Sunday, June 16, 2024
Home » திருக்குறள் சொல்லும் புராணக் கதைகள்..!

திருக்குறள் சொல்லும் புராணக் கதைகள்..!

by kannappan
Published: Last Updated on

குறளின் குரல்: 163திருக்குறள் நீதி நெறிகளைச் சொல்லும் நீதிநூல். ஆனால், வெறும் நீதி நூலாக மட்டுமல்லாமல் இலக்கியமாகவும் அது திகழ்கிறது என்பதுதான் அதன் சிறப்பு. தான் சொல்ல வந்த நீதிக் கருத்துகளை வலியுறுத்த, பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர்.உவமைகள் மூலம் சொல்வது, கேள்வி கேட்டு பதில் சொல்வதுபோல் சொல்வது, ஒரு பாத்திரம் பேசுவதுபோல் சொல்வது என்றபடி கருத்தை வெளிப்படுத்த அவர் பயன்படுத்தும் முறைகள் எத்தனையோ உண்டு. புராணக் கதைகளையும் கூட, அவர் தமது கருத்துகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தியுள்ளார் என்பதுதான் நாம் கவனிக்கத்தக்கது. எமனை `கூற்றுவன்’ எனவும், திருமகளை செய்யவள், தாமரையினாள், `திரு’ என்று பலவிதமாகவும், மூதேவியை தவ்வை, மாமுகடி எனவும் குறிப்பிட்டு, புராணப் பாத்திரங்களைப் பெயரளவில் பல இடங்களில் நினைவுபடுத்துகிறார். என்றாலும், பெயரளவில் அல்லாமல் கதையாகவே அவர் கையாளும் புராணப் பகுதிகள் மூன்று.1. ராமாயணத்தில் வரும் அகலிகை கதை.2. வாமன அவதாரத்தில் திருவிக்கிரமனாகத் திருமால் தோற்றம் தரும் கதை.3. சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகச் சொல்லும் கிரகணக் கதை.`ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.’(குறள் எண்:25)  ஐந்து புலன்களின் ஆசைகளையும் ஒழித்த வனுடைய வல்லமைக்கு, விண்ணுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.`மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.’(குறள் எண்:610)சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே திருமால் அளந்த உலக நிலப்பரப்பு எல்லாவற்றையும், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான் `கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்று.’(குறள் எண்:1146)காதலரைக் கண்டது ஒருநாள் தான். அதனால் ஏற்பட்ட அலரோ, சந்திரனைப் பாம்பு விழுங்கிய செய்தி போல் எங்கும் பரந்து விட்டது. ராமாயணத்தில் வரும் அகலிகை கதை அனைவரும் அறிந்தது தான். தேவர்களின் தலைவனாகிய இந்திரன் அகலிகையின் கணவர் கௌதமர் இல்லாத நேரத்தில், கௌதமர்போல் வேடம்தாங்கி வந்து அவளை வஞ்சிக்கிறான். அதை அறிந்த கௌதமர் அவனைச் சபிக்கிறார். அகலிகையையும் கல்லாகுமாறு சபிக்கிறார். அவள் சாப விமோசனம் வேண்ட ராமாவதாரத்தின் போது ராமனின் பாதங்கள் பட்டு அவள் மீண்டும் பெண்ணாவாள் என அவளுக்குச் சாப விமோசனம் அருளப்படுகிறது. பின்னாளில் தான், நிகழ்த்தும் யாகத்தை அசுரர் தொல்லைகளிலிருந்து காக்க ராமனையும், லட்சுமணனையும் அழைத்து வருகிறார் விஸ்வாமித்திரர். வேள்வி முடிந்ததும் தசரத குமாரர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்கிறார். வழியில் கல்லாய்க் கிடக்கும் அகலிகை மேல், ராமபிரானின் தூய திருப்பாதம் பட்டதும் அவள் பெண்ணாய் மீண்டும் உருக்கொள்கிறாள் என்கிறது ராமாயணம். வள்ளுவர் புலனடக்கம் உள்ளோரின் ஆற்றலுக்கு இந்திரனே சாட்சி என்கிறார். விஸ்வாமித்திரரைப் பெயர் சொல்லாமல் குறிப்பிடுகிறார்.பற்பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் திருவள்ளுவர். கம்பருக்கெல்லாம் மிகவும் முற்பட்டவர். ராமாயணக் கதை மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழர் வாழ்வில் கலந்திருக்கிறது என்பதைத் திருக்குறள் மூலம் நாம் அறிய முடிகிறது. அகலிகை கதை வள்ளுவரை மட்டுமா கவர்ந்தது? தற்காலத் தமிழ் இலக்கியவாதிகள் பலரையும் கூட அது கவர்ந்தது. வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், அகலிகை கதையால் ஈர்க்கப்பட்டு அகலிகை வெண்பா என வெண்பாக்களால் ஆன ஒரு செய்யுள்நூலை எழுதியிருக்கிறார். ச.து.சு. யோகியாரும் அகலிகை குறித்துக் கவிதை நூல் படைத்துள்ளார். தமிழின் மாபெரும் படைப்பாளியான, புதுமைப்பித்தனின் “சாபவிமோசனம்” என்ற கதையும் அகலிகை தொடர்பானதுதான். அகலிகை தொடர்பாக “அகல்யா” என்ற தலைப்பிலே இன்னொரு கதையும் எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன். கு.ப.ராஜகோபாலன் எழுதியுள்ள அகலிகை பற்றிய சிறுகதையும் தற்கால இலக்கியத்தை அணி செய்கிறது. கோவை ஞானி கல்லிகை என்ற தலைப்பில் புதிய கண்ணோட்டத்தில் அகலிகையைக் கண்டு ஒரு காப்பியம் படைத்திருக்கிறார். பிரபஞ்சன் அகலிகை குறித்து ஒரு நவீன நாடகம் எழுதியுள்ளார்.இப்படியாக, அகலிகை பற்றிய தற்கால இலக்கியவாதிகளின் படைப்புகள் பற்பல. ராமாயண அகலிகை கதையைப் பல்வேறு கோணங்களில் பார்ப்பதற்குத் தமிழில் பிள்ளையார்சுழி போட்டவர் வள்ளுவர்தான். வள்ளுவர் குறிக்கும் இன்னொரு கதை “வாமனாவதாரம்” தொடர்பானது. மகாபலியிடம் மூன்றடி மண் கேட்கிறார் குள்ள வடிவெடுத்து வாமனனாக வந்த திருமால். அவன் தானம் தர ஒப்புக்கொண்டதும் திருவிக்கிரமனாகப் பேருருவம் கொள்கிறார் அவர். ஓரடியால் மண்ணையும் மற்றோரடியால் விண்ணையும் அளந்த திருமால், மூன்றாம் அடியை எங்கே வைக்க எனக் கேட்க, தன் தலைமீது வைத்து அருள்புரியுமாறு பக்தியுடன் பணிகிறான் மன்னன் மகாபலி.அவன் வேண்டுகோளை ஏற்ற திருமால், அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த, அவன் பாதாள லோகத்திற்குள் செல்கிறான். பின்னர் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் திருமால். மூன்றாம் அடி தன் தலைமீது வைக்கப் பட்ட சமயத்தில் மகாபலி, திருமாலிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று வரம் கேட்கிறான். அந்த வரம் அவனுக்கு அருளப்படுகிறது. அப்படி மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளே ‘‘ஓணம்” திருநாளாக கேரளத்தில் கொண்டாடப்படுகிறது. தங்களைக் காண வரும் மன்னனை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டவும் மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு, அதில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். `மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்தாவிய சேவடி சேர்ப்ப, தம்பியொடும் கான் போந்து,சோ அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்தசேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?’ என திருக்குறளுக்குப் பின்னர் தோன்றிய சிலப்பதிகாரமும்திருவிக்கிரமாவதாரக் கதையைப் பேசுகிறது.`ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்துஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!’என ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவைப் பாசுரமும் ஓங்கி உலகளந்த உத்தமன் எனத் திருமாலின் திரிவிக்கிரமாவதாரப் பெருமையைக் கூறுகிறது. கண்ணக் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடும் பெரியாழ்வாரும் வாமனாவதாரத்தின் பெருமையைச் சொல்லியே  பாடுகிறார். `மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டிஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ.’ என்ற பாடலில் வரும் அடிகளில் திருமால் குறளனாக, அதாவது குள்ளமானவனாக வந்ததையும் பின் வையம் அளந்ததையும் சொல்லித் தாலாட்டுகிறார் பெரியாழ்வார். தமிழ்நாட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த திருக்கோவிலூரில்  உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. இக்கோயிலில் பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். காஞ்சிபுரத்திலும் உலகளந்த பெருமாள்கோயில் உண்டு, 30 அடி உயரத்தில் பேருருவம் கொண்டு இக்கோயிலில் காட்சி தருகிறார் திருமால். பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை மன்னன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. தமிழகத்தில், உலகளந்த பெருமாள் ஆலயங்கள் மேலும் சில உண்டு. திங்களைப் பாம்புகொண் டற்று என, சந்திரனைப் பாம்பு விழுங்கியதாக வள்ளுவர் சொல்வதும் வழக்கத்தில் உள்ள ஒரு புராணக் கதைதான்.பாற்கடலைக் கடைந்து எடுத்த அமிர்தத்தை திருமால் மோகினி வேடம் பூண்டு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பகிர்ந்தளிக்க முற்பட்டார். தேவர்களுக்கு மட்டுமே கொடுத்து அசுரர்களை ஏமாற்றுவதே திட்டம். ஆனால், சுவர்பானு என்ற அசுரன் தேவர்போல வேடமிட்டு அமிர்தத்தை விஷ்ணுவிடம் இருந்து வாங்கிக் குடித்துவிட்டான். இந்தச் செயலை சூரியனும் சந்திரனும் பார்த்து விஷ்ணுவிடம் சொன்னார்கள். விஷ்ணு ஒரு காரணத்தோடுதான் அமிர்தத்தை சுவர்பானு குடிக்கக் கொடுத்தார். கோபம் கொண்டவர் போல் காட்டிக்கொண்ட  திருமால், தனது கையில் இருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் தட்டவே தலைவேறு உடல் வேறாக விழுந்து இரண்டாக வெட்டுப்பட்டான் சுவர்பானு. ஆனாலும், அமிர்தம் குடித்ததால் உயிர்போகவில்லை.சுவர்பானு, ஒப்பந்தத்தை மீறி அமிர்தத்தை ஏமாற்றிக் குடித்ததால் அசுரர்களுக்கு அமிர்தம் கிடையாது என்று அறிவித்தார் திருமால். அமிர்தத்தை அசுரர்களுக்குக் கொடுக்காமல் இருப்பதுதானே திருமாலின் திட்டம்? ஏமாற்றமடைந்த அசுரர்கள் கோபம் முழுவதும் சுவர்பானு மீது திரும்பியது. வெட்டுப்பட்டு துடித்துக்கொண்டிருந்த சுவர்பானுவை தங்களின் குலத்திலிருந்தே விலக்கி வைத்துவிட்டார்கள் அசுரர்கள். தனது நிலையினைக் கூறி பிரம்மாவிடம் முறையிட்டான் சுவர்பானு. இதற்கு மாற்று ஏற்பாடு மகாவிஷ்ணுவால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறி கைவிரித்து விட்டார் பிரம்மா. விஷ்ணுவைச் சரணடைந்தான் சுவர்பானு. கருணைகொண்ட திருமால் பாம்பு உடலை மனிதத் தலையோடு இணைத்தார். அதுபோலவே பாம்புத்தலையை மனித உடலோடு இணைத்தார். மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு என்றும், பாம்புத் தலையும் மனித உடலும் கொண்டவர் கேது என்றும் அழைக்கப்பட்டனர். உயிர் ஒன்றாக இருந்தாலும் எதிர் எதிர் திசையில் அவர்கள் சஞ்சரிக்கின்றனர்.தங்களின் இந்த நிலைக்குக் காரணமான சூரியன், சந்திரனைப் பழிவாங்க பிரம்மாவிடம் தவமிருந்து வரம் பெற்றனர். ஓர் ஆண்டிற்கு நான்கு முறை சூரியன், சந்திரனின் பார்வை பூமியின் மேல் விழாமல் இருக்கும் என்ற வரத்தைக் கொடுத்தார் பிரம்மா. இதுவே சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் சொல்லப்படுகிறது. சூரிய சந்திரனை ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குவதாக வழக்கில் உள்ள கதையின் சுருக்கம்  இதுதான்.கிரகணத்தன்று நிலவைப் பாம்பு விழுங்கு வதான பேச்சு ஊரெங்கும் எழும். மக்கள் கதவை அடைத்து வீட்டுக்குள் இருப்பார்கள். கிரகணத்தைப் பற்றியே பலநாள் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த ஒருநாள் செய்தி பலராலும் பலநாளும் பேசப்படுவதுபோல் தலைவனைத் தலைவி பார்த்ததென்னவோ ஒரு நாள் மட்டும்தான். ஆனால், அதைப் பற்றிய `அலர் பேச்சு’ எங்கும் பரவிவிட்டதே என அங்கலாய்க்கிறாள் தலைவி, இப்படி கிரகணக் கதையைக் காமத்துப் பாலில் உவமையின் பொருட்டாக எடுத்தாள்கிறார் வள்ளுவர். நம் ஆலயங்கள் பலவற்றில் நவகிரக சந்நதி உண்டு. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவையே நவ கிரகங்கள் எனப்படுகின்றன, நவகிரக வழிபாடு என்பது ராகு கேது ஆகிய கிரகங்களையும் உள்ளிட்ட வழிபாடே ஆகும். சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி போலவே ராகு கேது பெயர்ச்சியும் முக்கியமானதாகும். ஜாதகத்தில் ராகு கேது தோஷமுடையவர்களுக்கான பரிகாரத் தலங்களும் பல உண்டு. திருக்களாச்சேரி ஆலயம், சென்னை கோவிழி யம்மன் ஆலயம், காஞ்சி மாகாளீஸ்வரர் கோயில். திருப்பாம்புரம் ஆலயம், திருமுருகன் பூண்டி ஆலயம் போன்றவை அவற்றில் சில. புராணக் கதைகள் நம் உரையாடல்களில் இன்றும் கூடப் பயன்படத்தான் செய்கின்றன. பொய்யாக வருந்துபவர்களைப் பார்த்து நீலிக் கண்ணீர் வடிக்காதே என்றும், அதிகம் உறங்குபவர்களைப் பார்த்து கும்பகர்ணனைப் போல உறங்காதே என்றும் நாம் சொல்வதெல்லாம் புராணக்கதைக் கூறுகளை உள்ளடக்கியது தானே? புராணங்கள் தமிழர்களின் வாழ்வோடு கலந்தவை என்பதைப் புரிந்துவைத்திருந்த வள்ளுவர், தம் கருத்தைத் தெளிவாய்ச் சொல்லவும் வலிமைப்படுத்தவும் அந்தக் கதைகளைப் பயன்படுத்தியுள்ளது திருக்குறளின் எழிலை அதிகப்படுத்துகிறது.(குறள் உரைக்கும்)திருப்பூர் கிருஷ்ணன்…

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi