Monday, June 17, 2024
Home » ஆண்டவரிடத்திலே கேளுங்கள்

ஆண்டவரிடத்திலே கேளுங்கள்

by kannappan

இஸ்ரவேல் நாட்டை ஆட்சி செய்து வந்த தாவீது அரசரின் காலத்துக்குப்பின், அவரது மகனாகிய சாலமோன் அரசாகப் பொறுப்பேற்றார். ஒருநாள் இரவு சாலமோன் உறங்கிக்கொண்டிருந்தபோது கர்த்தர் அவருக்கு தரிசனமாகி, நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் (ராஜாக்கள் 3 : 5) என்றார். அதற்கு அவர் கர்த்தாவே, நீர் உமது அடியேனை என் தந்தையின் இடத்தில் அரசராக்கினீரே, எண்ணிக்கைக்கு அடங்காத திரளான ஜனங்களாகிய உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வரையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்(ராஜாக்கள் 3 :9) என்று விண்ணப்பம் பண்ணினான். சாலமோனின் விண்ணப்பம் கர்த்தரின் பார்வையில் உகந்ததாக இருந்தது. எனவே கர்த்தர் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தைக் கேட்டதினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்: ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை: இதுவுமின்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும், மகிமையையும் உனக்குத் தந்தேன் (1 இராஜாக்கள் 3:12,13) எனக்கூறி அவரை ஆசீர்வதித்தார்.அன்புக்குரியவர்களே! புத்தகங்கள் வழியாக அறிவை வளர்த்துக் கொள்ளலாம். பெரியோரிடம் இருந்து புத்திமதியைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஞானத்தை இறைவனிடமிருந்து மட்டுமே நாம் பெற முடியும். ஆம்! ஞானம் என்பது, இறைவன் மனிதக்குலத்துக்கு அருளும் மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். இறைவன் அருளும் இப்பேராசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொண்டால், நாம் செய்கின்ற எந்தவொரு வேலைகளையும் மிகவும் நேர்த்தியாக நம்மால் நிறைவேற்ற முடியும். ஞானமிருந்தால், படிக்கின்ற மாணாக்கர் பாடங்களை எளிதாகப் புரிந்துகொண்டு, மிகச்சிறந்த முறையில் கல்வி கற்பார்கள். ஞானமிருந்தால், இல்லத்தரசிகள் தங்கள் குடும்பப் பொறுப்புகளை சிறப்புடன் நிறைவேற்றுவார்கள். நாம் செய்கின்ற பணிகள், தொழில்கள், வியாபாரங்கள் போன்றவற்றை மிகுந்த மதிநுட்பத்துடன் நம்மால் நிறைவேற்ற முடியும். எனவேதான், ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி (நீதிமொழிகள் 4 :7). ஞானம் கேடயம், ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும் (பிரசங்கி 7 :12) ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும் (பிர. 7:9), மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும் (பிர. 8 :1) என்று ஞானத்தின் மேன்மையைக் குறித்து பல திருமறை வசனங்கள் கூறுகின்றன. இத்தகு மேன்மை நிறைந்த ஞானத்தை எவ்வாறு நாம் பெறலாம்? தொடர்ந்து சிந்திப்போம். உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் (யாக்கோபு 1 : 5) என்று திருமறை கூறுகிறது.ஆம்! சாலமோன் அரசர் ஜனங்களை நியாயம் விசாரிக்க, தனக்கு ஞானம் வேண்டும் என்று மனத்தாழ்மையோடு இறைவனிடத்தில் வேண்டிக்கொண்டதால், இறைவன், ஞானம் என்னும் ஒப்பற்ற ஆசீர்வாதத்தை அவருக்குத் தந்தருளினார் என்று காண்கிறோம். நாமும் கர்த்தருடைய பாதத்தில் தினமும் அமர்ந்திருந்து, நாம் செய்கின்ற பணிகள், நமது குடும்பப் பொறுப்புகள் போன்றவற்றை, வேண்டிய ஞானத்தைக் கர்த்தரிடத்தில் வேண்டிக் கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் (மத்தேயு 7:7) என்ற திருமறை வசனத்தின்படி கடவுள் நமக்கும் ஞானத்தைத் தந்து நம்மை வழிநடத்துவார். கர்த்தர்தாமே ஞானம் என்னும் பேராசீர்வாதத்தைத் தந்து நம்மை ஆசீர்வதிப்பாராக.தொகுப்பு: Rev. Dr. S.E.C. தேவசகாயம்பேராயர், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம்.

You may also like

Leave a Comment

17 − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi