Sunday, June 16, 2024
Home » குடும்பத்தையும் குலத்தையும் காக்கும் குல தெய்வ வழிபாடு!

குடும்பத்தையும் குலத்தையும் காக்கும் குல தெய்வ வழிபாடு!

by kannappan

நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்’ என்பார்கள். குலதெய்வ வழிபாட்டை அத்தனை எளிதாக எல்லோராலும் செய்யமுடிவதில்லை. படிப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய நிலை. எப்போதேனும் ஒருமுறை பிறந்த ஊருக்குச் சென்றாலும்கூட, குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியாத நிலை. முன்பெல்லாம் குடும்பப் பெரியவர்கள் நம்முடைய குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் நமக்கு எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று  சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாது. காரணம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறிவிட்ட இன்றைய சூழலில், குலதெய்வம் பற்றிய விவரங்களைக் குடும்பப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாத நிலை. குலதெய்வமே என்னவென்று தெரியாதவர்கள் எப்படி தங்களுடைய குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு வழிபடுவது என்பது பற்றி, ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம். அப்போது அவர் கூறிய  கருத்துகளின் தொகுப்பு இதோ…  ”மனிதன் தீராத பிரச்னைகளால் மனக்கவலை வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறான்.  அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று குடும்பப் பெரியவர்களைக் கேட்கிறான்.சிலர்  தங்களது குடும்ப வழக்கப்படி கோடங்கி பார்ப்பவரை அழைத்து உடுக்கடித்து தெய்வத்திடம் குறி கேட்பார்கள். சிலர் ஜாதகத்தை, குடும்ப ஜோசியரிடம் காண்பித்து, என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்பார்கள்.  அதற்கு அவர், ‘உங்கள் பூர்வீக குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள், எல்லாம் சரியாகும்’ என்பார்.  சில குடும்பத்தில் குடும்பப் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குலதெய்வம் பற்றித் தெரிந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபடலாம்.சில குடும்பத்துப் பெரியவர்களுக்குக்கூட  அவர்களின் குலதெய்வம் எது என்று தெரியாது.  அவர்கள் என்ன செய்வது? இங்கேதான் அவர்களுடைய ஜாதகம் உதவுகிறது.  ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டுபிடிக்க முடியுமா?  நிச்சயமாக முடியும்.  ஒருவரது ஜாதகத்தில் தெய்வ ஸ்தானம் என்பது 5-ம் இடமும் 9-ம் இடமும் ஆகும்.  5-ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். தந்தை வழி பாட்டனார்களைச் சொல்லுமிடம். அதன் 5-ம் இடம் ஜாதகத்தின் 9-ம் பாவமாகும். அவர்களின் இஷ்ட தேவதையைச் சொல்லுமிடம். 9-ம் இடத்துக்கு 9-ம் இடம் 5-ம் பாவமாகும்.  அதாவது தந்தை வழிபட்ட  தெய்வத்தைச் சொல்லுமிடமாகும். ஆகவே இந்த இரு இடங்களைக் கொண்டு குல தெய்வத்தைக் கண்டுபிடிக்கலாம். இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா,  நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம்  இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம். நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், மலை மேல் இருக்கும். குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின்  ஜாதகத்தில் இருந்து  கண்டுபிடிக்கலாம். ஒரு குடும்பத்துக்கு குல தெய்வம் ஒன்றும், அதன் பரிவார தெய்வங்கள் இரண்டும் சம்பந்தம் கொள்ளும். அதாவது ஒருவரின் பூர்வீகத்தில் அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறைப் பங்காளிகள் மூன்று தலைமுறையாக ஒன்றுசேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களோ அந்த ஊரில் இருக்கும்.  இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். சிலர் கேட்கலாம்…  எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை. இருப்பவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று கேட்டால், அதைப் பற்றி கவலைகொள்ள வேண்டாம். நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய  துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி  அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி,  “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.இன்னொரு முறையும் இருக்கிறது. உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற்சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒரு குடும்பத்துக்கு வரும். அதாவது ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அது பெருமாளாக இருக்கலாம், சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம். அடுத்து குலதெய்வம். பிறகு காவல் தெய்வமாக   ஒரு தெய்வம் – அது ஆண் தெய்வமாக இருக்கலாம் அல்லது பெண் தெய்வமாக இருக்கலாம். மொத்தத்தில் 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். ஐய்யனார்,  மதுரை வீரன்,  காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்னக் கருப்பன் உள்ளிட்ட கருப்பசாமிகள் உள்ளனர். அதேபோல வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி,  எல்லைப் பிடாரி, பெரியாச்சி, எல்லை மாரி, பேச்சியம்மன், பூவாடைக்காரி, செல்லியம்மன், கன்னிமார், சீலைக்காரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்கள் உள்ளனர்.  இந்தக் காவல் தெய்வங்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம்.  வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து, வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. உங்கள் கையால் ஒரு சாதாரண அபிஷேகம், ஒரு புதுத்துணி, ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு. இதைக் கொடுத்தாலே பொதும். அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று, எந்தக் கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள்….

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi