Saturday, June 1, 2024
Home » சென்னை மாநகராட்சி பகுதி முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு பணியில் 3,319 பணியாளர்கள்: வார்டு வாரியாக நியமனம்,ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை மாநகராட்சி பகுதி முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு பணியில் 3,319 பணியாளர்கள்: வார்டு வாரியாக நியமனம்,ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

by Ranjith

 

சென்னை, ஜன.31: சென்னை மாநகராட்சி முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு பணியில் 3,319 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, வார்டு வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்பு பணிகளை மேயர் பிரியா திரு.வி.க. நகர் மண்டலம், 74வது வார்டு அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக, மேயர் தலைமையில் கொசு ஒழிப்பு தொடர்பான சுகாதார உறுதிமொழியை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதை தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, செயின்ட் மேரிஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் விளையாட்டு மைதானத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு ஆகியோர் தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை தொடங்கி வைத்தனர். அப்போது, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மழைக்காலம் முடிவடைந்த நிலையில் ஆங்காங்கே சாக்கடை தண்ணீர் இருக்கலாம். வீடுகளில் நல்ல தண்ணீர் சேகரிக்கும்போது கொசுக்கள் உருவாகலாம்.

இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் எல்லா மண்டலங்களிலும் வார்டு வாரியாக தீவிர கொசு ஒழிப்பு பணிகளை தொடங்கியுள்ளோம். வழக்கமாக, பணிகளுக்கு இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். இந்த பணிகளில் வார்டு வாரியாக பணியாளர்களை நியமித்துள்ளோம். தற்போது மேற்கொள்ளப்படும் தீவிர கொசு ஒழிப்பு பணிக்கென 937 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,382 ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 3319 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 362 மருந்து தெளிப்பான்கள், 69 பவர் ஸ்பிரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 202 ஸ்பிரேயர்கள், 238 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 65 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுமார் 17 லட்சம் வீடுகள் உள்ளன. லட்சக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. கொசுக்களை பொறுத்தவரை பலவகை உள்ளது. நல்ல தண்ணீரில் வளரக்கூடிய கொசுக்கள் மலேரியா, டெங்கு போன்ற நோய்களை உருவாக்கும்.

இதை நாம் கவனக்குறைவாக விட்டுவிடுகிறோம். நமது வீடுகளுக்கு அருகில் உள்ள மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருட்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் போன்றவை) ஆகியவற்றை கண்டறிந்து கொசுப் புழுக்கள் இருப்பின் அதனை அழித்திடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பகுதிகளையும் சிறுவட்டங்களாக பிரித்து, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களாக பிரித்து கொசுப் புழுக்களை அழிக்கும் பணி நடந்து வருகிறது.

நல்ல தண்ணீரில் வளரக்கூடிய கொசு ஒழிப்புக்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை. அனைத்து பள்ளிகள், பூங்காக்கள், அரசு கட்டிடங்களில் உள்ள தேவையற்ற மழைநீர் தேங்கும் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. தேங்கிய நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்வாய்களில் கொசுக்கள் வளரா வண்ணம் கொசுப்புழு கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும் அரசு மருத்துவமனை, சென்னை மாநகராட்சி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் பகுப்பாய்வு கூடங்களில் காய்ச்சல் கண்டவர்களின் விவரங்கள் தினந்தோறும் பெறப்படுகிறது.

இதை சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு உடன் அனுப்பி உரிய சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, கொசுத்தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா எனவும் கண்காணிக்கப்படுகிறது. அதிக காய்ச்சல் கண்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ரத்த தடவல் எடுக்கப்பட்டு உரிய சிகிச்சை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர் அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்களை கொண்டு பள்ளி இறைவணக்கத்தின் போது டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை, மழைக்காலங்களில் வரக்கூடிய நோய்களை எதிர்கொள்ள போதிய அளவு மருந்துகள், உபகரணங்களுடன் போதுமான மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

காலி இடங்கள் மற்றும் புதிய கட்டுமானங்கள் ஆய்வு செய்யப்பட்டு தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கொசுப்புழு கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நடவடிக்கை எடுக்காத கட்டிட உரிமையாளர்கள் மீது பொதுசுகாதார சட்டத்தின்படி தாக்கீது வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் களஆய்வு மேற்கொள்ள வரும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின் போது, கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், கவுன்சிலர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

* தெருவை நம்பி மாடு வளர்க்க கூடாது
தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்தாலும், சென்னையில் சில பகுதிகளில், தொடர்ந்து அதன் பிரச்னை இருந்து கொண்டே இருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். மாடு வளர்க்கூடாது என்ற எண்ணத்தில் இதை சொல்லவில்லை. தெருவை நம்பி மாடு வளர்க்கக் கூடாது.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால், தேவையான இடவசதி உள்ளவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் வழங்குவது, பொது இடம் கொடுக்க வேண்டும் என்றால் ஊரை தள்ளி தான் வழங்க முடியும். வேறு வழியில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு ஒரு கோடி அளவுக்கு அபராதம் போட்டுள்ளோம். இந்த ஆண்டு ஒரு மாதத்துக்குள் ரூ.5லட்சம் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

seven − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi