Sunday, June 16, 2024
Home » குவாட் மாநாட்டுக்காக 3 நாள் பயணம் ஜப்பான் தொழிலதிபர்களுடன் மோடி சந்திப்பு: இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு

குவாட் மாநாட்டுக்காக 3 நாள் பயணம் ஜப்பான் தொழிலதிபர்களுடன் மோடி சந்திப்பு: இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு

by kannappan

டோக்கியோ: குவாட் மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, ஜப்பான் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவில் மோட்டார் வாகனம், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ அமைப்பை உருவாகி உள்ளன. கடந்தாண்டு கொரோனா காரணமாக, இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு காணொலி மூலமாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் 2வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு, புதிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள 21ம் நுற்றாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. நேற்று அதிகாலை டோக்கியோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, ஜப்பான் அதிகாரிகளும், அங்கு வாழும் இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.முதல் நாள் நிகழ்ச்சியாக இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பு தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வர்த்தக ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் வகையில், வலுவான பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவின் முயற்சியால் இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பு (ஐபிஇஎப்) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பேசிய பிரதமர் மோடி, “இந்தோ-பசிபிக்  பிராந்தியத்தின் பொருளாதார சவால்களைச் சமாளிக்க பொதுவான மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டறிய அனைத்து இந்தோ-பசிபிக் நாடுகளையும்  உள்ளடக்கிய ஐபிஇஎப் உடன் இந்தியா உறுதியாக இணைந்து செயல்படும். இதன் மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படும் பொருளாதார பின்னடைவு, அனைத்தையும் உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சி, நியாயமான போட்டித்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான  பொருளாதார கூட்டாண்மை மேலும் வலுப்படுத்தப்படும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார இணைப்பு,  ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைக்க இந்தியா ஆர்வமாக உள்ளது,’’ என்று  கூறினார்.இதைத்தொடர்ந்து, ஜப்பானின் பல முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். என்இசி கார்பரேஷன் நிறுவனத் தலைவர் நொபுஹிரோ என்டோ, யூனிக்லோ ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ டாடாஷி யனாய், சூசுகி மோட்டார் கார்பரேஷன் நிறுவனத் தலைவர் டோஷிஹிரோ சுசூகி மற்றும் சாப்ட்பேங்க் நிறுவனத் தலைவரின் மகன் மசாயாஷி உள்ளிட்டோரை சந்தித்து ஜவுளி முதல் ஆட்டோமொபைல் வரை, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை பல்வேறு துறைகளில் உள்ள முதலீடு வாய்ப்புகள் குறித்து  ஆலோசித்தார்.அப்போது, இந்திய தொலைத் தொடர்பு துறையில், குறிப்பாக சென்னை-அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கொச்சி-லட்சத்தீவுகளில் ஆப்டிகல் பைபர் கேபிள் திட்டங்களை மேற்கொள்வதில் என்இசி.யின் பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டினார். உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைத்த பிரதமர் மோடி, தொழில்துறை வளர்ச்சி, வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர் உள்பட இந்தியாவில் எளிதாக வர்த்தகம் செய்ய மேற்கொள்ளப்படும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். மேலும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஜவுளி, ஆயத்த ஆடை சந்தை மற்றும் ஜவுளி திட்டங்களுக்கான உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். ஜவுளி உற்பத்தியை மையமாக கொண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, ஜப்பான் ஆயத்த ஆடை உற்பத்தியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதமரின் மித்ரா திட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரிகளுக்கான உற்பத்தி வசதிகள் மற்றும் மறுசுழற்சி மையங்கள், நிலையான வளர்ச்சியின் இலக்கை அடைவதற்காக இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பிரதமர் மோடி கலந்து ஆலோசித்தார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அனைத்து நிறுவனங்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.* பைடனுடன் இன்று பேச்சுகுவாட் மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு இன்று நடக்க உள்ளது. இதில் இருதரப்பு உறவுகள், ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த சந்திப்புக்கு முன்பாக, இந்தியா-அமெரிக்கா இடையே புதிய முதலீடு ஊக்குவிப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன் மூலம், கடன், பங்கு முதலீடு, முதலீட்டு உத்தரவாதம், முதலீட்டு காப்பீடு, திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் போன்ற கூடுதல் முதலீட்டு ஆதரவு திட்டங்கள் உருவாக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில், ஒன்றிய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா, அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் நாதன் கையெழுத்திட்டனர்.* இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவன்ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடியை ஓட்டலில் வரவேற்றவர்களில், ரித்சுகி கோபயாஷி என்ற ஜப்பான் சிறுவனும் இருந்தான். அவன், இந்தி மொழியில் ஆட்டோகிராப் வாங்க வந்ததாக பிரதமர் மோடியிடம் கூறினான். அச்சிறுவன் தங்கு தடையின்றி இந்தியில் பேசியதை பார்த்து ஆச்சரியமடைந்த மோடி, ‘இவ்வளவு நன்றாக இந்தி பேச எங்கு கற்று கொண்டாய்? உனக்கு இந்தி நன்றாக தெரியுமா?’ என கேட்டார். பிறகு சிறுவன் வைத்திருந்த அட்டையை வாங்கிய மோடி, அதில் தனது கையெழுத்து போட்டு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரித்சுகி, “எனக்கு இந்தி அதிகம் பேசத் தெரியாது; ஆனால் மற்றவர்கள் பேசுவது புரியும். நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் (மோடி) நான் காகிதத்தில் எழுதியிருந்த செய்தியை வாசித்து பார்த்தார். அவரிடம் இருந்து கையெழுத்து வாங்கி கொண்டேன்’’ என்று கூறினான்.* தமிழ் சிறுவனுக்கு பாராட்டுபிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதில், ஒரு சிறுவன் தமிழில் வணக்கம் என்ற பதாகையுடன் வரவேற்றதை கண்டு உற்சாகமடைந்த பிரதமர் மோடி, அவனை பாராட்டி அப்பதாகையில் கையொப்பமிட்டார்….

You may also like

Leave a Comment

twenty − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi