே, இவர்களைக் காப்பாற்ற வேண்டுமே என்று இரவெல்லாம் தூங்காமல் வேதனைப் பட்டீர்களே, அந்த வேதனை வெறும் சோக உணர்வல்ல, மக்கள் நல்வாழ்வை நாடிய ஆழ்ந்த தியானம், மிகப் பெரிய யாகம். அந்த ‘பக்தி’ காரணமாகத்தான் ராமபிரானும் உங்களுக்குக் காட்சியளித்திருக்கிறார். பிறர் நலனுக்காகத் துடிதுடிக்கும் உள்ளம் எந்த மதத்துக்குச் சொந்தமானதென்றாலும், அந்த உணர்வுக்கு உரிய மரியாதை செலுத்த எந்த மதக் கடவுளும் முன்வரத்தான் செய்வார்,’ என்று சொல்லி அவரைப் போற்றினார்கள். அப்படி, உள்ளமுருக தன்னை ஒருமுறை யார் நினைத்தாலும் அவர் துயர் துடைக்க ஓடோடி வருவான் இந்த மதுராந்தக ராமன்….

You may also like

Leave a Comment

five + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi