ரோம் : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகவும் அனைவரின் நலன் காப்பதாகவம் உருவாக்க வேண்டும் என்று ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இத்தாலி நாட்டின் அபுலியாவில் நடைபெறும் மாநாட்டில் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளுடன் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் தலைவர்கள் 11 பேரும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக கூறினார். தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக அது இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்க வேண்டும் என்று கூறிய மோடி, அது அழிவிற்கு காரணமாக இருந்து விடக்கூடாது என்று தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவை உருவாகும் போது, அதன் மீது மனிதர்களின் கட்டுப்பாடுகள் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அதில் தான் மனிதர்களின் கண்ணியம் அடங்கி இருப்பதாகவும் போப் பிரான்ஸ் கூறினார். மாநாட்டின் இடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த மாநாட்டில் முக்கிய அம்சமாக ஜி7 மாநாட்டில் முதல்முறையாக கலந்து கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவர் போப் பிரான்சிஸ்சை நேற்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கத்தோலிக்க மக்கள் வசிக்கும் இந்தியாவில் அடுத்த ஆண்டு போப் பிரான்சிஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்க இந்தியா தயாராக உள்ளதாக மோடி சந்தித்த போது தெரிவிக்கப்பட்டது.