Saturday, June 1, 2024
Home » திருமணம் காணும் ஆதவன்

திருமணம் காணும் ஆதவன்

by kannappan

சூரியனார் கோவில்இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில்தான் சூரியனுக்கு கோயில் உள்ளது. ஒன்று வடக்கே ஒடிசாவிலும் மற்றொன்று தெற்கே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது. அங்கே சூரியபகவான் சாயா மற்றும் உஷா தேவியருடன் சிவசூரியன் என்ற பெயரில் அருட்பாலிக்கிறார். சூரியனைச் சுற்றி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன. சூரியனார் கோவில் எனும் இத்தலம் நவகிரகங்களுக்கென தனிப்பட்ட முறையில் அமைந்து இருப்பதால் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வருகிறார்கள்.   நவகிரக தலங்களுள் முதன்மையான இடத்தை வகிக்கிறது, இந்த சூரியனார் கோயில். தென்னாட்டில் நவகிரகங்களுக்கு எனத் தனித்தனியே சந்நதிகள் அமைந்த கோயில் இது மட்டும்தான் என்றே சொல்லலாம். சூரியன் உஷா, பிரத்யுஷா எனும் தன் தேவியருடன் நடுநாயகமாகக் கோயில் கொண்டிருக்க அவரைச் சுற்றிலும் மற்ற எட்டு கிரகங்களும் அவரை நோக்கியபடி அமைந்திருக்கிறார்கள். சூரிய பகவான் சந்நதியின் முன் சப்தா எனும் பெயர் கொண்ட குதிரை வாகனமாக உள்ளது. சப்த என்றால், ஏழு. சூரியனின் குதிரைகள் ஏழு என்பது குறிப்பிடத்தக்கது. காலவர் எனும் முனிவரை கர்மாவிலிருந்து காப்பாற்றியதால் ஏற்பட்ட சாபம் தீர, ஈசனை இத்தலத்தில் நவநாயகர்களும் தவம் செய்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. தங்களுக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து விடுபட நவகிரகங்கள் இங்குள்ள கோள்தீர்த்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனராம். இவரை வணங்க கோள்களினால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். மூலக்கருவறை தேர் போன்ற அமைப்பில் உள்ளது. தண்டி, பிங்களன் எனும் துவார பாலகர்கள் சூரிய நாராயணரின் துவார சக்திகளாக அருள்கின்றனர். இத்தல சண்டிகேஸ்வரர் சூரிய பகவானின் தேஜஸை நினைவுறுத்தும் வண்ணம் தேஜஸ் சண்டன் எனும் பெயரில் விளங்குகிறார். நவகிரகங்கள் இங்குள்ள நவ தீர்த்தங்களில் நீராடியிருக்கின்றனர். சூரியன் நீராடிய தீர்த்தமே, சூரியபுஷ்கரணி எனும் பெயரில் தல தீர்த்தமாக துலங்குகிறது. தங்கள் சாபம் நீங்க நவகிரகங்கள் தவம் செய்த வெள்ளெருக்கு வனமே தற்போதைய சூரியனார் கோயில். தெற்குப் பிராகாரத்தில் தலமரமான வெள்ளெருக்கைக் காணலாம். இத்தலத்தில் முதலில் மூலவரான சூரிய பகவானை வணங்கி, பின் அப்பிரதட்சிணமாக வந்து மற்ற கிரகங்களை வணங்குவது மரபு. வாகனம், ஆயுதம் ஏதுமின்றி நவநாயகர்களும் புன்முறுவலுடன் தரிசனமளிக்கின்றனர். இத்தல ஈசன் காசிவிஸ்வநாதராக அருள, இறைவி விசாலாட்சியாய் திகழ்கிறாள்.  ஜென்ம சனி, ஏழரைநாட்டுச் சனி, அஷ்டம சனியால் பாதிப்புக்குட்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு நிவாரணம் பெறுகின்றனர். கிரகங்களால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 12 ஞாயிற்றுக்கிழமைகள், இங்குள்ள நவ தீர்த்தங்களிலும் நீராடி, எருக்க இலையில் தயிர் சாதம் இட்டு உண்டு வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்குகின்றன.  சூரியனின் உஷ்ணத்தைக் குறைக்க அவர் எதிரில் குருபகவான் அமர்ந்த நிலையில் அருள்கிறார். இவர் இருக்கு மிடம் குருமண்டபம் என வழங்கப்படுகிறது. சிவராத்திரியன்று நான்கு கால பூஜைகளும், சூரியகிரகண காலத்தில் சூரியபகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும், ஆவணி மாதம் முதல் ஞாயிறன்று சிறப்பு வழிபாடுகளும் நடக்கின்றன. தை மாதம் ரத சப்தமி அன்று தேரோட்டமும், மறு நாள் தீர்த்தம் அளித்தலும் நடக்கிறது. சங்கராந்தியன்று சூரிய காயத்ரியுடன் சூரிய சாந்தியும் நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் 26, 27, 28 தேதிகளில் சூரியபகவானின் ஒளி கருவறையில் படர்கிறது.  கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில், ஆடுதுறையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. தை அமாவாசை தொடங்கி பத்து நாட்கள் சூரிய பகவானின் திருக்கல்யாண விழா இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

12 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi