Friday, May 17, 2024
Home » ஆலிலையில் துயின்ற பெம்மான்

ஆலிலையில் துயின்ற பெம்மான்

by kannappan
Published: Last Updated on

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-89‘‘பொன்றுதல்’’ என்ற சொல்லிற்கு குறைதல், அழிதல் என்ற பொருளுடையதாகும். இந்த குணங்கள் ஆறுமின்றி பிற குணங்கள் அனைத்தும் சாதாரண மானுட மனதில் தோன்றி குறைந்து அழியும் தன்மையுடைய குணங்கள். இந்த இடத்தில் குணம் எனப்படுவது ஆசை, கோபம் முதலான இவை இறை அருளை பெற்று தராது விலக்கும் பண்புடையது. காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் இந்த பண்புகள் உபாசனைக்கு உகந்ததல்ல. இவை மனதை விட்டு நீங்காது மனிதனுக்கு துன்பம் செய்வனவாகும். இதை ‘‘பொன்றாது’’ என்றார். உமையம்மை நம் மனதில் குடிபுகுந்து ‘‘பொன்றாது’’ நின்றாள் அல்லாது மனித மனதில் இந்த குணங்கள் ஒழியாது அதனால்தான் மனதில் ‘‘நின்றாள்’’ என்றார்.இதை சிற்ப சாத்திரம் துர்கையினிடத்து எருமையும், சிங்கமும் போல, உமையம்மையிடத்து அன்னமும், பாம்பும், மாதொருபாகரிடத்து சிங்கமும், காளையும் இருப்பதைக் கொண்டு இவ்விரண்டு அறுவகை குணங்களையும் அறியலாம். ‘‘மகிடன் தலைமேல் அந்தரி’’-8.‘‘புரிகின்றவர்’’என்பது உமையம்மையுடன் இணைந்து தோன்றும் அர்த்த நாரியை குறிக்கும். அபிராமி பட்டர் உள்ளத்தில் அர்த்தம் நாரியை த்யானம் செய்கிறார். அப்படி த்யானம் செய்வதனால் அவரது நெஞ்சத்தில் அர்த்த நாரியை நிறுத்திக் கொள்கிறார். அப்படி நிறுத்துவதனால் காமம் முதலான ஆறு குணங்கள் ஒழியும். சத்யம் முதலான ஆறுகுணங்கள் வாழும்.மேலும் புரிகின்றவா – புரிகின்றவள் என்று உமையம்மையை மட்டும் குறிப்பிடாமல், புரிகின்றவன் என்று சிவனையும் தனித்து குறிப்பிடாமல் இருவரையும் இணைத்து ‘‘புரிகின்றவா’’ என்று சிவசக்தியாகிய அர்த்தநாரியை குறிப்பிட்டார். இதையே ‘‘ஏக உருவில் வந்திற்கு எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தாய்’’- 31 என்பதனால் சத்யம் முதலான ஆறு குணங்களையும், ‘‘அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே- 31 என்பதனால் தீய குண நீக்கத்தையும் குறிப்பிடுவதிலிருந்து நன்கு அறியலாம். அழியாத குணக்குன்றே 95 என்பதனால் உமையம்மை உபாசகனிடத்து குணமாக தோன்றி அருள்புரிகின்றார் என்பதையே ‘‘புரிகின்றவா’’ வார்த்தையால் குறிப்பிட்டார். நக்குரோதோ, நசமாச்சர்யோ… ஸ்ரீசூக்தம் ஜபேத் என்ற வேத வரியினாலும் உணரலாம்.அறிவார் அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே ‘‘அறிவார்’’ என்பது முக்காலத்தும் எவ்விடத்தும் யாவற்றையும் எல்லா நிகழ்வையும் ஒருங்கே அறிகின்ற பேராற்றல் பெற்ற ரிஷிகளையே குறிக்கும். ரிஷிகள் என்பவர் மந்திரத்ருஷ்டாக்கள் என்கிறது. வேதம் முதலான சாத்திரங்கள். இவர்கள் தேவதைகளை அழைக்கும் வல்லமையுள்ள துதிகளை தேவதையின் அருளினால் தான் கண்டறிந்து உணர்ந்து அனுபவித்தவர்கள் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு ரிஷி உண்டு. ஒவ்வொரு மந்திரங்களும் ஆறு அங்கங்களை கொண்டது. தேவதை, பயன், சந்தஸ், பீஜம், கீலரம், ரிஷி என்ற ஆறில் ஒன்று தான் ரிஷி, அந்த வகையில் ‘‘அறிவார்’’ என்பது விஷ்ணுவையும், அவர் நாபிக்கமலத்தில் உதித்த ப்ரம்மாவையும், ருத்ரனையும் குறித்தது. ‘‘ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரோ ரிஷி:’’ என்ற மந்திரத்தை குறிப்பிடுகிறார் பட்டர்.    இது உமையம்மையின் மந்திரத்தை மறைமுகமாக குறிப்பிடுகிறது. மேலும் ‘‘அறிவார்’’ என்பது ப்ரம்மாவையும் அதாவது ‘‘வேதா’’ என்ற வடசொல்லின் தமிழ்ப் பொருள். ‘‘ஆலிலையில் துயின்ற பெம்மான்’’ என்று விஷ்ணுவையும் ‘‘என் ஐயன்’’ என்பது ருத்ரனையும் குறிக்கும். இம்மூன்று தேவதைகளுமே ரிஷியாகவே சொல்லப்பட்டுள்ளது. இவர்கள் மூவரையும் ரிஷிகளாக கொண்ட உமையம்மையின் மந்திரத்தையே மறைமுகமாக குறிப்பிடுகிறார்.இந்த மந்திரத்தையே பட்டர் ஜெபம் செய்து உமையம்மையின் அருளை பெற்றார் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறாா். இதை பிரம்மன், புராரி, முராரி… சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலோயே’’-97 என்ற வரிகளால் நன்கு அறிய முடிகிறது. சாக்த வழிபாட்டில் இம்மூவரையும் ரிஷியாக கொண்ட மந்திரத்தை சோடசி என்று அழைப்பர். சாக்த தத்துவ ஞானத்தை உணரவும், உணர்த்தவும் வல்ல பயன் இம்மந்திரத்தால் உண்டாகிறது. இம்மந்திரமானது இராஜ ராஜேஸ்வரி என்ற தெய்வத்திற்கு உரியதாகும். இத்தேவதை காம்ய மோட்ஷ, ஞானத்தை தரவல்லது. மேலும் உமையம்மை வழிபாடானது மாணவர் (பிரம்மச்சாரி) இல்லறத்தார் (க்ருஹஸ்தீர்) தவம் செய்யும் முதியோர்களான தம்பதியர் (வானப்ரஸ்தர்) துறவியர் (சன்யாசி) ஆகிய நால்வரும் இம்மந்திரத்தை ஜபம் செய்வதன் பயனாய் அறம், பொருள், இன்பம் வீடு ‘‘தர்மார்த்த காம மோக்ஷம்ச விந்ததி’’யை பெறுவர் என்கிறது வேதாந்தம். இந்நால்வருள் ப்ரம்மச்சாரி ஒன்றாயும், க்ருஹஸ்தன்- பலவாயும், வானப்ரஸ்தன்- இவ்வுலகெங்கிலும் உள்ள பொருளாயும் தோன்றுவது.இந்நால்வர் உள்ளத்திலும் உமையம்மையே இம்மந்திரத்தின் வழி விளங்கி தோன்றி அருள்புரிவதையே இப்பாடல் வலியுறுத்துகிறது. இந்நால்வரும் ஒரே மந்திரத்தை நான்கு விதத்தில் உச்சரித்து பயன் பெறுகின்றனர். சகஸ்ர நாமத்தில் நான்கு த்யானமும் கொடுக்கப்பட்டுள்ளதை கொண்டு நன்கு உணரலாம். மொத்தத்தில் இப்பாடல் ஒரு ‘‘சோடசாக்ஷரி’’ மந்திரமே என உணரலாம். இனி அடுத்த பாடலுக்குள்.ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்செய்ய பசுந்தமிழ் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே- பாடல் எண்.57.‘‘ஐயன் அளந்தபடி’’ஐயன் என்பது சிவபெருமானை குறித்தது. அளந்தபடி என்பதற்கு அருளியவழி என்பது பொருள். இப்பாடலில் ‘‘ஐயன்’’ என்ற சொல் பொதுவில் சிவாலயங்கள் அனைத்திலுமுள்ள சிவனை குறிக்காமல் காஞ்சியிலே எழுந்தருளி யிருக்கக் கூடிய ஏகாம்பரநாதர் என்ற சிவத்தையே இங்கு குறிப்பிடுகிறார்.‘‘இரு நாழி கொண்டு’’ என்று அடுத்து வரும் பதத்தால் அது அக்கோயிலின் தலபுராணத்தை சூட்டி காட்டுவதை அறியலாம். தலபுராணம் என்பது ஒவ்வொரு கோயிலும் எப்படி தோன்றியது, அங்கு தெய்வம் எப்படி வெளிப்பட்டு அருளியது, யாருக்கு அருளியது, அருளை அடைவதற்கு அவர்கள் என்ன முயற்சியை செய்தார்கள். எந்த காலம், எந்த இடம், என்ன அருள் நிகழ்வு என்பதை எல்லாம் விளக்கி சொல்லுகிற தகவலாகும். அந்த கோயிலுக்கே உறிய தனி அடையாளமாகும்.காஞ்சிபுர நகரத்தில் மிக தொன்மையான இறைவி ஏலவார் குழலி, உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயிலாகும். இது சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் எழுந்தருளியுள்ள உமையம்மையையே இப்பாடலில் குறிப்பிடுகிறார். இறைவனிடம் பெற்ற இருநாழி நெல்லைக் கொண்டு உமையம்மையானவள் முப்பத்திரண்டு அறங்களையும் செய்தாள். அந்த அறங்களை நாம் அறிவது அவசியம். அவை- ஆதுலார்க்கு சாலை, ஓதுவார்க்கு உணவு, அறு சமயத்தோர்க்குண்டி, பசுவிற்குவாயுரை, சிறைச்சோறு ஐயம், தின்பண்டம், நல்கல், அறவைச் சோறு, மகப்பெறுவித்தல், மகவுவளர்த்தல், மகவுப்பால்வார்த்தல், அரவைப்பிஞ்சுண்டல், அறவைத் தூரியம் (வஸ்திரம்) கண்ணம், (உடல் ஊனமுற்றோர் உதவுதல்) நோய் மருந்து, வண்ணார், நாவிதர், கண்ணாடி, காதோலை, கண்மருந்து, தலைக்கெண்ணெய், பெண்போகம், (திருமணம்) பிறர்துயர் காத்தல், தண்ணீர் பந்தர், மடம், தடம், ஆவுறிஞ்சுதறி (தினவுக்கல்) விலங்கிற்குணவு, ஏறுவிடுதல், விலைகொடுத்துயிர் காத்தல், கன்னிகா தானம் முதலியன முப்பத்தி இரண்டு அறங்களாக சொல்லப்பட்டுள்ளது.(தொடரும்)முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்…

You may also like

Leave a Comment

8 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi