Monday, June 17, 2024
Home » செல்வ சிறப்பு நல்கும் ஸ்ரீராமர்

செல்வ சிறப்பு நல்கும் ஸ்ரீராமர்

by kannappan

பத்ராசலம். கம்மம், தெலங்கானாஸ்ரீ ராமர் கோயில் கொண்டுள்ள பத்ராசலம் தலம் தெலங்கானா மாநிலத்தில் கம்மம் மாவட்டத்தில் கோதாவரி நதி தீரத்தில் அமைந்துள்ளது. மேருவுக்கும்,  மேனகாவிற்கும் பிறந்த ‘பத்ரன்’ கோதாவரி நதிக்கரையில் ஸ்ரீராமனின் அருள் வேண்டி தவமிருந்தார். சீதையைத் தேடித்திரிந்த ராமர், பத்ரனுக்கு தரிசனமளித்தார். ராமர் தன் சிரசின் மேல் அமர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் பத்ர முனிவர். தான் திரும்பி வரும் வழியில் அக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்களித்தார் ராமர். ஆனால் ராமாவதாரத்தில் அதனைப் பூர்த்தி செய்யவில்லை. முனிவரின் கடுமையான தவம் தொடர்ந்தது.  ராமாவதாரத்திற்குப் பிறகு ஸ்ரீமகாவிஷ்ணு வைகுண்ட ராமனாக பத்ர கிரிக்கு விரைந்து வந்தார்.  சீதையோடும், லட்சுமணனோடும் விரைந்து வந்தவர், வலது கரத்தில் சங்கும் இடது கரத்தில் சக்கரமும் மற்ற இரு கரங்களில் அம்பும், வில்லும் ஏந்தி  சீதையை இடது தொடையில் அமர்த்தி லட்சுமணன், ராமனின் இடப்புறம் நிற்க பத்ரனின் சிரசின் மேல் அமர்ந்தார். அன்று முதல் இத்தலம் பத்ராசலம் என்று போற்றப்படுகிறது. அசலம் என்றால் மலை, கிரி. ‘போகால தம்மாக்கா’ என்ற ஸ்ரீராம பக்தை பத்ராசலம் தலத்திலிருந்து ஒரு மைல்  தூரத்திலுள்ள ‘பத்ரிரெட்டி பாளையம்’ என்ற இடத்தில் வசித்து வந்தாள்.  ஒரு நாள் அவள் கனவில் தரிசனமளித்த ராமர்,  பத்ர கிரி காடுகளில் தன் மூர்த்திகளை முனிவர்களும், ரிஷிகளும் தொழுது வருவதாகவும் அதை கண்டெடுத்து பூஜித்து உய்வடையும்படியும் கூறினார். விழித்தெழுந்த தம்மக்கா காடுகளின் இடையே ஒரு எறும்புப் புற்றுக்குள் ஸ்ரீராமரின்  விக்ரகத்தைக் கண்டு கோதாவரி நீரைக் குடம் குடமாகப் பொழிந்து தெய்வ விக்ரகங்களை வெளிக் கொணர்ந்து அங்கேயே ஒரு பந்தலிட்டு பூஜையைத் தொடங்கினாள். மீண்டும் அவள் கனவில் தோன்றிய ஸ்ரீராமர், பின்னாளில் தன் பக்தன்  ஒருவன் இவ்விடத்தில் கோயில் கட்டுவான் என்று எடுத்துரைத்தார்.   1620ல் ‘நீலகொண்டபல்லெ’  கிராமத்தில் லிங்கன்ன மூர்த்திக்கும் காமாம்பாவிற்கும் ‘கஞ்செர்ல கோபன்னா’ மகனாகப் பிறந்தார். கோபன்னாவின் மாமன் அக்கன்னா, ‘தானீஷா’ என்றழைக்கப்பட்ட ‘நாவாப் அப்துல் ஹுசைன் ஷா’வின் அரசாங்கத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியில் இருந்தார். அவர் சிபாரிசின் பேரில் கோபன்னா ‘பல்வோன்ச்ச பரகனா’ என்ற இடத்திற்கு தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.  மக்களிடம் இருந்து வரி வசூல் செய்வது கோபன்னாவின் முக்கியப் பணி.ஒரு முறை ‘பல்வோன்ச்ச பரகனா’ விலிருந்து கிராம மக்கள் பத்ராசலத்தில் நடக்கும் திருவிழாவிற்கு யாத்திரை மேற்கொள்வதை கவனித்த கோபன்னா தானும் அதில் சேர்ந்து கொண்டார். அங்கு  ஓலைப் பந்தலின் கீழ் கோயில் கொண்டிருந்த தெய்வீக மூர்த்திகளின் அழகில் சொக்கிப்போனார்.  பக்த ராமதாசரானார். கிராம மக்களிடம்  சந்தா வசூல் செய்து கோயிலைக் கட்டி முடிக்கத் தீர்மானித்தார். ஆனால் போதுமான தொகை வசூலாகாத நிலையில் பக்தர்கள் ஒரு வேண்டுகோள் வைத்தனர். அரசனுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தில் கோயில் திருப்பணிகளை முடித்து விடலாம். அறுவடை முடிந்ததும் மன்னனுக்குச் செலுத்த வேண்டிய தொகையை மக்கள் அளித்து விடுவார்கள். இந்த யோசனையை ஏற்ற ராமதாசர்   தானீஷாவிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் பத்ராசலத்தில் கோதாவரி நதிக்கரையில் ராமருக்கு கோயிலை கட்டினார். கோயில் கட்டி முடியும் தருவாயில் சுதர்ஷன சக்கரத்தை பொருத்துவதில் தடை  ஏற்பட்டது. ஸ்ரீராமர், ராமதாசரின்  கனவில் தோன்றி கோதாவரி நதியில் மூழ்கி எழுந்தால் உனது ஆசை நிறைவேறும் என்றார். அதன்படி நதியில் மூழ்கி எழுந்தபோது சுதர்ஷன சக்கரம் கிடைத்தது. அது கோயிலில் பொருத்தப்பட்டது. கோயில் கட்டி முடிந்ததும் வரிப்பணத்தை அரசு கஜானாவில் செலுத்தாத குற்றத்திற்காக, ராமதாசரை  ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டையில் 12 ஆண்டுகள் கடுஞ்சிறையில் வைத்தான் மன்னன். சிறையின் கொடுமைகளைத் தாளாத ராமதாசர்,  ராமர் மேல் பல பாடல்களை நெக்குருகப் பாடினார். (அவை இன்றளவும் பக்த ராமதாசர் கீர்த்தனைகளாக மக்களால் பாடப்பட்டு வருகின்றன) மனமிறங்கிய ஸ்ரீராமர், ராமோஜி, லட்சுமணமோஜி என்ற மனித உருவில் வந்து ஆறு லட்சம் மொஹர்களை அரசன் தானீஷாவிடம் செலுத்தி ராமதாசரை விடுவித்தனர். அதனால் மனம் திருந்திய மன்னன், கோயில் திருப்பணிகளில் மனமுவந்து தானும் ஈடுபட்டான். அந்த  தங்க மொஹர்களில் இரண்டினை இன்றும் பத்ராசல ராமர் கோயிலில் காணலாம். தானீஷா அன்று முதல் அக்கிராமத்தில் வசூலாகும் வரிப்பணத்தை கோயிலுக்கே செலவிட்டதோடு ஸ்ரீராம நவமியன்று நடைபெறும் சீதா ராம கல்யாண உற்ஸவத்திற்கு யானை மேல் முத்துக்களை ஏற்றி அனுப்பி கெளரவித்தான். இந்த வழிமுறை இன்றளவும் மாநில அரசால் தொடரப்படுகிறது. அம்மாநில முதலமைச்சர் பத்ராசல ஸ்ரீசீதா ராம கல்யாண உற்ஸவத்திற்கு தலை மேல் சீர் வரிசை ஏந்தி வந்து சமர்பித்து கௌரவிக்கும் வழக்கம் உள்ளது. பக்த ராமதாசர் கோயில் வழிபாட்டு முறைகளை சிலாசாசனமாக தூண்களில் செதுக்கச் செய்துள்ளார். அதன்படியே இன்றைக்கும் சுப்ரபாத சேவை முதல் பவளிம்பு சேவை வரை நடத்தப்பட்டு வருகிறது. பக்த ராமதாசர் 68 வருடங்கள் உயிர் வாழ்ந்து ஸ்ரீ ராமரைப் பாடிப்பரவசமடைந்து பின் ராமனின் பாதங்களை அடைந்தார். பத்ராசலம் ஸ்ரீராமர் கோயில் ஹைதராபாத்திலிருந்து கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும் கம்மம் நகரிலிருந்து 120 கி.மீ. தூரத்திலும் உள்ளது. ‘பத்ராசலம் ரோடு’ என்று பெயர் கொண்ட ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.பத்ராசலம் ஒரு காலத்தில் தண்டகாரண்யக் காட்டின் ஒரு பகுதியாக இருந்தது. வனவாசத்தின் போது ஸ்ரீ ராமர் சீதையுடனும், லட்சுமணனுடனும் இங்கு வசித்தார்கள். பொன்மானைப் பார்த்து சீதை ஆசைப்பட்டதும் ராவணன் வந்து சீதையை அபகரித்ததும் இங்குதான் நிகழ்ந்தன.- ராஜி ரகுநாதன்…

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi