Monday, June 17, 2024
Home » கலியின் வலி நீக்கும் கல்யாண கோலம்

கலியின் வலி நீக்கும் கல்யாண கோலம்

by kannappan
Published: Last Updated on

பார்வதிக்கும் பரமேஷ்வரனுக்கும் திருக்கல்யாணம். பார் ஏழும் கொண்டாட்டத்தில் இருந்தது. சொல்லோடு பொருளைப்போல ஈசனோடு இரண்டறக் கலந்த அம்மைக்கு நடக்கும் திருமணத்தை காண, அனைவரும் இமயமலையில் கூடிவிட்டார்கள். உலகையே பெற்ற உமையை மகளாக பெற்ற இமவானும், மேனையும் அனைவரையும் வரவேற்று, உபசரித்து, உவகை அடைந்தார்கள். யாரையும் வணங்கியோ வேண்டியோ, அறியாத பரம்பொருள் இன்று உமை என்னும் கன்னிகையை தானமாக வேண்டி, வணங்கி, வாங்கப் போகிறான். இந்த வினோதத்தை வேடிக்கை பார்க்கவே இத்தனை கூட்டமும் கூடி விட்டது. இத்தனை கூட்டமும் ஒரே இடத்தில் கூடியதால் பாரம் தாங்காமல் பாரின் வட பகுதி உயர்ந்து தென் பகுதி தாழ்ந்து போனது. இதை கண்டு பயந்த அனைவரும் ஈசனிடம் முறையிட, அவர் அகத்திய மாமுனிவரை அழைத்தார். அகந்தையை அடக்கி, பக்தியையும் தவத்தையும் பெருக்கி, ஈசனை உள்ளத்தை அடக்கி வைத்த அகத்தியர் பணிவோடு பரமன் முன்வந்தார். ‘‘அகத்தியா! அனைத்து உலகமும் இந்த இமய மலையில் குவிந்ததால், பாரம் தாங்காமல் வட பகுதி உயர்ந்து தென் பகுதி தாழ்ந்து விட்டது. எனக்கு சமமான ஒருவர் தென் பகுதி சென்றால்தான் நிலைமை சீராகும். ஆகவே அகத்தியா! நீ தென்திசை நோக்கி புறப்படு! எனக்குச் சமமான நீ தென் திசை சென்றால் ஏற்பட்ட இன்னல் நீங்கிவிடும்.” அகத்தியரை நோக்கி அருளோடு அன்புக் கட்டளை விதித்தார் ஈசன். ஈசனின் கட்டளையை கேட்ட அகத்தியரின் கண்கள் குளமானது. அதற்கு காரணத்தையும் அவரே சொல்ல ஆரம்பித்தார். ‘‘கருணைக் கடலே! கைலாச வாசா! உலகில் பிறந்த அனைவரும் அம்மை அப்பனின் திருமணம் கண்டுகளிக்கும் பாக்கியம் பெற்று இங்கு மகிழ்ந்து இருக்க, நான்மட்டும் தென் திசை செல்ல வேண்டுமா! அமுதத்தை பருகும் வேளையில் அதை இப்படி தட்டிப் பரிக்கலாமா சுவாமி?” என நா தழுதழுக்க, நெஞ்சம் பதை பதைக்க அகத்தியர் கேட்டார். அகத்தியரின் தீதில்லாத சொல்லை கேட்ட இறைவன், புன்னகை பூத்தார். ‘‘என் மணக்கோலம் காண முடியவில்லையே என்ற கவலை உனக்கு வேண்டாம் அகத்தியா! உன் உள்ளத்தில் நானும் என்னவளும் இருக்க உனக்கு இந்த கலக்கம் வேண்டாம். நீ என் திருமணத்தை பூலோகத்தில், தென் திசையில், நினைக்கும் இடத்தில் எல்லாம், நினைக்கும்போதெல்லாம் கண்டு மகிழலாம். சென்று வா மகனே வென்று வா” என்று அபயக்கரம் நீட்டி அய்யன் வரம் தந்தார். அய்யம் நீங்கியவராக, அகத்தியர் தென்திசை நோக்கிப் பயணப்பட்டார். வாருங்கள் நாமும் அகத்தியரோடு செல்வோம். அவர் பெற்ற மணக்கோல தரிசனத்தை நாமும் பெறுவோம். ஆம்! ஈசன் அகத்தியருக்கு மட்டும் மணக்கோல தரிசனம் தரவில்லை, அகத்தியர் வாயிலாக நம் அனைவருக்கும் இன்றுவரை கல்யாண சுந்தரராகக் காட்சி தருகிறார். இந்தக் கலியில் நம் கலி தீர, கலியாண சுந்தரனை, கண்டுகளிக்கலாம் வாருங்கள்!வேதாரண்யம்நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து 63 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யம் சிவன் கோவில் உள்ளது. தலத்து இறைவனின் பெயர், மறைக்காடர் அல்லது மறைக்காட்டு மணாளர் என்பதாகும். இந்தத் தலத்து இறைவியின் பெயர் ‘‘யாழினும் இனிய மென் மொழியாள்” என்பதாகும். அம்பிகையின் மென்மையான இனிமையான மொழியிடம், சரஸ்வதியின் வீணை கூட தோற்றுவிட்டதாம். ஆதலால், இத்தலத்தில் வீணை இல்லாத சரஸ்வதி உருவம் அமைந்துள்ளது. யாழைப் பழிக்கும் அம்மையின் குரலில் மயங்கிய ஈசன், அம்பிகையின் அமுதமான குரலுக்கு நடனம் ஆடினார். அப்படி ஆடும் போது அன்னம்போல ஆடினார். இந்த நடனத்திற்கு பெயர் ஹம்ஸ நடனம். முசுகுந்த சக்கரவர்த்தி, தேவலோகத்தில் இருந்து கொண்டுவந்த, தியாகராஜர் திருவுருவை ஸ்தாபித்த ஏழு ‘‘சப்த விடங்கத் தலங்களுள்” இந்த தலமும் ஒன்று. 63 நாயன்மார்களோடு தொகையடியார்கள் பத்து பேர்களையும் சேர்த்து எழுபத்துமூவருக்கும் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பல காலங்களுக்கு முன் வேதங்கள் இந்த இறைவனை பூஜித்து வரம் பெற்று விட்டு, கதவை தாழிட்டு சென்றுவிட்டன. வேதமே பூட்டிய கதவை நாம் திறக்க வேண்டாம் என்று மக்கள், அந்தக் கதவைத் திறக்காமல் வேறு கதவு வழியாக இறைவனைச் சென்று சேவித்தார்கள். அந்த சமயத்தில் இத்தலம் வந்த அப்பர் ‘‘பண்ணின் நேர் மொழியாள்” எனத்தொடங்கி பத்துப் பாடல் பாடி கதவை தானாகவே திறக்க வைத்தார். சம்பந்தர், அந்த கதவை எப்போதும் திறப்பதும் மூடுவதுமாக இருக்கும்படி ‘‘சதுரம் மறைதான்” எனத் தொடங்கும் பதிகம் பாட, கதவு தானே தாழிட்டுக்கொண்டது. தனது மரணம் நெருங்கிவிட்டது என்று அறிந்த ஸ்வேதன் என்ற அந்தணன், இந்த தலத்து இறைவனை பூஜித்து காலனை வென்றது குறிப்பிடத்தக்கது.அகத்தியருக்கு காட்டிய கல்யாண கோலத்தை இன்றும் மூலவர் சந்நதியில் சிவலிங்க மூர்த்திக்கு பின்புறம் தரிசிக்கலாம். இவருக்குத் தினமும் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பு பூசுகிறார்கள். ஆகவே மறைக்காட்டு மணாளர் சந்தனத்தில் கமகமக்கிறார். வேதாரண்யம் விளக்கழகு என்பதற்கு ஏற்ப சந்நதியில் சுடர் விடும் பல ஒளி விளக்கில் இறைவனைக் காண கண் கோடி வேண்டும்!அச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம் என்று தற்போது அழைக்கப்படுகிறது)அழகான காலைப் பொழுது அது. அடர்ந்த காட்டின் வழியே பாண்டிய மன்னன் படைகளோடு சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் ஒரு தங்க உடும்பு அவன் கண்ணில் பட்டது. அதை துரத்திக் கொண்டே மன்னன், படையோடு சென்றான். தன்னை மன்னன் தொடர்கிறானா, என்று உறுதிசெய்வது போல திரும்பி பார்த்த அந்த தங்க உடும்பு, வேகமாக ஓட்டம் பிடித்தது. உடும்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், மன்னனும் படையும் மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்க அதை பின் தொடர்ந்தார்கள். அபார வேகத்தோடு ஓடிய அந்த உடும்பு, ஒரு சரக்கொன்றை மரத்தில் புகுந்து மறைந்தது. அதைக் கண்ட மன்னன், மரத்தை வெட்ட கட்டளையிட்டான். மரமும் வேகமாக வெட்டப் பட்டது. அப்போது மரத்தில் இருந்து குபீரென்று இரத்தம் வழிய ஆரம்பித்தது. அது உடும்பின் இரத்தம் என்று நினைத்த மன்னன், மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தான். தோண்டத் தோண்ட குழிதான் பெரியதானதே தவிர உடும்பு அகப்பட்ட பாடு இல்லை. ஆகவே உடும்பை தேடும் முயற்சியை கை விட்டான் மன்னன். அன்று இரவு, அவன் கனவில் வந்த ஈசன், உடும்பாக வந்தது தானே என்றும், நாளை அவனுக்கு திரிநேத்ரதாரி என்ற முனிவரின் தரிசனம் கிடைக்கும் என்றும், அவர் மூலம் அங்கு ஒரு கோயில் எழுப்பும் படியும் கூறினாராம். ஈசன் சொல்படியே மறுநாள் திரிநேத்ரதாரி முனிவரின் தரிசனம் பெற்ற மன்னன், அவரிடம் கோவில் கட்டும் பொறுப்பை தந்தான். அந்த முனிவர் மன்னனை ஆட்கொண்ட ஈசனுக்கும், தன்னை ஆட்கொண்ட ஈசனுக்கும் தனித்தனியே சந்நதி அமைத்து கோவில் கட்டினார். ஆகவே இந்த தலத்தில், ஆட்சிபுரீஷ்வரர், உமை ஆட்சிபுரீஷ்வரர் என இரண்டு மூலவர்கள், தனித்தனி கருவறையில் காட்சி தருகிறார்கள். இளங்கிளி அம்பிகை, உமை அம்பிகை என இரு அம்பிகையர் சந்நதியும் இருக்கிறது.நாங்கள் இந்த தலத்தை வணங்கச் சென்றபோது, இளங்கிளி அம்பிகையின் கோபுரத்தில் பல கிளிகள் அமர்ந்த படி ‘‘கீ.. கீ..” என்று ஓசை செய்து கொண்டிருந்தது. கிளி கொஞ்சும் அந்த கோபுரத்தின் உள்ளே இளங்கிளி போல அம்பிகை காட்சி தந்தது, நெஞ்சு இருக்கும் வரை மறக்க முடியாத காட்சி ஆகும். கோவில் குருக்கள், எப்போதும் கிளிகள் இளங்கிளி அம்மையின் கோபுரத்திலேயே தங்கி இருப்பதாக சொன்னதை, கேட்டு மேலும் புல்லரித்துப் போனோம். ஈசன் திரிபுரத்தை எரித்தது நாம் அறிந்த வரலாறுதான். அந்த திரிபுர அசுரர்களான வித்யுன்மலி, தரகாக்ஷன், கமலாக்ஷன் ஈசனை சரணாகதி செய்து அவரது வாயில் காப்பாளனாக இருக்கும் பேறு பெற்ற தலம் இது. இந்த தலத்திலும் அகத்தியருக்கு ஈசன் கல்யாண சுந்தரனாக காட்சி தந்தார். அந்த அற்புதக் காட்சியை இன்றும் கருவறையில் தரிசிக்கலாம். அவருக்கு எதிரே இருக்கும் தியான நந்தி வேறு எங்கும் காண முடியாத அற்புதமாகும். சம்பந்தரால் பாடப் பெற்ற தலம் இது. அப்பர் தனது க்ஷேத்திரக் கோவையில் இந்த தலத்தை குறிப்பிட்டு, இருக்கிறார். திரிபுர சம்ஹாரத்திற்கு தன்னை வணங்காமல் ஈசன் சென்றதால் அவரது தேரின் அச்சை முறித்த விநாயகர் இந்த தலத்தில் இருக்கிறார் என்பது மற்றொரு சிறப்பு. சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 50 கிமீ தொலைவிலும் இந்த தலம் அமைந்திருக்கிறது.திருநல்லூர்அப்பராலும் சம்பந்தராலும் பாடப்பட்ட அற்புதத் தலம், திருநல்லூர். அகத்தியருக்கு ஈசன் கல்யாணக் கோலத்தில் காட்சி தந்த பல தலங்களில், திருநல்லூர் முக்கியமான தலமாகும். இன்றும் மூலவருக்கு பின்புறம் இந்த கல்யாணக் கோலத்தை தரிசிக்கலாம். அப்பருக்கு ஸ்ரீபாத தரிசனம் தந்தவர் திருநல்லூர் வாழ் ஈசன் தான். ஆகவே திருமால் கோவில்களைப் போல இங்கும் சடாரி வழங்கப்படுகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் சோமாஸ்கந்த மூர்த்திக்கு, திருவிழா நேரங்களில் வியர்த்து வழிவது அடுத்த அபூர்வம். இத்தனைக்கும் அவர் புறப்பாடு ஆகும் போது, வெண் சாமரம் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமானின் முகத்தில் வியர்வைத் துளிகள் வழியும். இப்படி பல அதிசயங்களை தன்னகத்தே அடக்கிய திருநல்லூர் சிவன் கோயிலில் மற்றொரு அதிசயமும் உள்ளது. மூலவர் பஞ்சவர்ணேஷ்வரர் நாளொன்றுக்கு ஐந்து முறை தனது நிறத்தை மாற்றிக் கொள்கிறார். தாமிரநிறம், இளம் சிவப்பு நிறம், பொன்னிறம், இன்னநிறம் என்று கூற முடியாத நிறம், நவரத்தின பச்சை என்று ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தனது நிறத்தை மாற்றிக்கொள்கிறார். இதற்கு காரணத்தை யாராலும் இன்று வரை அறியமுடியவில்லை. ‘‘நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த” என்ற மாணிக்கவாசகம், இந்த ஈசனைக் கண்டால் நினைவுக்கு வருகிறது. அது மட்டுமில்லை, குந்திதேவியின் சாபத்தை போக்க அருளியவர் இந்த ஈசன் என்ற செய்தியும் நம்மை மலைக்க வைக்கிறது.இந்த அற்புதத் திருத்தலம், தஞ்சாவூர் கும்பகோணம் ரோட்டில் பாபநாசத்தின் கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.ஜி.மகேஷ்…

You may also like

Leave a Comment

six + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi