Saturday, May 25, 2024
Home » கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 மடங்கு கட்டணம் வசூல் பர்மிட் இல்லாமல் இயக்கிய 3 ஆம்னி பேருந்து பறிமுதல்: அமைச்சர், ஆணையர் அதிரடி சோதனை; கூடுதல் கட்டணம் 250 பேருக்கு திரும்ப வழங்கப்பட்டது; ஒரே நாளில் 1.66 லட்சம் பேர் பயணம் செய்தனர்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 மடங்கு கட்டணம் வசூல் பர்மிட் இல்லாமல் இயக்கிய 3 ஆம்னி பேருந்து பறிமுதல்: அமைச்சர், ஆணையர் அதிரடி சோதனை; கூடுதல் கட்டணம் 250 பேருக்கு திரும்ப வழங்கப்பட்டது; ஒரே நாளில் 1.66 லட்சம் பேர் பயணம் செய்தனர்

by kannappan

சென்னை: கோயம்பேடு பகுதியில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆணையர் நடராஜன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 3 மடங்கு கட்டணம் 250 பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது. அதை ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து பெற்று பயணிகளிடம் திரும்பி தந்தார். மேலும், பர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ் புத்தாண்டு நேற்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, 17ம் தேதி ஈஸ்டர் திருநாள் என அடுத்தடுத்த நாட்களில் பண்டிகை வந்தது. இதனால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. தமிழ் புத்தாண்டை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் பேருந்துகள் மூலம் சென்றனர். மக்களின் தேவைக்கு ஏற்ப போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, சேலம், நாகப்பட்டிணம், தஞ்சை, அரியலூர், மதுரை, நாகர்கோவில், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் தூத்துக்குடி, ஓசூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி நேற்று அதிகாலை வரை சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம், பெருங்களத்தூர், பூந்தமல்லி, திருவான்மியூர் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரே நேரத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதால் கோயம்பேடு மற்றும் ஜிஎஸ்டி சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து நெரிசலை நேற்று அதிகாலை வரை நீடித்தது. தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 900 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,033 பேருந்துகள் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டன. இதன் மூலம் சென்னையில் இருந்து நேற்று காலை வரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 815 பேர் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.அரசு பேருந்துகள் போல் 800 ஆம்னி பேருந்துகளும் நேற்று இயக்கப்பட்டன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் 2 முதல் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவங்கருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்து கமிஷனர் நடராஜன் ஆகியோர் கோயம்பேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 10 மணி வரை 50க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா என கேட்டறிந்தார்.அப்போது, பயணி ஒருவர், அமைச்சர் சிவசங்கரிடம், சென்னையில் இருந்து திசையன்விளை செல்ல நான் ரூ. 3 ஆயிரத்தை செலுத்தி உள்ளேன் என்றார். வழக்கமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமைச்சர் கேட்டார். அதற்கு அந்த பயணி, வழக்கமாக ரூ.1000 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படும் இந்த முறை 3 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலித்துள்ளதாக கூறினார். உடனே அமைச்சர், உங்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்ைத திரும்ப கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அப்போது ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்த அனைத்து பயணிகளிடமும் அமைச்சர் சிவசங்கர் கட்டணம் குறித்து கேட்டறிந்தார். அனைவரும் அதே குற்றச்சாட்டை கூறியதால் உடனே ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பயணிகளுக்கு பெற்று கொடுத்தார். அந்த வகையில் 250 பயணிகளுக்கு கட்டணத்தை அமைச்சர் பெற்று கொடுத்தார். இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அமைச்சரின் இந்த அதிரடி சோதனையால் அதிர்ச்சியடைந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பலர், பயணிகளிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திரும்ப கொடுத்த சம்பவங்களும் அரங்கேறியது. அதைதொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்த பிரபல தனியார் பேருந்து அப் நிறுவனத்திற்கு கட்டணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வழியாக சென்னை வந்த ஆம்னி பேருந்து, சேலத்தில் இருந்து வந்த ஆம்னி பேருந்து, தஞ்சையில் இருந்து வந்த ஆம்னி பேருந்து என 3 ஆம்னி பேருந்துகளுக்கு முறையான பர்மிட் இல்லாததால் அமைச்சர் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட்டால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்வதோடு, உரிமத்தையும் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக, வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் வரும் 17ம் தேதி பிற்பகல் முதல் இயக்கப்படும் என்று  போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சித்ரா பவுர்ணமி தினத்தன்று இந்த ஆண்டு திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்கதர்கள் எண்ணிக்கை பல லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்….

You may also like

Leave a Comment

20 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi