Tuesday, May 14, 2024
Home » கார்கிவ், சுமியில் சிக்கியுள்ள 1,000 இந்தியர்களை மீட்க உள்ளூர் சண்டை நிறுத்தம்: இந்தியா வேண்டுகோள்

கார்கிவ், சுமியில் சிக்கியுள்ள 1,000 இந்தியர்களை மீட்க உள்ளூர் சண்டை நிறுத்தம்: இந்தியா வேண்டுகோள்

by kannappan

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் சிக்கி இருந்த 629 இந்தியர்களை ஏற்றி வந்த 4 விமானப்படை விமானங்கள் நேற்று காலை இந்தியா வந்து சேர்ந்தன. மேலும், ருமேனியாவில் இருந்து இண்டிகோ விமானத்தின் மூலம் 229 இந்தியர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.  ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களில் 10 பயணங்களில், 2056 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் 26 டன் நிவாரணப் பொருட்களும் இந்த விமானங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில், கார்கிவ், சுமி நகரங்களில் உக்ரைன் – ரஷ்ய படைகளுக்கு இடையே தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. இதனால், இங்கிருந்து அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு போக முடியாமல் ஆயிரம் இந்தியர்களும், மாணவர்களும் சிக்கியுள்ளனர். கார்கிவ் நகரில் 300 பேரும், சுமியில் 700 பேரும் இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.இந்த நகரங்களில் 50 முதல் 60 இடங்களில் இருநாட்டு படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இவற்றை மீறி இந்தியர்கள் வெளியே தப்பி வருவது இயலாத காரியம். அது, அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, இவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக உள்ளூர் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கும்படி ரஷ்ய, உக்ரைன் படைகளுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இவர்களை அழைத்து செல்வதற்காக ரஷ்யாவின் சார்பில் அதன் எல்லையில் உள்ள பெல்கோராட்டில் 130 பேருந்துகள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும், ஆயிரம் இந்தியர்களும் இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் ரஷ்யாவுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வர  அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.சுமியில் மோசமான சூழல்; ஒன்றிய அரசு கவலை வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று அளித்த பேட்டியில், ‘‘சுமியில் சிக்கியுள்ள 700 இந்தியர்கள், மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற சண்டை நிறுத்தம் செய்யும்படி ரஷ்ய, உக்ரைன் அரசுகளை பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வருகிறோம்.  சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியும் கேட்கப்பட்டுள்ளது. சுமியில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. எனவே, இங்குள்ள இந்தியர்களும், இந்திய மாணவர்களும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியே வர வேண்டாம்,’’ என்றார்.உலக அமைதிக்கு எதிரான தாக்குதல் பைடன் ஆவேசம்வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பின்லாந்து அதிபர் நினிஸ்டோவும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பைடன், ‘‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், வெறும் ஒரு நாட்டின் மீதான போர் மட்டுமல்ல. அது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்கு எதிரான தாக்குதலாகும். நியாயப்படுத்த முடியாத இந்த அத்துமீறலுக்கு ரஷ்யாவே முழு பொறுப்பேற்க வேண்டும்,’’ என்றார். மறைக்கப்படும் பலி எண்ணிக்கைரஷ்யா, உக்ரைன் தரப்பில் போரில் பலியான மக்கள், வீரர்கள் குறித்து குழப்பான தகவல்கள் நிலவுகின்றன. ரஷ்யா தரப்பில் 9,100 வீரர்கள் பலியானதாகவும் அவர்களின் 33 போர் விமானங்கள் உட்பட நூற்றுக்கணக்கான டாங்கிகள் தகர்க்கப்பட்டு உள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி வருகிறது. ஆனால், ரஷ்யா தனது தரப்பில் 500 வீரர்கள் பலியானதாகவும் 1,600 பேர் காயமடைந்ததாகவும் கூறி உள்ளது. உக்ரைன் தரப்பில் அவர்களின் ராணுவ வீரர்கள் பலி  எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. இப்பேரில் 331 பொதுமக்கள் இறந்திருக்கலாம் என்றும் 675 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதே சமயம், உக்ரைன் அரசின் அவசரகால சேவைத்துறை 2,000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருப்பதாக கூறி உள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் எந்த தகவலையும் யாராலும் உறுதிபடுத்த முடியாத சூழல் நிலவுகிறது.சைபர் தாக்குதல் நடத்தும் உக்ரைன் டிஜிட்டல் படைஉலகிலேயே சைபர் தாக்குதலில் கைதேர்ந்த ஏராளமான ஹேக்கர்களை கொண்ட நாடு ரஷ்யா. போர் தொடுப்பதற்கு முதல் நாள், உக்ரைனின் பாதுகாப்பு துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தியது. ஆனால், அதன் பிறகு உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா  தனது முழு சைபர் தாக்குதல் திறனை பயன்படுத்தவில்லை. அதனால்தான் உக்ரைன் அதிபரால் எளிதாக வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட முடிந்தது, ஐநா, ஐரோப்பிய கூட்டமைப்புகளில் வீடியோ கால் மூலமாக உரையாற்ற முடிந்தது. அதே சமயம், ரஷ்யாவுக்கு எதிராக வலுவான சைபர் தாக்குதல் பதிலடி தர உக்ரைன் டிஜிட்டல் படை சத்தமின்றி வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் சிலர் இந்த ஹேக்கர்ஸ் அமைப்பில் இணைந்துள்ளனர். இந்த டிஜிட்டல் படை, ரஷ்யாவின் எந்த செல்போனிலும், இணையதளத்திலும் ஊடுருவும் தொழில்நுட்ப அம்சத்தை கொண்டிருப்பதாக கூறி உள்ளது. உக்ரைன் போர் பாதிப்பு குறித்து ரஷ்ய மக்களுக்கு தெரியப்படுத்த ஏராளமான வீடியோ, போட்டோக்களை இவர்கள் உலகம் முழுவதும் பரப்பியதாக கூறுகின்றனர். ரஷ்ய சைபர் தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்கும் வலிமை தங்களுக்கு இருப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். இந்திய கப்பலில் சிக்கி தவிக்கும் 21 மாலுமிகள்உக்ரைன் நாட்டின் கருங்கடலில் மைக்கோலைவ்  துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் வி.ஆர்.மாரிடைம் சர்வீசஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  இந்திய சரக்கு கப்பல் கடந்த சில நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதில் 21 இந்திய மாலுமிகள் உள்ளனர்.  இது குறித்து இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சஞ்சய் பிரஷார் கூறுகையில், ‘‘மைக்கோலைவ் துறைமுகத்தில்  25 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதர கப்பல்களிலும் இந்திய மாலுமிகள் உள்ளனர். எங்களுடைய கப்பலில் உள்ள மாலுமிகள் 21 பேரும் பாதுகாப்பாக  உள்ளனர். இந்த துறைமுகத்தை ரஷ்யா கைப்பற்றினால், கப்பல்கள் வெளியே செல்ல அனுமதி அளித்தால்  வெளியேறுவோம். இல்லாவிட்டால் இழுவை படகுகளை பயன்படுத்தி கப்பலை துறைமுகத்துக்கு  வெளியே கொண்டு செல்ல முடியும்,’’ என்றார்.ரஷ்ய விமான சேவை நிறுத்தம்வரும் 8ம் தேதி முதல் பெலாரசை தவிர்த்து மற்ற நாடுகளுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக ரஷ்யாவின்  மிக பெரிய நிறுவனமான ஏரோப்ளோட்  அறிவித்துள்ளது. பயணிகள் விமானங்களை தவிர  சரக்கு விமானங்களும் நிறுத்தப்படுகிறது.  ரஷ்யாவுக்கு எதிராக பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் சிறை பிடிக்கப்படுவதை தவிர்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஏரோப்ளோட் தெரிவித்துள்ளது.15 ஆண்டு சிறை எச்சரிக்கை செய்தி நிறுவனங்கள் அச்சம்உக்ரைன் மீது ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை குறித்து பொய் செய்திகளை வெளியிட்டால், 3 முதல் 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார். இதனால், எந்த செய்தியை ரஷ்யா பொய் என கூறுகிறதோ, அவற்றை வெளியிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஒடுக்குமுறை காரணமாக பிபிசி, சிஎன்என் மற்றும் புளோயம்பெர்க் போன்ற சர்வதேச ஊடகங்கள் ரஷ்யாவில் தங்கள் செய்தி ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன. மேலும், வாய்ஸ் ஆப் அமெரிக்கா, யூரோப் ரேடியோ ப்ரீ, ஜெர்மனியின் டச்சு வெல்லி போன்ற ஊடகங்களும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. இதுதவிர, ரஷ்யாவின் அரசு ஊடகங்களுக்கு தடை விதித்த பேஸ்புக், டிவிட்டரையும் ரஷ்யா முடக்கி உள்ளது. ஒருதலைப்பட்சமான செய்திகளை வெளியிடுவதால் பேஸ்புக், டிவிட்டர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி உள்ளது. எங்களை காப்பாற்றுங்கள் மாணவர்கள் அவசர அழைப்புசுமி நகரத்தில் சிக்கியுள்ள மாணவர்கள், தங்கள் கல்லூரி விடுதிகளிலும், பதுங்கு குழிகளிலும், ஓட்டல்களிலும் தங்கியுள்ளனர். அவர்கள் அங்குள்ள மோசமான சூழ்நிலையை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தங்களை உடனடியாக மீட்கும்படி அவசர செய்திகளை அனுப்பி வருகின்றனர்.மற்ற 5 நிலையங்களை பாதுகாக்க நடவடிக்கைஉக்ரைனில் மொத்தம் 7 அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் இரண்டை ரஷ்ய படைகள் பிடித்துள்ளன. மற்ற 5 அணுமின் நிலையங்களை அதனிடம் இருந்து காப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் அறிவித்துள்ளார். இந்த அணுமின் நிலையங்களுக்கு விரைவில் சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் ஐரோப்பிய அணுசக்தி கழக அதிகாரிகள் குழு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 லட்சம் அகதிகள்கடுமையான போர் காரணமாக உக்ரைனில் இருந்து கடந்த 10 நாட்களில் நாட்டை விட்டு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை நேற்ற 15 லட்சத்தை எட்டியதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறிய மக்களில் பெரும்பாலானோர் அண்டை நாடான போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரையில் இந்த நாட்டில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேரும், ஹங்கேரியில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேரும், மால்டோவாவில் 1 லட்சம் பேரும், சுலோவாக்கியாவில் 90 ஆயிரம் பேரும் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐநா புள்ளி விவரங்கள் கூறுகின்றன….

You may also like

Leave a Comment

11 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi