பெரம்பூர்: எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக எம்கேபி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முல்லை நகர் சந்திப்பு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 26 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், வியாசர்பாடி முல்லை நகர் 5வது தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (24) மற்றும் வியாசர்பாடி பி.வி காலனியைச் சேர்ந்த சூர்யா (22) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த விக்ரம் என்பவரிடமிருந்து போதை மாத்திரைகளை வாங்கி அதனை பயன்படுத்தியதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து 26 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
* வியாசர்பாடி சாமியார் தோட்டம் 1வது தெருவில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேரை, போலீசார் பிடித்து சோதனை செய்தபோது, சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், யானைகவுனி பள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் (27), வியாசர்பாடி மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த கிஷோர் குமார் (19) என தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர்.