Friday, May 17, 2024
Home » சங்கடஹர சதுர்த்தியில் ஐங்கரனின் தரிசனம்

சங்கடஹர சதுர்த்தியில் ஐங்கரனின் தரிசனம்

by kannappan

இந்த சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு என்ன? 21.3.2022, திங்கட்கிழமைஇந்த சங்கடஹர சதுர்த்தி. சுவாதியும் விசாகமும் கலந்த சந்திரனுக்குரிய திங்கட்கிழமை வருவது மிகவும் சிறப்பு. மதி என்பது சந்திரன். மனம் என்பது சந்திரன். மனமும் மதியும் நன்றாக இயங்கினால் செயல்கள் நன்றாகும். அதற்கு நான்காவது திதியான சதுர்த்தியில் ஞானக்கடவுளாகிய விநாயகரை வணங்கி சதுர்த்தி விரதம் இருக்க வேண்டும். இது சங்கடங்களைத் தீர்த்து சகல நலன்களையும் தரும் சங்கடஹர சதுர்த்தி. “சங்கட” என்றால் துன்பம். “ஹர” என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதம் சங்கடஹர சதுர்த்தி. இந்த சதுர்த்தி, சந்திரனுக்குரிய அஸ்த நட்சத்திரத்தில் வருவது இன்னும் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு பகை, கடன், நோய் முதலியவைகள் விலகி, நல்ல நட்பு கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். காலையில் எழுந்து நீராடி, விநாயகருக்கு விளக்கு ஏற்றி, அருகம்புல் மற்றும் வாசனை மலர்கள் வைத்து பூஜிக்க வேண்டும். மாலை வரை உபவாசம் இருந்து, மாலை வேளையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று, சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டு, அதன் பிறகு உணவு உண்ண வேண்டும்.சிந்தையில் நிறுத்தி சமயம் வரும்போது தரிசிக்க சில ஆலயங்கள்…காஞ்சிபுரம்: ‘விகடச் சக்கர விநாயகர்’ காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒரு சமயம் விஷ்வக் சேனரின் சக்கராயுதத்தை எடுத்து வைத்துக்கொண்ட விநாயகர், தனக்கு முன்னால் நடனம் ஆடினால் தான் சக்கரத்தைத் தரமுடியும் என்று நிபந்தனை விதிக்க, அவர் நடனமாடி சக்கரத்தைப் பெற்றாராம். சக்கரத்தில் ஒரு விகடம் நிகழ்த்திய காரணத்தால் இவர் ‘விகடச் சக்கர விநாயகர்’ ஆனார்.மருத்துவக்குடி: தஞ்சை மாவட்டம் ஆடுதுறைக்கு அருகே உள்ள மருத்துவக்குடி என்ற ஊரில் அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகரின் திருமேனி தேளின் செதில் போன்ற அமைப்பில் இருப்பதால் இவரை ‘விருச்சிக விநாயகர்’ என்கின்றனர். விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறலாம்.மதுரை:  மீனாட்சி அம்மன் கோயிலில் எட்டடி உயரத்தில் நான்கு திருக்கரங்களோடு அமர்ந்தகோலத்தில் பிரமாண்டமாகக் காணப்படுபவர் ‘முக்குறுணி விநாயகர்’ பட்ட இந்த விநாயகருக்கு முக்குறுணி அரிசியில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை தயாரித்து படைக்கிறார்கள் (ஒரு குறுனி என்பது 6 படி 3 முக்குறுணி என்பது 18 படி) எனவே இவர் முக்குறுனி விநாயகர் எனப்பட்டார்.அச்சரப்பாக்கம்: ஒரு சமயம் சிவபெருமான் மூன்று அசுரர்களை அழிக்கப் புறப்பட்டபோது ேதரில் அச்சுமுறிந்தது, பிறகுதான் ஈசனுக்குப் புரிந்தது. ‘ஒரு காரியத்தைச் செய்யத் துவங்கு முன் கணபதியை வணங்க வேண்டும்’ என்பதை மறந்ததால் ஏற்பட்ட வினை அவர் உடனே அவரை வணங்க, தேர் புறப்பட்டது. அச்சிறுபாக்கத்தில் உள்ள இறைவன் ஆட்சீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் ‘அச்சு முறி விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.திருநாரையூர்: தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான திருநாரையூர் அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத சௌந்தரேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருப்பவர் ‘பொள்ளாப் பிள்ளையார்’ ‘பொள்ளா’ என்றால் உளியால் செதுக்கப்படாதவர் என்று பொருள். இந்தப் பிள்ளையார் சுயம்புத் திருமேனியுடையவர். உளி கொண்டு வடிக்கப்படாதவர். இவரது அருளால் தான் தேவாரப் பாடல்கள் மீட்கப்பட்டன.திருநீர்மலை: மகாவிஷ்ணுவின் 108-திவ்ய தேசங்களில் சென்னையில் உள்ள திருநீர்மலையும் ஒன்று. இங்குள்ள மணிகர்ணிகா குளத்தின் கரையில் ராகு கேது தோஷங்களைப் போக்கும் ‘தூம கேது விநாயகர்’ ஆலயம் உள்ளது. ராகு – கேது இரண்டும் இணைந்ததுதான் தூம கேது கணபதி. இங்கு தான் முதன் முதலில் கணபதியின் கல்யாண வைபோகம் நடைபெற்றது.திருத்தணி-மின்னல்:  திருத்தணி அருகில் உள்ள மின்னல் கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஐந்து முகங்களோடு கருவறையில் சிம்ம வானத்தின் மீது அமர்ந்த நிலையில் பிரதான மூர்த்தியாக ‘ஹேரம்ப விநாயகர்’ அருளாட்சி புரிகிறார். இந்த சிம்ம வானத்தில் பார்வை பட்டால் விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாகும்.செய்யூர்: மதுராந்தகம் அருகே செய்யூர் என்ற ஊரின் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கோயிலில் வீற்றிருக்கும் விநாயகருக்கு கச்சேரி விநாயகர் என்று பெயர். இந்தப் பிள்ளையார் ஒருபுறம் சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் காணப்படுவதால் இருவருக்குக் கச்சேரி விநாயகர் எனும் பெயர் வந்தது. ‘கோடை அபிஷேகம்’ என்ற பெயரில் சித்திரை மாதம் முழுவதும். தினசரி இளநீர் அபிஷேகமும் தயிர் காப்பும் நடைபெறுகிறது.பிள்ளையார்பட்டி: கி.பி. 4ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டி, விநாயகர் கோயில். ஆறடி உயரத்தில் பத்மாசன நிலையில் அமர்ந்்திருக்கும். ‘கற்பக விநாயகர்’ வலது கையில் சிவலிங்கத்தினை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இங்கு 10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா பிரசித்தி பெற்றதாகும்.திருவலஞ்சுழி: கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழியில் புகழ் பெற்ற வெள்ளை வாரண விநாயகர் ஆலயம் உள்ளது. இவர் கடல் நுரையால்  செய்யப்பட்ட விநாயகர் என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. கற்பூரப் பொடி அபிஷேகம் மட்டும் நடைபெறுகிறது. இவரை சுவேத விநாயகர் என்றும் சொல்வர்.பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது. ஸ்ரீசர்ப்ப விநாயகர் கோயில். இவருக்கு சர்ப்பம் தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது. விநாயகரின் உடலில் ஐந்து பாம்புகள் அணிகலன்களாக உள்ளன. ராகு கேது தோஷங்கள் இவரை வழிபட நீங்கும்.மேலைக் கோட்டையூர்: திண்டுக்கல் அருகே உள்ள மேலைக் கோட்டையூர் ஆலயத்தில் ‘தலை வெட்டி விநாயகர்’ உள்ளார். ஒரு காலத்தில் இந்த பிள்ளையாரின் சிரசில், ‘‘தன் தலையை நீக்கித் தனத்தை எடு’’ என்று ஒரு வாசகம் இருந்ததாம். அதன்படி விநாயகரின் தலை துண்டிக்கபட்டதாம். அதற்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து குளம், கோயில் கிணறு வெட்டவும் பயன்படுத்தினார்களாம். அதனால் அவர் தலைவெட்டி விநாயகர் எனப் பெயர் பெற்றார்.திருக்கண்டியூர்: தஞ்சாவூருக்கு அருகே உள்ள திருக்கண்டியூரில் உள்ள ஸ்ரீபிரம்ம கண்டீஸ்வரர் ஆலயத்தில் சப்த விநாயகர் என்ற பெயரில் ஏழு விநாயகப் பெருமான்கள் அருள்பாலிக்கின்றனர். இவர்களை வழிபட்டு வந்தால் ஏழேழு ஜென்மத்தின் பாவங்களும் நீங்கும் என்கிறார்கள்.விருத்தாசலம்:  ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரிபவர் ஆழ்த்துப் பிள்ளையார். பாதாள விநாயர் என்றும் அழைப்பர். இவர் 18 அடி ஆழத்தில் கிழக்கு நோக்கிய திருச்சந்நதி. 16படிகள் இறங்கி இவரைத் தரிசிக்க வேண்டும். இவருக்குத்தனியாக கொடிமரம், மூன்று நிலை கோபுரம் உண்டு.திருமுருகன்பூண்டி: திருப்பூருக்கு அருகில் உள்ளது. திருமுருகன்பூண்டி திருமுருக நாதர் ஆலயம். ஒரு சமயம் சுந்தரமூர்த்தி நாயனார் வந்த போது அவரைக் கூப்பிட்டு அவருக்கு உதவிய காரணத்தால் இந்த விநாயகரை ‘கூப்பிடு விநாயகர்’ என்கின்றனர். இன்றைக்கும் இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கு இவரை வணங்கிப் பலன் பெறுகின்றனர்.திருப்பனந்தாள்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருப்பனந்தாள் இங்கு வாழ்ந்தவர் குங்குலியக்கலய நாயனார். திடீரென இவர் மகன் இறந்து விடவே அவனை தகனம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இத்தல விநாயகர் வழி மறித்து, அங்குள்ள நாக கன்னித் தீர்த்தத்தில் நீராடி விட்டு மகனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். அங்கு சென்றதும் இறந்த மகள் உயிர்த்தெழுந்தான். அதனால் இத்தலத்து விநாயகப் பெருமான் ‘உயிர் மீட்ட விநாயகர்’ எனப் போற்றப்படுகிறார்.வள்ளிமலை: முருகப் பெருமான் வள்ளியை மணம் புரிய வேண்டி, இத்தல ஈசனை வழிபட்டார். பின்னர் அண்ணன் கணேசனோடு வள்ளிமலை சென்று வள்ளியைக் கண்டு திருவிளையாடல்கள் புரிந்து அவளை கைப்பிடித்தார். தம்பிக்கு உதவிய களிப்பில் கணபதி இங்கு ஆனந்த நடனம் புரிந்ததால் இத்தல விநாயகர் ‘ஆனந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். – நாகலட்சுமி…

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi