Sunday, June 16, 2024
Home » கந்தபுராணக் காட்சிகள் : காவியம் பிறந்த கதை

கந்தபுராணக் காட்சிகள் : காவியம் பிறந்த கதை

by kannappan

‘ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய’ என முருகவேள் திருப்பிறப்பை கந்தபுராணத்தில் கச்சியப்பர் அற்புதமாகக் குறிப்பிடுகிறார். ‘சூரியன் உதித்தான்’ என்றால் என்ன பொருள்! ஏற்கெனவே மறைந்திருந்த சூரியன் வெளிப்பட்டான் என்றுதானே அர்த்தம்.‘செம்மான் மகளைத் திருடும்திருடன்பெம்மான் முருகன் பிறவான் இறவான்’என்று அனுபூதியில் அருணகிரிநாதர் பாடுகிறார்.சூரபத்மனின் கொடுங்கோல் ஆட்சியால் இடர்ப்பட்ட முப்பத்து முக்கோடி இமையவர்களும் வேண்ட, அத்தேவர்களின் அல்லல் போக்கி ஆனந்தம் தர ஆறுமுகப்பெருமான் அவதரித்தான் என்கிறது கந்த புராணம். வேதவியாசர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களில் மகிமையில் மட்டுமல்லாது அளவினாலும் பெரியது ‘ஸ்காந்தம்’ எனப்படும் திருமுருகன் திருக்கதை. ‘எந்த புராணமும் கந்த புராணத்திலே’ என ஏற்றிப் போற்றப்படும் இந்த சண்முகனின் சரித்திரத்தை கனிந்த செந்தமிழில் காவியமாகப் பாடி அருளியவர் கச்சியப்ப சிவாச்சாரியார். முக்திதரும் நகர் ஏழுள் முக்கியமாக விளங்குகின்ற காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டத்தில் சிவாச்சாரியாராக விளங்கிய கச்சியப்பர் முருகன் திருவருளால் காவியத் தமிழில் கந்தபுராணம் இயற்றத் தொடங்கினார்.தினசரி தான் எழுதிமுடித்த பகுதிவரை குமர கோட்ட முருகன் திருப்பாதக் கமலங்களிலே சமர்பிப்பார். அடுத்த நாள் காலை வந்து, அந்த ஏடுகளைப் பார்த்தால் அதில் சில இடங்கள் திருத்தப் பெற்றிருக்குமாம். இப்படியேதான் கந்தபுராணத்தின் பத்தாயிரம் பாடல்களும் இயற்றப் பெற்றன என்றால் முருகன் தன் வரலாற்றைத் தானே எழுதியதாகத்தானே பொருள் படுகிறது. ஆக கந்தபுராணம் ஒரு ஆட்டோ பயோகிராபி! தமிழ்த் தெய்வமான முருகன் தானே எழுதிய தன் வரலாறே கந்தபுராணம்!இப்புராணம் கயிலாயத்தில் தொடங்கி, கயிலாயத்தில் நிறைவு பெறுகிறது. கல்யாணத்தில் தொடங்கி, கல்யாணத்தில் மங்கலமாக நிறைவடைகிறது. பார்வதி – பரமேஸ்வரர் திருமணத்தோடு கதை தொடங்கி, தெய்வானை வள்ளி திருமணத்தோடு புராணம் பூர்த்தியாகிறது.பார்வதி திருமணம்ஒளிமயமான வாழ்வை அடியவர்களுக்கு உருவாக்கித் தருகின்ற ‘உமையம்மை-சிவபெருமானை’ கயிலை மலையில் தேவர்களும், மூவர்களும் தோத்திரம் செய்து வணங்கி மகிழ்ந்து திரும்புகின்றனர். சிவபெருமானும், தேவியும் கயிலையில் தனித்திருக்கின்றனர். அப்போது இறைவி நாயகனை வணங்குகிறாள். ‘நாயகரே! தற்போது என் நாமம் ‘தாட்சாயிணி’ என உள்ளது. தட்சனின் மகள் என்ற பெயரோடு நான் இருக்க விரும்பவில்லை. என் தந்தையாகிய தட்சன் தங்களை மதிக்காது வேள்விசெய்தார். அவ்வேள்வியில் அனைத்து தேவர்களையும் வேறு கலந்து கொள்ளச் செய்தார். சிவநிந்தை புரிந்த அவன் புதல்வி என்ற பெயர் நீங்க வேண்டும். தாங்கள்தான் அனுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்றாள் தேவி.புன்னகைத்த பரமேஸ்வரன் ‘இமாசல வேந்தன் நெடுநாளாக மகப்பேறு வேண்டி பிரார்த்தனை செய்கிறான். இமவான்-மேனை வளர்ப்புமகளாக நீ வளர்ந்து பார்வதி என்ற நாமம் பெற்று என்னை நோக்கி தவம் செய்க! உரியதருணத்தில் உன் நாயகனாக நான் வந்தடைகிறேன்’ என்றார். தாட்சாயணி பார்வதியாக மாறினாள். ஐந்து வயதிலேயே சிவனை நோக்கி தவம் புரிந்தாள். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால், தேவர்கள் அனைவரும் சிவநிந்தை புரிந்தவர்கள் ஆகிவிட்டனர். அத்தீய செயலின் காரணமாகவே அவர்கள் சூரபத்மனின் அடக்கு முறையில் இடர்ப்பட்டனர். மனம் வருந்திய தேவர்கள் ‘மகாதேவனே!  மன்னியுங்கள்’ என மன்றாடினர். சூராதி அவுணர்களை மாய்க்க தாங்கள்தான் தங்களை நிகர்த்த ஒரு மகனை உருவாக்கித்தர வேண்டும் என அகம் உருகி வேண்டினர்.வேதமும் கடந்து நின்றவிமல! ஒர் புதல்வன்தன்னை நீதரல் வேண்டும்! நின்பால் நின்னையே நிகர்க்க!இந்திரன், பிரம்மா, திருமால் தேவர்கள் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டபின் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன். சூரசம்ஹாரத்திற்காகவே சுப்ரமண்யன் தோன்றுவான் என்றார். கயிலையில் இருந்தபடி சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு மோன தட்சிணாமூர்த்தி உருவில் உபதேசம் புரிந்து கொண்டிருந்தார். இமாசலத்தில் இருந்தபடி பார்வதி பரமேஸ்வரனை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்தாள். கயிலைச்சிவனும், இமவான் மடத்தையும் திருமணத்தில் ஒன்று சேர வேண்டுமே! பிறகு தானே திருமுருகள் திருஅவதாரம் நிகழும்! முருகன் அவதாரம் நிகழ்ந்தால்தானே சூரசம்ஹாரம்! சூரன் அழிந்தால் தானே நாம் எல்லாம் உய்வு பெறுவோம் என்றெண்ணிய தேவர்கள், உமையையும் சிவனையும் ஒன்றாக்க மன்மதனின் உதவியை வேண்டினர். ‘மன்மதா நீ சென்று மகாதேவனின் மனதில் இச்சையை உண்டாக்கு! இருவரும் சேரவேண்டும் என்றனர் இமையவர்கள். சிவபெருமானின் சிந்தையிலா ஆசை தோன்றும்! மலரம்பை விட்ட மன்மதன், சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பால் அழிந்தான்.‘தேவதேவா! மன்னியுங்கள்! ஆறுமுகன் தோற்றம் நிகழ்வதற்காகவே அவசரப்பட்டு விட்டோம்! பொறுத்தருள்க! பார்வதியை மணம் செய்து பாலகனைத் தந்தருள்க என வேண்டினார்கள் தேவர்கள். அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காசிபர், ஆங்கிரஸர் என ஏழு முனியவர்கள் இமவான்-மேனையிடம் சென்று திருமணம் நிச்சயிக்க பங்குனி உத்திரத்தன்று பார்வதி திருமணம் சிறப்பாக நடந்தேரியது. அழிந்த மன்மதன் மீண்டும் ரதிதேவி வேண்டுதலால், சிவன் அருள் பெற்று எழுந்தான்.‘சங்கரன் உலகம் எல்லாம் தந்திடும் கன்னி தன்னைமங்கல முறையால் கொண்டான்! மலை மகள் கொடுப்ப!மண்ணில் நல்ல வண்ணம் நாமெல்லாம் வாழ பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை சிவபெருமான் இணைந்தார்.திருமுருகனின் திருஅவதாரம் பார்வதி பரமேஸ்வரன் திருமணம் நிகழ்ந்து பல காலம் ஆகியும் பாலகனைத் தரவில்லை சிவபெருமான். தேவர்கள், திக் பாலகர்கள், இந்திரன், பிரம்மா, திருமால் அனைவரும் ஒன்று கூடி அம்பலவாணரிடம் முறையிட்டார்கள். இறைவன் மனம் இரங்கினார். மன்மதனை தகனம் செய்த நெற்றிக் கண்ணை மீண்டும் திறந்தார். சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள். அவற்றோடு அதோ முகம் என்ற ஆறாவது முகமும் சேர ஆறு முகங்களின் நெற்றிக் கண்ணிலிருந்தும் ஆறுநெருப்புப் பொறிகள் புறப்பட்டன. நெருப்பின் வெம்மையைத் தாங்க முடியாமல் தவித்த தேவர்கள் திசைக்கொருவராய் ஓடினர். ‘இறைவா! இது என்ன சோதனை’ என்று புலம்பினர். சிவபெருமானின் திருவிளையாடலை யாரே அறியமுடியும்!‘தேவர்களே! ஆறு ஜோதிகளையும் தாங்குகிற வல்லமையை அளிக்கின்றேன்! வாய்வும், அக்னியும் இந்த ஆறு சுடர்களையும் ஏந்திச் சென்று கங்கையிடம் கொடுக்க, கங்கை    சரவணத்தில் ஒப்படைக்க, அங்கு ஆறு சுடர்களும் ஒன்று சேர்ந்து ஜோதிஸ்வரூபமாக முருகனாக சூரபத்மனை அழிக்கும் ஆற்றலாகத் தோன்றும் என்றார். சரவணப் பொய்கையில் ஆறுதாமரை மலர்களில், ஆறு ஜோதிகளும் அற்புதமழலை உருவத்தோடு பொலிந்தன. அனைவரும் மகிழ்ந்து கார்த்திகை மாதர்கள் அறுவரை அழைத்தனர்.ஞாலம் ஏற்றிவழிபடும் ஆறு பேர்க்கு மகவெனநாணல் பூத்த படுகையில் வருவோனே!என அருணகிரியார் பாடுகிறார்.வைகாசி விசாகத்தில் திருத்தோற்றம் நிகழ்ந்தது. ‘இன்சொல் விசாகா! க்ருபாகர!’ என அனைவரும் பக்தி முகர்ந்து மெச்சினர். பரமசிவனோடு சரவணப் பொய்கை வந்த பார்வதி, ஆர்வம் அதிகரிக்க ஆறு குழந்தைகளை ஒரு சேரக் கட்டியணைத்தாள். ‘நாதன் கன்னியொடும் சென்று அவர்களுக்குக் காதல் உரு காட்டுதலும், அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் தன் இரண்டு கையால் எடுத்தணைத்து ‘கந்தன்’ எனப்பேர் புனைந்து மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்து’ என்று குமரகுருபரர் இந்நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.பிரணவ உபதேசம்வளர்த்தெடுத்த கார்த்திகை மாதர்களை வாழ்த்தி சிவபெருமான் வரம் வழங்கினார். ‘கார்த்திகை மாதர்களே! உங்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன் எனும் பெயர் பெறுகின்றான் சரவணபவன்!. உங்கள் நட்சத்திரமான கிருத்திகையில் இவ்வடிவேலனை வணங்குபவர்கள் சகல நலங்களும் பெறுவர்! என்று உறுதியளித்து கயிலை திரும்புகிறார்கள் பார்வதி-பரமேஸ்வரர். பொன்னொளி வீசும் திருக்கயிலையில் தந்தை தாய் இடையே முருகன் அமர்ந்திருப்பது, பகலுக்கும் இரவுக்கும் இடையே அமைந்த மாலை நேரம் போல் உள்ளது என்கிறார் கச்சியப்பர். மாலை நேரம் உலகமக்கள் அனைவரையுமே மகிழ்விக்கும் மந்தஹாசமான பொழுது. முருகப்பெருமான் அனைவராலும் ஏற்றிப்போற்றப்படும் இறைவன் அல்லவா!‘சத்து’ எனப்படும் தாவில் சிவத்திலும்‘சித்து’ எனப்படும் தேவி இடத்திலும்புத்திரப்பெயர் பூண்டு இலகும் ஆனந்த வத்துவின் கழல் வாழ்த்தி வணங்குவாம்!என்று பாடி மகிழ்கிறார் பாம்பன் சுவாமிகள்.கயிலையில் இறைவன் இறைவியை வணங்க வரும் எல்லோரும் விளையாடி மகிழும் வேலவக் குழந்தையையும் வந்தனை செய்கிறார்கள். பிரம்மதேவனாகிய நான்முகன் குழந்தையைக் கண்டும் காணாமல் சென்று விடுகிறான். கந்தப் பெருமான் கண்கள் இக்காட்சியைக் காணாமல் இருக்குமா? அகிலத்தையே படைக்கும் ஆற்றல் பிரம்மனிடம் இருந்தாலும் ஆணவம் இருக்கலாமா?ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கிஅனுபூதி அடைவித்தொரு பார்வைக் காரன்என்கிறது திருவகுப்பு.‘ஓம்’ என்னும் பிரணவத்தை முடிமணியாகக் கொண்ட வேதத்தை வைத்தே படைப்புக் தொழிலைச் செய்யும் நான்முகனை அழைத்து, பிரணவத்திற்குப் பொருள் சொல்க எனக் கேட்கிறார் முருகப்பெருமான். பிரணவத்திற்கு பொருள் தெரியாது விழிக்கிறான் நான்முகன். பிரம்மனைக் குட்டி சிறையில் இட்டு படைப்புத் தொழிலைத் தானே மேற்கொள்கிறார் முருகப்பெருமான். இதை அறிந்த சிவபெருமான் சீற்றம் அடைந்து ‘உனக்குப் பிரணவத்தின் பொருள் தெரியுமா? சொல் எனக்கு’ என்கிறார். ‘நான் பிரணவம் அறிவேன். தங்களுக்கும் அதை உணர்த்துவேன்’ என்றார் முருகப்பெருமான்.அரவு புனைதரு புனிதரும் வழிபடமழலை மொழிகொடு தெளிதா ஒளிதிகழ்அறிவை அறிவது பொருள் என அருளிய முருகோனே!என்கிறது திருப்புகழ்.தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க்கு எல்லாம் இனிது.என்ற குறளுக்கு பொருத்தமாக விளங்குகிறார் குமரப் பெருமான். சிவபெருமானை ‘சுவாமி’ என்கிறோம். தந்தைக்கே உபதேசம் செய்ததால் முருகர் ‘சுவாமிநாதன்’ எனப் போற்றப்படுகிறார். சிவபெருமானைத் தொடர்ந்து அகத்தியர்க்கும், அருணகிரி நாதருக்கும் ‘பிரணவ உபதேசம்’ என்கிற பெரும் பரிசை முருகன் அளித்துள்ளார்.ஆலாலம் உண்டவர்க்கும், குறுமுனியார்க்கும்,திருப்புகழ்ப்பண்ணவர்க்கும் உபதேசித்த என் ஆண்டவனே!என முருகர் அந்தாதி மொழிகின்றது.வெற்றிவடிவேலன்வெற்றிவடிவேலன்-அவனுடைவீரத்தினைப் புகழ்வோம்!‘சுற்றிநில்லாதே! போபகையேதுள்ளி வருகுது வேல்!என்று பாடுகிறார் மகாகவி பாரதியார்.அழகு, அறிவு, ஆற்றல் என அனைத்திலும் சிறந்தவர் ஆறுமுகன். இளமையும், எழிலும் கொஞ்சும் ஆறுமுகனின் அழகைக் கண்டு, ஆனந்தம் அடைந்தார் திருமால். அம்மகிழ்ச்சியில், பெருகிய ஆனந்தக் கண்ணீர்த் துளிகளில் அவதரித்த இரண்டு பெண்கள்தான் ஆனந்தவல்லி, சுந்தரவல்லி. அவர்கள் இருவரையும்தான் வள்ளி, தெய்வானை, என மணந்து கொண்டார் முருகப் பெருமான். அதனால்தான் “திருமால் முருகன்” என அவர் போற்றப்படுகிறார். அழகிற் சிறந்த திருமாலே வியந்து பாராட்டியது முருகனின் அழகு! அப்படியே அறிவிற் சிறந்த தட்சிணாமூர்த்தியான சிவபெருமானே உபதேசம் கேட்ட பெருமைக்குரியது முருகனின் அறிவு! ஆயிரத்தெட்டு அண்டங்களையும், நூற்றெட்டு யுகங்கள் ஆண்ட சூரபத்மனை அடியோடு அழித்தது கந்தவேலவனின் ஆற்றல். முருகப்பெருமானின் தலைமையில் தேவர்-அசுரர் போர் நிகழ்ந்தது.கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னை பாலன் என்று இருந்தேன், அந்நாள் பரிசிவை உணர்ந்தியேன்பான் மால் அயன் தமக்கும் ஏனைவானவர் தமக்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ!என்று போர் முடிவில் திறமைமிக்க சூரபத்மனே முருகனின் ஆற்றலை வியந்து போற்றுகிறான்! சிக்கலிலே வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்து வெற்றி வேந்தனாக விளங்கினார் முருகன். வாழ்வு பெற்ற தேவர்கள் வடிவேலன் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினர்.தேவியர் இருவர் முருகனுக்கு!சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன், அஜமுகி என கோடிக்கணக்கான அசுரர் கூட்டத்தை அடியோடு வேரறுத்து கந்தனை அனைவரும் வாழ்த்தினர். வீரத்தில் சிறந்த முருகர் கடல்போன்ற கருணை மனம் கொண்டவர். ஆதலால், சூரபத்மனையே சேவலும், மயிலுமாக ஆக்கி தன் ெகாடியாகவும், வாகனமாகவும் அமைத்துக் கொண்டார். பகைவனுக்கும் அருளுகின்ற பண்பாளர். பன்னிருகண் முருகனை தேவேந்திரன் அணுகி ‘முருகா! தங்களால் நாடும், பதவியும், நற்புகழும் மீண்டும் பெற்றோம். எங்கள் அன்புப் பரிசாக ஐராவதம் வளர்த்த தெய்வானை அம்மையைத் தருகின்றோம். துணைவியாக ஏற்றுக் கொள்க’ என வேண்டினான். பரங்குன்றில் மகிழ்வோடு பாங்குடன் தெய்வானையை கரம்பற்றி நின்றார் கந்தபெருமான்.பின்னர் நாரதர் வள்ளி நாயகி பற்றி எடுத்துரைக்க பூலோகத்தில் வள்ளிமலைச் சாரலைத் தேடி வந்தார். தினைப்புனம் காக்கும் வள்ளியிடம் வேடனாக, முதியவனாக வேடமிட்டு வந்து காதல் மொழி பேசி, அதன் பின் தன் சுயவடிவத்தைக் காட்டினார். முருகனின் தோற்றம் கண்டு சொக்கினாள் வள்ளிநாயகி. திருமணம் நிகழ்ந்தது!“நாவலர் பாடிய நூலிசையால் வருநாரதனார் புகல் குறமாதைநாடியே கானிடை கூடிய சேவக!நாயக! மாமயில் உடையோனே!என திருப்புகழ் இச்சம்பவத்தைச் சிறப்பாகக் கூறுகிறது.இச்சாசக்தியாக வள்ளியும், க்ரியா சக்தியாக தெய்வானையும் விளங்க ஞானவேல் தாங்கி சேவற் கொடி பிடித்து மயில்வாகனத்தில் வலம் வரும் முருகப் பெருமானை, நம் மனவாகனத்தில் ஏற்றிவைப்போம். பதினாறு பேறுகளையும் தன் பன்னிரெண்டு கைகளாலும் பக்தர்களுக்கு வழங்குவான் வடிவேலன்!திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்…

You may also like

Leave a Comment

six + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi