Thursday, May 16, 2024
Home » சிறப்பான நிர்வாகத்தை அளிக்க 30 இளம் வல்லுநர்கள் தேர்வு முதலமைச்சரின் முத்தாய்ப்பு திட்டம் அறிமுகம்: ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிறப்பான நிர்வாகத்தை அளிக்க 30 இளம் வல்லுநர்கள் தேர்வு முதலமைச்சரின் முத்தாய்ப்பு திட்டம் அறிமுகம்: ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by kannappan

சென்னை:  தமிழக அரசு நிர்வாகத்தை சிறப்பாக செம்மைபடுத்த முதலமைச்சரின் முத்தாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இதற்காக, 30 இளம் வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அரசு துறை செயலாளர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, அரசு துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சி அமைந்த பிறகு நடக்கக்கூடிய 4வது அனைத்து துறையினுடைய செயலாளர்கள் கூட்டம் இந்த கூட்டம். உங்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து வந்தாலும், அனைவரையும் ஒருசேர சந்திப்பது என்பது மிகமிக முக்கியமானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை கவனித்து வந்தாலும், யாரும் தனியாக செயல்பட இயலாது. ஒன்றோடு ஒன்று இணைந்தவை தான் அரசு துறைகள். எனவே, பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல், ஒவ்வொரு துறை செயலாளரும் தங்கள் துறையை மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் எத்தகைய பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை அனைவரும் அறிவதற்கு வாய்ப்பாக இதுமாதிரியான கூட்டு கூட்டங்கள் அவசியமானவை. திமுக தேர்தல் அறிக்கையில் என்னென்ன சொல்லியிருக்கிறோம். மாவட்டங்களுக்கென தனியாக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள். இவற்றை முதல் கட்ட அடிப்படையாக கொண்டு திட்டங்களை நாம் தீட்டினோம். அடுத்த கட்டமாக அமைச்சர்கள், செயலாளர்கள் உடனான கலந்துரையாடல்கள் மூலமாக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு, சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளின் அடிப்படையில் சில திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு மூலமாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கைகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டன. இப்படி பல்வேறு வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்திருந்தாலும், அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும், அமைச்சர்களுக்கும், துறையை சார்ந்திருக்கக்கூடிய செயலாளர்களுக்கும் தான் இருக்கிறது. இதில் ஒவ்வொரு துறையின் சார்பிலும், பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை செய்து வருகிறீர்கள். ஒவ்வொரு துறை சார்பிலும் நிறைவேற்றப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களை நான் இங்கு பட்டியலிடுவதாக இருந்தால், அதுவே பல மணிநேரம் ஆகும். * சில திட்டங்களை அறிவிக்கிறோம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் ஆகிறது. இத்தகைய காலதாமதம் தவிர்க்கப்பட்ட வேண்டும். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக சிந்தித்துக் கொண்டே இருந்து விடக் கூடாது.* நிதி நெருக்கடியில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை தான். எனவே, எந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் தர வேண்டுமோ அந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றை செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.* எத்தனையோ திட்டங்களை தீட்டினாலும், முதலமைச்சரால் மற்றும் அமைச்சர்களால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அதிகமான கவனத்தை பெறும். அந்த திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி முடிக்க வேண்டும்.* சில அரசு துறைகளின் செயல்பாடுகள் பொது வெளியிலும், சமூக ஊடகங்களாலும் விமர்சனம் செய்யப்பட்டது. துறை செயலாளர்கள் இதுபோன்ற இனங்களில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.* துறை ரீதியாக நான் உங்களோடு நேரடி தொடர்பில் இருக்கிறேன். அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சர் அலுவலகமும் உங்களோடு தொடர்பில் இருக்கிறது. சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கிறது.* இதே போன்ற ஒருங்கிணைந்த செயல்பாடு உங்களுக்கும், உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளுக்கும் இருக்கிறதா? என்றால் ஒரு சில துறைகளில் இல்லை.* இதனால், திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, அதனை சரிசெய்திட இதுபோன்ற ஆலோசனை கூட்டங்களை, கண்காணிப்பு கூட்டங்களை, திட்டமிடும் கூட்டங்களை, கலந்துரையாடல் கூட்டங்களை உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளோடு தொடர்ந்து நீங்கள் நடத்த வேண்டும்; கள ஆய்வுகளில் நீங்கள் ஈடுபட வேண்டும்.* அனைத்து துறை செயலாளர்களும், திட்டங்களுக்கான ஆணைகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், கள அளவிலே அத்திட்டங்கள் கடைகோடியில் உள்ள பயனாளிகளையும் சென்றடைவதையும், உறுதி செய்ய வேண்டும். இதற்காகவே, இந்த அரசு பொறுப்பேற்றவுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலராக நியமித்துள்ளது. இவர்களுடைய செயல்பாடுகளை நம்முடைய தலைமை செயலாளர் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து அவர்களுடைய பணியில் சிறக்கத்தக்க ஆலோசனைகளை அளித்து உதவிடுமாறு இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.* அமைச்சர்களுக்கும் துறை அதிகாரிகளுக்குமான ஒருங்கிணைந்த செயல்பாடு கூட சில துறைகளில், சில நேரங்களில் ஏற்படாமல் இருப்பதாகவும் நான் அறிகிறேன். * மக்களுக்கும், ஆட்சி நிர்வாகத்துக்குமான தொடர்பும், அவர்களது அனுபவங்களும், அனைவராலும் மதிக்க வேண்டும். அதேபோல் மாவட்ட நிர்வாகத்துக்கும், துறை செயலாளர்களுக்குமான ஒருங்கிணைப்பும், ஒருங்கிணைந்த செயல்பாடும் நிச்சயம் அவசியம்.* ஆட்சியில் இருப்பவர் இடும் கட்டளையை செயல்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலன் கருதி நீங்கள் வைத்துள்ள, உங்களது கனவு திட்டங்களையும், அரசுக்கு சொல்லி, அதனையும் செயல்படுத்த நீங்கள் முனைய வேண்டும்.* சிறப்பான நிர்வாகத்தை அளிப்பது இந்த அரசினுடைய முக்கிய நோக்கம். அந்த வகையில், இளம் வல்லுநர்களின் திறமையை பயன்படுத்தி கொள்ளும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தாய்ப்பு திட்டம் என்ற உன்னதமான ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30 இளம் வல்லுநர்கள், மூன்று கட்ட தேர்வுக்கு பின்னர் இந்த திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அரசு நிர்வாகத்தை சிறப்பாக செம்மைப்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும். அவர்கள் நேரிடையாக, முதலமைச்சர் அலுவலகத்தோடு தொடர்பில் இருப்பார்கள்.* அமைச்சர்கள், துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் செயல்பட்டால், நேர்கோட்டில் சென்றால், தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் நம்பர் ஒன் என்ற இலக்கை நிச்சயமாக அடைய முடியும். எனவே, இதற்காக நீங்கள் உங்கள் பணியை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.    * 2022-23ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 57% அறிவிப்புகளுக்கு அரசாணை2021-22ம் ஆண்டு வெளியிடப்பட்ட 1,680 அறிவிப்புகளில் 100 அறிவிப்புகள் நீங்கலாக, 1,580 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, ஏறக்குறைய 94% அறிவிப்புகள் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 2022-23ம்  ஆண்டு வெளியிடப்பட்ட 1,634 அறிவிப்புகளில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆய்வின்போது, 23% அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, 12.09.2022 அன்றைய நிலவரப்படி, ஏறக்குறைய 57% அறிவிப்புகளுக்கு அதாவது 937 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்குரிய ஆணைகளுக்கு அக்டோபர் 15ம் தேதிக்குள் வெளியிடக்கூடிய வகையில் செயல்பட வேண்டும் என்றார் முதல்வர்.* துறை செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு‘முதலமைச்சருடைய தகவல் பலகை’ என்பது தரவுகளை கொண்டு முடிவுகளை மேற்கொள்ளும் நவீன நல் ஆளுமைக்கான வழிமுறை.இந்த நோக்கத்திற்காக, கடந்த 23.12.2021 அன்று முதலமைச்சரின் தகவல் பலகை ஒன்றை நான் துவக்கி வைத்தேன். இதில் ஒவ்வொரு துறையும், தங்கள் துறை சார்ந்த தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால் இன்னும் சில துறைகள் முதலமைச்சரின் தகவல் பலகையில் தரவுகளை பதிவு செய்வதில் முனைப்பு காட்டவில்லை என்பது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இத்தகைய போக்கை தவிர்த்து, நல் ஆளுமையை இந்த அரசு வழங்குவதற்கு அனைத்து துறைகளும், தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்….

You may also like

Leave a Comment

twenty − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi