Monday, June 17, 2024
Home » சென்னையில் ஒவ்வொரு புயலுக்கும் கொத்து கொத்தாக சாயும் மரங்கள்: நூற்றுக்கணக்கில் விழும் அவலம்

சென்னையில் ஒவ்வொரு புயலுக்கும் கொத்து கொத்தாக சாயும் மரங்கள்: நூற்றுக்கணக்கில் விழும் அவலம்

by kannappan

பெரம்பூர்: பூமிக்கு வேறு எந்த கோள்களுக்கும் இல்லாத தனி சிறப்பு உண்டென்றால் அது நீர் இருப்பதும், மழை பொழிவதும் ஆகும். இதற்கு ஆதாரமாக விளங்குவது மரங்கள். மரங்கள் வளிமண்டலத்திற்கு நீரை அனுப்பி மழையை தருகின்றன. அத்துடன் வேகமான காற்று, மோசமான சூரிய கதிர்வீச்சு போன்றவற்றில் இருந்து மனிதர்களை பாதுகாக்கின்ற ஒரு அரணாக மரங்கள் திகழ்கின்றன. மரங்கள் இல்லை என்றால் பூமி வெப்பமயமாகி அழிவை நோக்கி செல்லும். மனிதர்கள் சுவாசிக்க காற்று தருவதுடன் நச்சுத்தன்மை உள்ள காற்றுகளை உள்வாங்கி நல்ல காற்றை வெளியே தருகின்றன. மேலும் எரிபொருளாகவும் மூலிகையாகவும் காய்கறி, பழங்கள் தரும் ஒரு அக்ஷய பாத்திரமாகவும், நிழல் தரும் வீடாகவும் மரங்கள் உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாமல் பல கோடி பூச்சிகளும், ஊர்வன, பாலூட்டிகள், பறவைகள் உள்ளிட்டவற்றுக்கு வாழ்விடமாக மரங்கள் திகழ்கின்றன. இப்படி மரங்களின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒருவகையில் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் மனிதர்கள் மரங்களை அழித்து பல்வேறு கட்டுமான வேலைகளை செய்து வருகின்றனர். இது, காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டதால் தற்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இது ஒருபுறம் இருக்க, இயற்கை சீற்றங்கள் என்ற பெயரில் இரண்டு வருடத்திற்கு அல்லது ஆண்டுக்கு ஒரு புயல் தற்போது வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை புயல் வரும்போதும் கொத்து கொத்தாக 300 மரங்கள், 500 மரங்கள் என விழுகின்றன. இவ்வாறு மொத்தமாக மரங்களை ஒவ்வொரு ஆண்டும் பறிகொடுத்து வருகிறோம். மரங்கள் விழுந்த ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டுக்குள் 500 மரங்கள் அல்லது 300 மரங்கள் வளர்க்கிறோமா என்று கேட்டால் கண்டிப்பாக அதில் 10 விழுக்காடு மரங்கள் கூட வளர்வதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மேலை நாடுகளில் மரங்களை வெட்டுபவர்களுக்கு கடுமையாக தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலை நாடுகளில் மரங்களை பாதுகாக்கும் சூழ்நிலை இருக்கும் வேளையில் தெற்காசியா போன்ற நாடுகளில் காடுகளை அழித்து மரங்களை விற்று பணம் பார்த்து அல்லது காடுகளை நகரமாக்கி வருகின்றனர். இதனால் மனித வாழ்க்கை மிகவும் மோசமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் வெளிப்பாடாக கால நிலை மாற்றம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பயிர் செய்யும் நேரத்தில் வறட்சியும், அறுவடை நாட்களில் வெள்ளமும் புயலும் என இயற்கைக்கு மாறாக பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. பயிர் நிலங்கள் பயிரிடுவதற்கு ஏற்ற வகையில் இல்லாமல் தரிசு நிலங்களாக மாறி கிடக்கின்றன. வெப்பநிலை அதிகரித்து ஆறு, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. சராசரியாக ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. ஒரு நாட்டில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் மனிதர்களின் ஆயுட்காலம் குறையும் எனவும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால் எந்த ஒரு புள்ளி விவரங்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மனிதன் தற்பொழுது மாயை நிறைந்த ஒரு சுற்றுச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இயற்கையை அழித்துவிட்டு அதன் மீது கோட்டை கட்டி வாழலாம் என கணக்கு போடும் மனிதனுக்கு இயற்கை அவ்வப்போது தான் யார் என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்த போதும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பாத மனிதனால் தொடர்ந்து இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவ மழை பெய்யும் என கூறுவார்கள். ஆனால், இப்போது எல்லாம் புயல் உருவாகியுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மழை பெய்யும் எனக் கூறுகிறார்கள். இதுவே இயற்கைக்கு மாறான ஒன்று என்பதை பலரும் அறிவதில்லை. இவ்வாறு பல புயல்களை தாண்டி நாம் வந்துள்ளோம். ஒவ்வொரு புயலின் போதும் சேதங்களை மதிப்பிடுகிறோம். மழையின் அளவை மதிப்பிடுகிறோம். முறிந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர் என்ற செய்தியை உள்வாங்குகின்றோம். ஆனால், இழந்த மரங்களை எவ்வாறு பெறுகின்றோம் என்பதை யாரும் அறிவதில்லை. உதாரணத்திற்கு, மாண்டஸ் புயலால் சென்னையில் 500 மரங்கள் வரை விழுந்துள்ளன. இவற்றை மீண்டும் பெறுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. காரணம், அடுத்த வேலையை நோக்கி அனைவரும் செல்ல துடிக்கின்றனர். உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரத்தை நட்டு மரங்களை காப்போம், மனித நேயம் காப்போம் என கூறும் நபர்கள் அதன்பின்னர் அந்த மரம் வளர்ந்ததா என்பதை கூட எட்டிப் பார்ப்பதில்லை. பெயர் அளவிற்கு மரங்களை நட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் நபர்கள் உண்மையிலேயே எத்தனை மரத்தை நட்டார்கள் என்பதைவிட எத்தனை மரங்களை வளர்த்தார்கள் என்பதில்தான் உண்மை தன்மை உள்ளது. மனிதன் வாழ்வதற்கு நீர் ஆதாரம் தேவை. அந்த நீர் ஆதாரத்திற்கு மரங்கள் இன்றியமையாதவை. இந்த அடிப்படை அறிவை கூட எட்டாத மனிதன் தொடர்ந்து இயற்கைக்கு எதிராக செயல்படுவானேயானால் ஒவ்வொரு புயலுக்கும் மரங்கள் விழும். குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் குறையும் என்பதே நிதர்சனமான உண்மை. எதனால் ஒவ்வொரு புயலிலும் மரங்கள் விழுகின்றன. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் ஏன் அதிகமாக மரங்கள் விழுகின்றன என்பதை எல்லாம் மனிதன் ஆராய்ந்து அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், வருங்காலங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களை பருவ மழை காலம் என்பதை மாற்றி புயல் காலங்கள் என பெயர் வைக்க வேண்டிய சூழ்நிலை வரும். வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை. அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும் என்ற கவிஞரின் கூற்றுக்கிணங்க மரங்கள் மனிதனுக்கு நன்மையையே செய்து வருகின்றன. ஆனால் மனிதன் அதனை மறந்து வாழ்ந்து வருவதால் இத்தனை பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதனை மனிதன் மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது என சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்….

You may also like

Leave a Comment

20 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi