Sunday, June 16, 2024
Home » இசையால் புகழ் பெற்ற ஏகாதசி-கைசிக ஏகாதசி

இசையால் புகழ் பெற்ற ஏகாதசி-கைசிக ஏகாதசி

by kannappan

இசையால் வசமாகா இதயம் எது? இறைவனே இசை வடிவம் எனும்போது” என்று ஒரு பாடல் உண்டு. இசை வேறு; இறைவன் வேறு அல்ல. பகவான் கண்ணன் கீதையில், ‘‘நான் சாமவேதம் ஆக இருக்கிறேன்” என்று சொல்கின்றான். (ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்த ஸாமஹம்|) இசை என்பது இசைய வைப்பது. இசை என்பதற்கு “புகழ்” என்ற ஒரு பொருளும் உண்டு. ‘‘ஈதல் இசைபட வாழ்தல்” என்று, வள்ளுவரும் புகழோடு வாழ வேண்டும் என்பதற்கு, இசையோடு வாழவேண்டும் என்று சொல்கின்றார். அந்த இசையால் இறைவனை வணங்குவது என்பது வழிபாட்டில் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இசையும் வைணவமும் ஆண்டாள் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள். இறைவனை இசையால் கட்டிப் போட்டாள். ஆழ்வார் களில், எல்லா  ஆழ்வார்களும், இசையால் பாடி இறைவனை மயக்கியவர்களே.திருப்பாணாழ்வார் யாழ் மீட்டி, பண்ணார் இசைத்தமிழ் பாடி, பத்தே பாசுரங்களில் இறைவனை ஈர்த்தவர். திருவாய்மொழி முழுக்க இசைப் பாடல்கள் என்பார், அதனைத்  தொகுத்த நாதமுனிகள்.‘‘யாழின் இசை வேதத்தியல்” என்று திருவாய்மொழியைச் சொல்வார்கள்.பெரியாழ்வார் கைத்தாளம் கொண்டு, யானைமேல் ஏறி, பகவானுக்குப் பல்லாண்டு பாடிக் கொடுத்தவர். திருவாய்மொழியின் பொருளை ஒருவர் உள்ளபடி உணர வேண்டும் என்று சொன்னால், அவருக்கு இசை அறிவு இன்றியமையாதது என்பார் உரையாசிரியர் நம்பிள்ளை. ஆழ்வாருடைய உள்ளத்து உணர்ச்சிகளை இசை கொண்டு தான் ஒருவர் உள்ளபடி அறிய முடியும்; உணரமுடியும் என்பது வைணவ உரையா சிரியர்கள்  அடிப்படையான கொள்கை.ஸ்வரம் மட்டுமின்றி தாளம் கொண்டும் ஆழ்வாரின் ஆற்றாமை மிகுதியை அறியவேண்டும் என்பார்கள் வைணவ உரையாசிரியர்கள். ‘‘ஆடி ஆடி அகம் கரைந்து, இசை பாடிப் பாடி கண்ணீர் மல்கி” என்ற பாசுரத்திற்கு உள்ள விளக்கத்தை நுட்பமாக உணர்ந்ததால்தான், எப்படி ஆட வேண்டும், எத்தனை தரம் ஆட வேண்டும், அந்த ஆடலின் உணர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதையெல்லாம் மிக விரிவாக அரும்பத உரையில் விளக்கியிருக்கிறார்கள்.வைணவம் தமிழ் இசைக்கு ஆற்றிய சேவைவைணவம் இசைக்கு – அதுவும் தமிழ் இசைக்கு – ஆற்றிய சேவை அளவிட முடியாது. வைணவத்திருநாள்களில் முக்கியமான நாள் ஏகாதசி என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலே ஒரு ஏகாதசி, இசையின் மகிமையைத்  தெரிவிப்பதற்காகவே ஏற்பட்டது என்றால், வைணவம் இசைக்கு- அதுவும் தமிழ் இசைக்கு- தந்த முக்கியத்துவத்தை உணர முடியும். அந்த ஏகாதசிதான் கார்த்திகை மாதத்தில் வளர்பிறை நாளிலே வருகின்ற “கார்த்திகை ஏகாதசி”. இந்த ஏகாதசியின் மகிமையும் பெருமையும் தமிழ்ப் பண்ணிசையோடு தொடர்புடையது. வைகுண்ட ஏகாதசியின்  அடித்தளம் திருவரங்கம் என்று சொன்னால், கார்த்திகை மாதம் வருகின்ற ஏகாதசிக்கு அடித்தளம் திருக்குறுங்குடி.ஏன் கைசிக ஏகாதசி என்று பெயர்?அதுசரி, இந்த ஏகாதசிக்கு ஏன் கைசிக ஏகாதசி என்று பெயர்? வேறு ஏகாதசியில் இல்லாதபடி, கைசிக புராணத்தை இந்த ஏகாதசி இரவில் மட்டும் ஏன் படிக்க வேண்டும்? என்கின்ற கேள்வி எழலாம். அதற்கு அடிப்படையாக அமைந்த கதைதான், வராக புராணத்தில் ஸ்ரீவராகப் பெருமாள் பூமிப் பிராட்டிக்கு அருளிச்செய்த கைசிக புராணக் கதை. இந்தக் கதை நடைபெறுகின்ற இடம், நாம் ஏற்கனவே பார்த்த திருக்குறுங் குடி. இந்தக் கதையின் நாயகன் நம்பாடுவான் என்கின்ற தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த ஒரு பாணர். பரம பாகவதர். இசையில் விற்பன்னர். அவர் பலப்பல பண்களைப் பாடினாலும், கைசிகம் என்கின்ற பண்ணைப் பாடுவதில் மிகுந்த நிபுணத்துவம் உடையவர். பகவானும் இந்தப் பண்ணை விரும்பிக்  கேட்பார். திருக்குறுங்குடி இறைவனாகிய அழகிய நம்பிராயர் முன்னால் இவர் பண் பாடுவார்.பிரம்மராட்சஸ்இப்படி அவர் பகவானுக்கு இசையால் தொண்டுபுரிகின்றபோது, கார்த்திகை வளர்பிறை தினம் ஏகாதசி தினம் வந்தது. அன்று விரதமிருந்தவர் இரவில் பெருமாள் கோயிலுக்குச் சென்று பாட வேண்டி புறப்பட்டார். அவர் போகின்ற வழியில் ஒரு மரத்தில் பிரம்மராட்சஸ் இருந்தான். அந்த பிரம்மராட்சஸ் இவரை வழிமறித்து தான் பசியோடு இருப்பதாகவும், இவரை இன்றைக்கு ஆகாரமாக உண்ணப்போவதாகவும் சொன்னான். உடனே, நம்பாடுவான் என்கின்ற பரம பாகவதர் சொன்னார்.‘‘ஒருவனுக்கு பசிக்கு உணவாக நான் இருக்கப்போகிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. அந்தக் கடமையைச் செய்து முடித்து விட்டு, என்னை நானே உன்னிடம் ஒப்படைத்து விடுவேன். நீ என்னை உண்டு பசியாறலாம். இப்போது என்னைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி” இப்படி நம்பாடுவான் சொன்னாலும் கூட, பிரம்மராட்சஸ் நம்ப மறுத்தான்.‘‘நீ மனிதன். பேசுவதை மறுத்து பேசுபவன். நான் இப்பொழுதுஉன்னை விட்டுவிட்டால், நீ திரும்ப எனக்குக் கிடைக்க மாட்டாய். வேறு யாரும் எனக்கு பசிக்கு உணவாக அமைய மாட்டார்கள். கிடைத்த உணவை விட்டுவிட்டு பிறகு உணவு தேடுவது என்பது புத்திசாலி செய்கின்ற காரியம் அல்ல. எனவே, நான் உன்னை நம்பத் தயாராக இல்லை” என்று சொன்னவுடன், நம்பாடுவான் அந்த பிரம்மராட்சஸ் முன் பல சத்தியங்களைச்  செய்து கொடுக்கிறார். அந்தச் சத்தியங்கள்தான் பல ஸ்லோகங்களாக கைசிக புராணத்தில் படிக்கப்படுகின்றன. அவர் செய்த சத்திய வார்த்தைகள் அற்புதமானவை.நம்பாடுவான் செய்த சத்தியங்கள் பிரம்மராட்சசனே!  நான் வாக்குக் கொடுத்தபடி, நடந்து கொள்ளவில்லை என்று சொன்னால், 1. சத்தியத்திலிருந்து நழுவுகிறவன்  எந்தப் பாவத்தை அடைவானோ அந்தப் பாவத்தை அடைவேன்.2. யார் ஒருவன் காம உணர்வோடு பிற பெண்களைப் பலவந்தப்படுத்தி எந்தப் பாவத்தை அடைவானோ அந்தப் பாவத்தை அடைவேன்.  3. யார் ஒருவன் உணவருந்தும் பொழுது தனக்கு அதிகமாகவும் பிறருக்குக் குறைவாகவும் வைத்து பாகபேதம் பண்ணி சாப்பிடுகின்றானோ, அந்தப் பாவத்தை அடைவேன்.4. யார் ஒருவன், ஒருவனுக்குத் தானம் செய்துவிட்டு பிறகு, அவரிடமிருந்து திரும்ப அந்தத் தானத்தைப் பெற்றுக்கொள்ளுகின்றானோ, அந்தப் பாவத்தை அடைவேன்.5. யார் ஒருவன் ஒரு பெண்ணை இளமையான காலத்தில் அனுபவித்துவிட்டு அவளை நிர்கதியாக விடுகின்றானோ அந்தப் பாவத்தை அடைவேன்.6. யார் ஒருவன்  அமாவாசை  சிராத்தம் செய்து விட்டு அன்று இரவு பெண்களோடு சல்லாபம் புரிகின்றானோ அந்தப் பாவத்தை அடைவேன்.7. யாரொருவன் ஒருவரிடம் உணவு உண்டு விட்டு பிறகு ஊரெல்லாம் அவனைப் பற்றித் தவறாகப் பேசுகின்றானோ அந்தப் பாவத்தை அடைவேன்.8. யாரொருவன் தன்னுடைய பெண்ணை ஒருவருக்கு கொடுக்கிறேன் என்று சங்கல்பம் செய்துவிட்டு பிறகு கொடுக்காமல் போகின்றானோ அந்தப் பாவத்தை அடைவேன்.9. யாரொருவன் சஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி இப்படிப்பட்ட திதிகளில் நீராடாமல் உண்கின்றானோ, அந்தப் பாவத்தை அடைவேன்.10. யார் ஒருவன் நண்பன் போலப் பழகி அவருடைய மனைவியை வசீகரித்து, தன்னுடைய ஆசைக்கு இணங்கவைத்து மோசம் செய் கிறானோ, அந்தப் பாவத்தை அடைவேன்.இப்படி வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்து, கடைசியில், யார் ஒருவன், “பரவாசுதேவனான ஸ்ரீமன் நாராயணனைத் தாழ்வான தேவதையாகக்  கருதுகிறானோ” அந்தப் பாவத்தை அடைவேன் என்று பிரதிக்ஞை செய்கின்றார். (நாராயண மதாந்யைஸ் து தேவைஸ் துல்யம் கரோதிய:தஸ்ய பாபேந லிப்யேயம் யத் யஹம் நாகமே புந )இந்த சத்தியங்களைக் கேட்ட பிரம்மராட்சஸ் இவனை விட்டுவிடுகின்றான்.நம்பாடுவான் பாடிய கைசிகப் பண்அன்று தன்னுடைய விரதம் கெடாமல் பூஜைசெய்ய முடிந்ததே என்று நினைத்துக்கொண்டு நம்பாடுவான் அழகிய நம்பிராயர் சன்னதிக்குச் சென்று அற்புதமாகப் பாடுகின்றார். கைசிக பண்ணினால் பகவானை பூஜிக்கின்றார். இந்த ஏகாதசியில்  பூஜிக்கப்பட்ட, தமிழிசையில் மிகவும் பெருமை பெற்ற, இந்த கைசிக பண்ணினைப்   பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இது மருதயாழ் பெரும்பாலையில் தோன்றிய பண். மங்கலமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியது. இரண்டாம் சாமத்தில், அதாவது இரவு 9 லிருந்து 12 மணி வரை பாடக்கூடிய பண்.இன்றைக்கு இந்தப் பண்ணுக்கு இணையாக பைரவி ராகத்தைச் சொல்லுகின்றார்கள். இது இரக்கச் சுவையை உடைய பண்.திருக்குறுங்குடி திருவாய்மொழி இந்தப்  பண்ணில்தான் அமைந்திருக்கிறது. இந்தப் பண்ணை நம்பாடுவான், ஊனையும் உருக்கும் வண்ணம் பாடியவுடன் பகவான் மிகவும் மகிழ்கிறான்.அவன் முகத்தில் பொலியும் ஆனந்தத்தை உணர்ந்த நம்பாடுவானுக்கும் மகிழ்ச்சி.நம் பாடுவான் செய்த சங்கல்பத்தை அறிந்த ஒருவர், நம்பாடுவானிடம், “இதோ பார், பிரம்மராட்சஸ் அங்கேயே உனக்காகக் காத்துக்கொண்டி ருக் கிறான். சென்றால் நிச்சயம் உன்னை அவன் விழுங்கிவிடுவான்.. ஆகையால் நீ வேறு வழியாகச் சென்று விடு” என்று சொல்ல, நம்பாடுவான், ‘‘இல்லை, இல்லை. நான் அந்த வழியாகத்தான் செல்வேன். செய்து கொடுத்த சத்தியத்தை விடுவதை விட , உயிரை விடுவது மிகச் சிறந்ததாகும். எனவே எனக்கு உயிர் முக்கியம் அல்ல. என்னுடைய சத்தியம் தான் முக்கியம். பாவம், அவன் பசியோடு காத்திருப்பான். நான் அவனுக்கு இன்று உணவாகப்  போவேன் என்று சொல்லிவிட்டு அந்த வழியே செல்கின்றார். தன்னைக் காப்பாற்றச் சொல்லிய பிரம்மராட்சஸ்இதற்கிடையில் நம்பாடுவானுக்காகக் காத்திருந்த பிரம்மராட்சசுக்கு பசி போன இடம் தெரியவில்லை.இனி ஒரு துளி கூட சாப்பிடக்கூட முடியாத அளவுக்கு வயிறு நிறைந்த உணர்வு பிறந்தது.சொன்னபடி நம்பாடுவான் வந்தால் என்ன பதில் சொல்வது என்கிற யோசனையோடு உட்கார்ந்திருந்தான்.நம்பாடுவான்  பிரம்மராட்சஸ் இருக்குமிடம் வந்து அவனை எழுப்பினார்.‘‘இன்று என்னுடைய ஏகாதசி விரதத்தை  முழுமையாக முடித்துவிட்டேன். துவாதசி பாரணை செய்கின்றபோது, ஒருவருக்கு உணவிட்டு, தானம் தந்து, துவாதசி பாரணை முடிக்கவேண்டும் என்று சொல்வார்கள். நான் ஏழை. இன்று நான் என்னையே உணவாகத் தருகிறேன். ஏற்று பசியாறிக்கொள்”தன்னுடைய உயிர் போகும் தறுவாயில் கூட, சத்தியத்தை மீறாமல் தன் முன்னால் நிற்கும் நம்பாடுவான் வைராக்கியம் கண்டு,  பிரம்மராட்சஸ் மனம் தளர்கிறான். கண்களில் கண்ணீர் கொட்டுகிறது.தான் பிரம்மராட்சஸ் ஆன கதையைச் சொல்கின்றான். “ஐயா..நான் சோமசர்மா என்ற ஒரு பிராமணனாய் இருந்தேன்.யாகம் செய்யும்போது சரியான பொருள்களினால் யாகம் செய்யவில்லை. அலட்சியத்தோடு யாகம் செய்தேன்.மந்திரங்களைச் சரிவரப் பிரயோகம்  இல்லாமல் யாகம் செய்தேன் .பொருளாசை கொண்டு யாகம் செய்தேன். இப்படி யாகம் செய்ததால் எனக்கு மகத்தான பிரம்மராட்சஸ் தோஷம் உண்டாகி விட்டது. தொடங்கிய ஐந்தாவது நாளில் அந்த கடுமையான தோஷத்தில் நான் மரணத்தை அடைந்தேன். தன்னை இந்த துர்கதியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சொல்ல, ‘‘சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று நம்பாடுவான் கேட்கிறார். ‘‘நான் இப்பொழுது உன்னைச் சாப்பிடுவதாக இல்லை. நீ தப்பிப் பிழைக்கலாம். ஆனால், எனக்கு நீ இன்று பகவானுக்கு பாடிய பாட்டின் பலத்தை தந்து, என்னுடைய பிராணனைக்  காப்பாற்ற வேண்டும்” இப்பொழுது நம்பாடுவான் சொல்லுகின்றார்.‘‘என்னைத்தானே நீ கேட்டாய். நான் வந்து விட்டேன். என்னை உணவாகக் கொள்ள வேண்டும்.இப்பொழுது பேச்சு மாறி என்னுடைய பாட்டின் பலத்தைக்  கேட்கிறாயே, இது சரியா ?”‘‘சரி, உன்னுடைய கீதபலம் தராவிட்டாலும், அதில் பாதியாவது தரலாமே” நம்பாடுவான் சொல்லுகின்றான். “முடியாது.நான் ஆத்மார்த்தமாகப் பாடியது.” “சரி இரவு முழுக்க பாடிய பலனைத் தர வேண்டாம். ஒரே ஒரு யாமத்தில் பாடிய பலத்தைத்  தந்தால்,  உன்னுடைய பிள்ளைகளோடு நீ மகிழ்ச்சியாக வாழலாம். நான் உன்னை விட்டு விடுவேன்.” ‘‘என்னை விடச் சொல்லவில்லையே. என்னை உனக்குக் கொடுப்பேன். அதுதானே ஒப்பந்தம். நீ ஏன் வேறு மாற்றிக் கேட்கிறாய்? நான் ஒரு யாமத்தில்  பாடிய பலனை உனக்குத்  தருவதாக இல்லை. அது என்னுடைய ஆத்ம சம்பந்தமானது. நீ என்னுடைய  சரீரத்தைத்  தானே கேட்டாய். அது தருவதற்குத் தயாராக இருக்கிறேனே… பின் ஏன் வீணாகப் பேசுகிறாய்? இனிமேல் நம்பாடுவானிடம் சரணாகதி செய்வதைத் தவிர, வேறு வழியில்லை என்று உணர்ந்த பிரம்மராட்சஸ் அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி, ‘‘பரம பாகவதனே! உன் திருவடி தவிர கதி இல்லைஒரே ஒரு பாட்டின் பலனையாவது தந்து என்னை இந்த பிரம்மராட்சஸ் என்கின்ற  துன்பத்தில் இருந்து விடுவிக்கக்கடவாய்”என்று பலபடியாகப்  பிரார்த்திக்கின்றான்.     நம்பாடுவான் மனம் இரங்கி, “நான் இன்று இரவு, பகவான் முன்னாலே கைசிகப் பண் பாடினேன். அதைக் கேட்டு பகவானும் உருகினான். அப்படிப் பாடிய அந்தப் பண்ணின் பலத்தை உனக்குத் தருகிறேன்”என்று சொல்லி, “கைசிகப் பண்ணின் பலத்தால்  உன்னுடைய ராட்சஸ எண்ணத்திலிருந்து நீ பழைய நிலையை அடைவாய்” என்று அவனை பிரம்மராட்சஸ் தோஷத்திலிருந்து விடுவித்தார்.இதை வராக புராணத்தில் பிராட்டிக்கு வராகப் பெருமாள் கூறுகின்றார்.‘‘கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி விரதமிருந்து நம்முடைய சந்நதியில் இந்தப் புராணத்தைப் பாடி, நம்மைத் தோத்திரம் செய்கின்றவர்கள், நம்பாடுவானைப் போல மிகச்சிறந்த புகழை அடைவார்கள். மற்றவர்களின் பாவங்களைத்  தீர்ப்பார்கள்.”பாரதிநாதன்…

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi