Monday, June 17, 2024
Home » செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன?

செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன?

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்சம்மர் ஸ்பெஷல்‘சுட்டெரிக்கும் வெயில் நம் உடலின் வெப்பத்தை அதிகமாக்கும்போது, நம் உடலை வெப்பமாகாமல் காப்பாற்ற வியர்வை அதிகமாக சுரந்து நம் உடலையும், தோலையும் அதிக சூடாக்காமல் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.; அதே நேரம் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து அதி வேகமாக குறைகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் நாம் வெயில் காலங்களில் கவனமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஹேமலதா.வெயில் காலத்தில் நம் நலன் காக்க செய்ய வேண்டிய ஆலோசனைகளையும் வழங்குகிறார்.நீர்ச்சத்து குறைபாடு, உடற்சூடு அதிமாகுதல், சரும நோய்கள், ஹீட் ஸ்ட்ரோக், வயிற்றுப்போக்கு, கண் நோய்கள், வைரஸ் காய்ச்சல்கள் போன்றவை வெயில் காலத்தில் வரக்கூடும். அதனால் வெயில் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி வெளியில் செல்லக்கூடாது. குறிப்பாக, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகளும், பெரியவர்களும், கர்ப்பிணி பெண்களும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போது குழந்தைகளுக்கு பள்ளிகளில் தேர்வுகள் முடிவுற்று கோடை விடுமுறை ஆரம்பமானதால் அதிகமாக வெளியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பிள்ளைகளுக்கு Indoor Games (Chess, Carom Board) மற்றும் நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளாகிய பல்லாங்குழி, தாயம் மற்றும் பரமபதம் போன்ற விளையாட்டுகளை விளையாட ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் விளையாடி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் அவர்களை கை கால்கள் மற்றும் முகம் நன்றாக கழுவி 2 டம்ளர் தண்ணீர் குடிக்க வைக்கவும். ஏனெனில் விளையாடும்போது அதிக அளவு வியர்வை வெளியேறுவதால் நமது உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும்.அப்படி வெயிலில் செல்ல நேரிட்டால் கண்டிப்பாக குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் கருப்பு உடைகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கி நமது தோலுக்கு ஊறு விளைவிக்கும். வெயில் காலங்களில் நாம் அதிகமாக உடல் தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உடை, கம்பளி, நைலான், சிந்தட்டிக், பாலியெஸ்டர் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். நம் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறாமல் இருப்பதற்கு நாம் குறிப்பாக பெரியவர்கள் 2 – 3 லிட்டர் தண்ணீரும், சிறியவர்கள் 8 டம்ளர் தண்ணீரும் குடிக்க வேண்டும். இது தவிர மோர், இளநீர், எலும்பிச்சை நீர், திராட்சை பழரசம், தர்பூசணி, நுங்கு போன்ற பழ ரசங்களை குடிப்பது நன்மை பயக்கும். வீட்டில் தயாரித்த ORS தண்ணீர் (உப்பு சர்க்கரை கரைசல்) குடிப்பது நன்று. (2 பங்கு உப்பு 1 பங்கு சர்க்கரை) செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது நன்று. அதேபோல் வெளியில் சென்று வந்தவுடன் குளிர்ந்த தண்ணீர் குடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக மண் பானையில் நீர் ஊற்றி அதில் வெட்டிவேர் போன்ற மூலிகைகள் இட்ட குளிர்ந்த நீரை அருந்தலாம்.தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்பொரித்த உணவு வகைகள், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பீட்சா, பர்கர், ஃபிரைட் ரைஸ், அதிக காரமுள்ள மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக அதிக அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை எளிதில் ஜீரணம் ஆகாது.சேர்க்க வேண்டிய உணவுகள்ஃப்ரெஷ்ஷான பழங்கள், கீரை வகைகள், நீர்ச்சத்து நிறைந்த காய்களாகிய முள்ளங்கி, நூக்கல், சுரக்காய், பூசணி, சௌசௌ, வெள்ளரிக்காய் போன்றவற்றை தாராளமாக உட்கொள்ள வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள் நமது உடலுக்கு தேவையான தாது உப்புகளான சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், செலினியம் போன்றவை நிறைந்துள்ள பழங்களான செர்ரி, ப்ளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி, லிச்சி, ஆரஞ்சு, சாத்துக்குடி, முலாம் பழம், கிர்ணிப்பழம், அன்னாசி ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் உடற்சூட்டை தவிர்க்கலாம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய மோர் சேர்த்த பழைய சோற்று நீராகாரம் மிகவும் நல்லது. ஏனெனில், அவற்றில் உள்ள நம் உடலுக்கு தேவையான நுண்ணுயிரிகள் வைட்டமின் பி12 உற்பத்தி செய்வதற்கு உறுதுணையாகிறது.உடற்சூட்டை தவிர்க்கும் முறைகள்உடற்சூட்டை தவிர்ப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இருமுறை வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.; குறிப்பாக, வெயிலில் சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் உடற்சூடு தணியும். இந்த கடுமையான கோடை காலத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் நீண்ட தூரம் வெளியூர் மற்றும் வறண்ட மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதைத் தவிர்க்கவும். அவ்வாறு சென்று வந்தவுடன் குளிக்கவும் அல்லது குளிர்ந்த நீரில் துண்டை நனைத்து உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பதால் நாம் வெப்பத்தினால் உண்டாகும் மயக்கத்தினைத் தவிர்க்கலாம்.ஹீட் ஸ்ட்ரோக்கை தவிர்க்கும் முறைகள்கோடை காலத்தில் உடல் அதிகமாக வெப்பமடைந்து மயக்கம், வாந்தி, நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு போன்றவைகள் சிறியோர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும். இரவு நேரங்களில் உறங்கும்போது ஜன்னலை திறந்து வைத்து குளிர்ந்த காற்றில் உறங்குவது நல்லது.சரும நோய்களை தவிர்க்கும் முறைகள்சில குறிப்பிட்ட சரும நோய்கள் வெயில் காலத்தில் அதிகமாக வரும். குறிப்பாக வியர்க்குரு அதிகமாக காணப்படும். ஒரு நாளைக்கு இருமுறை குளிப்பதும், உடல் தளர்வான ஆடையை அணிவதும் நல்லது. பவுடர்களை பயன்படுத்துவதினால் நன்மை ஏற்படும் என்பது நிரூபிக்கப்படவில்லை. மேலும் அக்குள் பகுதிகளில் நேரடியாக வாசனை திரவியங்களை தெளிக்கக் கூடாது.; ஆடைகளின் மீதுதான் தெளிக்க வேண்டும்.தோல் கருகுதல் (Tanning) தடுக்கும் முறைகள்* காலை 11 மணி முதல் 2 மணி வரை வெளியில் செல்லக் கூடாது. பெண்கள் துப்பட்டாவை வைத்து முகத்தை மறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் அவை வெயிலில் சூரிய கதிர்களை உடல் கிரகித்துக் கொள்ளாமல் வெளியில் தள்ளிவிடும். Sun Screen Lotion (SPF 30) வெயிலில் செல்லும் அரை மணி நேரத்திற்கு முன்பாக தடவிக் கொள்ள வேண்டும்.படர்தாமரையைத் தடுக்கும் முறைகள்2 முறை அல்லது அடிக்கடி குளிக்க வேண்டும். தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். ஒருவர் உபயோகிக்கும் துண்டு, சோப்பு மற்றும் துணிவகைகளை மற்றொருவர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.பருக்கள் மற்றும் கட்டிகளைத் தடுக்கும் முறைகள்மாம்பழம் உட்கொள்வதால் பருக்கள் மற்றும் கட்டிகள் வருவதாக கூறப்படுவது தவறாகும். முகத்தில் அதிகமாக அழுக்கு சேர்ந்து அதனால் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படுகிறது. எனவே, அடிக்கடி முகம் கழுவ வேண்டும்.; பருக்கள் மற்றும் கட்டிகள் அடிக்கடி வந்தால் சருமநோய் நிபுணரை அணுகவும்.கண் நோய்களை தவிர்க்கும் முறைகள்மெட்ராஸ் ஐ, கண் கட்டிபோன்றவைகள் வைரஸ் கிருமிகளினால் பரவும்.; அப்படி வரும்போது வெயிலில் வரக்கூடாது. வீட்டில் தனியாக ஓய்வெடுக்க வேண்டும். அவ்வாறு வெளியில் வர நேரிட்டால் கண்ணாடி அணிந்து கொள்வதால் மற்றவர்களுக்கு இந்நோய் பரவாமல் தடுக்கலாம். மேலும் மருத்துவரின் ஆலோசனையின்படி சொட்டு மருந்து போட வேண்டும்.வைரஸ் தொற்று கிருமியை தவிர்க்கும் முறைகள்* தட்டம்மை, சின்னம்மை போன்றவை வெயில் காலத்தில் அதிகமாக பரவும். அவை பரவாமல் தடுக்க தடுப்பூசிகளை முன்பே போடுவது நல்லது. அம்மை வந்தவர்களை குளிர்ச்சியான இடங்களில் தங்க வைப்பது நல்லது. சின்னம்மை உண்டானவர்கள் ஆங்கில வைத்திய முறையில் உண்டான மருந்துகளை பயன்படுத்துவது நல்லது.* பழங்கள் மற்றும் நீராகாரம் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் சிறியவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் சின்னம்மை போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளக் கூடாது.வயிற்றுப் போக்கை தவிர்க்கும் முறைகள்வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி போன்றவை வெயில் காலத்தில் அதிகமாக உண்டாகும் வாய்ப்பு உள்ளது.; சாலையோரங்களில் எளிதில் கிடைக்கும் சுத்தமில்லாத பழச்சாறுகளை குடிக்கக் கூடாது. வயிற்றுப்போக்கு வந்தவர்கள் உப்பு சர்க்கரை கரைசலை தாராளமாக எடுத்துக் கொள்வது நல்லது. மேற்கூறிய கோடை காலத்தில் வரக்கூடிய அனைத்து நோய்களுக்கும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இந்த கோடை காலத்தில் நம்மை காத்துக் கொள்வோம். – க.இளஞ்சேரன்

You may also like

Leave a Comment

1 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi