விருதுநகர்: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, விருதுநகர் மாவட்டம், செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேற்று சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், இதுபோன்ற பட்டாசு ஆலை விபத்திற்கு முக்கிய காரணம் உரிமையாளர்கள் அதிகமாக கட்டணம் பெற்று ஆலையை குத்தகைக்கு விடுவதுதான் என்பதும், குத்தகைதாரர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகமாக மருந்துகளை இருப்பு வைப்பதும் விபத்துக்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இப்படி விதிமீறலில் ஈடுபடும் உரிமையாளர்கள் குத்தகைதாரர்களை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் என்றார்.
அவருடன், மதிமுக துணை பொதுச் செயலாளர் தி.மு.ராசேந்திரன், சாத்தூர் எம்எல்ஏ ஏ.ஆர்.ரகுராமன், அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் சிப்பிபாறை ரவிச்சந்திரன், விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் கம்மாபட்டி வீ ரவிச்சந்திரன், ப.வேல்முருகன் உள்ளிட்டோர் வந்தனர்.