Wednesday, May 22, 2024
Home » தப்பியோடும் மக்களையும் விடவில்லை ரயில் நிலையம் மீது ரஷ்யா குண்டுவீச்சு: 50 பேர் பலி; 100 பேர் படுகாயம்

தப்பியோடும் மக்களையும் விடவில்லை ரயில் நிலையம் மீது ரஷ்யா குண்டுவீச்சு: 50 பேர் பலி; 100 பேர் படுகாயம்

by kannappan

கீவ்: கிழக்கு உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்காக ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள் காத்திருந்த சமயத்தில், அங்கு ரஷ்ய படை ராக்கெட் குண்டுவீசி கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் 50 பேர் உடல் சிதறி பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உக்ரைனில் ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடத்தி வரும் ரஷ்யா, மனிதாபிமானமின்றி கொடூரமான போர்க் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. தலைநகர் கீவ்வின் அருகே உள்ள புச்சா நகரில் ஏராளமான பொதுமக்களை கட்டி வைத்து, சித்ரவதை செய்து, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது சமீபத்தில் அம்பலாமானது. இந்நிலையில் கீவ்வில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறி, டான்பாஸ் எனப்படும் கிழக்கு உக்ரைனை முழுமையாக கைப்பற்றி நாட்டை பிளவுபடுத்த திட்டமிட்டுள்ளன. கிழக்கு உக்ரைனை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் மேற்கு உக்ரைன் நோக்கி செல்ல வேண்டுமென உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது. அதன்படி, டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் கிரமடோர்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் குழந்தைகள், உடைமைகளுடன் நாட்டின் பிற பகுதிகளுக்கு தப்பி வருகின்றனர். இந்நிலையில், கிரமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் நேற்று சுமார் 4000 பேர் வரை ரயிலுக்காக காத்திருந்த போது, ரஷ்ய படையினர் அங்கு 2 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் 50 பேர் உடல் சிதறி பலியாயினர். ரயில் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே மக்கள் சடலமாகவும் அவர்கள் கொண்டு வந்த பெட்டி, படுக்கைகள் அருகிலும் கிடந்தன. இது மட்டுமின்றி, ரஷ்ய கிளர்ச்சிப் படை வசமுள்ள டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் இரு பிராந்தியத்திலும், மக்கள் ரயில் மூலமாக வெளியேறுவதை தடுக்கம் கெட்ட நோக்கத்தில் ரஷ்ய படைகள் ரயில் பாதையை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக பிராந்திய மேயர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். லுகான்ஸ்கிற்கு வடக்கே உள்ள ஷாஸ்டியா நகரில் மக்கள் வெளியேற பயன்படுத்தும் ரயில் பாதையை ரஷ்ய வீரர்கள் குண்டுவீசி தகர்த்துள்ளனர். மற்றொரு ரயில் நிலையம் மீதுள்ள மேம்பாலம் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு, கிழக்கு உக்ரைனை விட்டு மக்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ரயில் மூலம் வேறு பகுதிக்கு செல்ல முயற்சிக்கும் நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.உலகளவில் தற்போது வைரலாகி உள்ள புகைப்படத்தில் உள்ள கைக்கு சொந்தக்காரர் 52 வயதான இரினா பில்கினா. உக்ரைனில் உள்ள புச்சா நகரில் பொதுமக்கள் மீது  ரஷ்ய படைகள் நடத்திய ஈவு இரக்கமற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களில் இவரும் ஒருவர். தெருக்களில் சிதறிக் கிடந்த சடலங்களை டிரோன் மூலம் ஒரு பத்திரிகை புகைப்படக்காரர் எடுத்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று. கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது. இந்த கைகளை பார்த்ததும், அதில் உள்ள சிகப்பு, வெள்ளை நெயில் பாலிசை வைத்தே, இது பில்கினா என்பதை கண்டு பிடித்துள்ளார் புச்சா நகரை சேர்ந்த அழகுக்கலை நிபுணரான சுபசேவா. ரஷ்ய படைகளிடம் இருந்து காப்பாற்ற தனது மகள்களை போலந்துக்கு அனுப்பிய பில்கினா,  புச்சா நகரில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். கடந்த மார்ச் 6ம் தேதி புச்சா நகரை விட்டு வெளியேற மற்ற வாகனங்கள் கிடைக்காததால் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, ரஷ்ய வீரர்கள் இவரை சுட்டு கொன்றுள்ளனர்.கொத்து கொத்தாக மக்கள் படுகொலை புச்சாவை மிஞ்சம் கோரக் காட்சிகள் ஒரே இடத்தில் தூக்கில் 50 சடலம்ரஷ்ய படைகள் வெளியேறிய தலைநகர் கீவ்வின் புறநகர் பகுதிகளில் தற்போது மீட்புப் பணிகள் நடக்கின்றன. இதில், கொத்து கொத்தாக சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட புச்சா நகரை விட போரோடியன்கா நகரின் நிலைமை இன்னும் கொடூரமாக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார். கீவ் நகரில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள போரோடியன்காவில் நொறுக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 300க்கும் மேற்பட்டோர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 50 சடலங்கள் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டதாகவும் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். நகரின் கோரக் காட்சிகளை காட்டும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இங்கு ராணுவ தளங்கள் எதுவும் இல்லாத நிலையில், முழுக்க முழுக்க மக்களை குறிவைத்து மட்டுமே ரஷ்யா தாக்குதல்  நடத்தியிருப்பதாகவும், கீவ்வை சுற்றி உள்ள புச்சா, போர்டோடியன்கா, இர்பின் நகரில் இருந்து 650 சடலங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 40 பேர் குழந்தைகள் என்றும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை வழக்கம் போல் ரஷ்யா மறுத்துள்ளது.மிக அதிக உயிரிழப்பு ஒப்புக்கொண்டது ரஷ்யாஉக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்களை கொடூரமான சுட்டுக் கொன்றதற்காக, ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அளித்த பேட்டியில், ‘‘உக்ரைன் போரில் ரஷ்ய படை குறிப்பிடத்தக்க அளவில் உயிரிழப்புகளை சந்தித்து வருந்தக்கது. வரும் நாட்களில் இப்போரில் ரஷ்யா தனது இலக்கை அடையும் என நம்புகிறேன்’’ என்றார். உக்ரைன் போரில் ரஷ்யா சுமார் 15000 வீரர்களை இழந்திருப்பதாக உக்ரைன் கூறுகிறது. ஆனால் இதை ஒப்புக் கொள்ளாத ரஷ்யா, முதல் முறையாக நிறைய வீரர்களை இழந்திருப்பதை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.* உக்ரைனில் இதுவரை 103 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் மீது ரஷ்யா குண்டுவீசி போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.* உக்ரைன் போரால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை ஏறுவதை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கிய சர்வதேச எரிசக்தி அமைப்பு இதுவரை கையிருப்பில் இருந்த 6 கோடி பேரல் கச்சா எண்ணெய்யை விடுவித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 6 மாதத்தில் 12 கோடி பேரல் கச்சா எண்ணெய் விடுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உக்ரைனுக்கு புறப்பட்ட ஆஸி.யின் 4 புஷ்மாஸ்டர்கடந்த மாதம் 31ம் தேதி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயணம் செய்ய உதவும் புஷ்மாஸ்டர்  கவச வாகனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, உக்ரைனுக்கு 20 புஷ்மாஸ்டர் வாகனங்கள் வழங்கப் போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது. முதல்கட்டமாக உக்ரைன் தேசிய கொடி ஒட்டப்பட்ட 4 புஷ்மாஸ்டர் வாகனங்கள் ராணுவ விமானம் மூலம் பிரிஸ்பேனில் இருந்து ஐரோப்பாவுக்கு நேற்று அனுப்பப்பட்டது. 20 புஷ்மாஸ்டர் கவச வாகனங்களின் விலை ரூ.280 கோடி.போர்கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு தடைபொருளாதார ரீதியாக ரஷ்யாவுக்கு தண்டனை வழங்க, அந்நாட்டின் பல்வேறு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து தடை விதித்து வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவின் மிகப்பெரிய போர்கப்பல் கட்டும் நிறுவனத்திற்கும், உலகின் மிகப்பெரிய வைர சுரங்க நிறுவனமான ரஷ்யாவின் அல்ரோசாவுக்கும் நேற்று தடை விதிக்கப்பட்டது. இந்நிறுவனங்கள் அமெரிக்க நிதி அமைப்பில் எந்தவொரு பரிவர்த்தனையையும் இனி மேற்கொள்ள முடியாது. …

You may also like

Leave a Comment

three + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi