Monday, June 17, 2024
Home » அலங்கார செடிகள், பழச்செடிகளை உருவாக்கும் நாற்றுப்பண்ணை-தேவை, சந்தை வாய்ப்புகள் அதிகம்

அலங்கார செடிகள், பழச்செடிகளை உருவாக்கும் நாற்றுப்பண்ணை-தேவை, சந்தை வாய்ப்புகள் அதிகம்

by kannappan

இந்தியாவில் நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் தோட்டகலைப் பயிர்கள், அலங்கார பயிர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் சமீப காலமாக நாற்றுப்பண்ணைத் தொழிலானது நமது நாட்டில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. நாற்றுப்பண்ணையில் உருவாக்கப்படும் செடிகள் பழத்தோட்டங்கள், பெரிய பூங்காக்கள் மற்றும் பூந்தோட்டங்களிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன. உயர்ந்த கட்டிடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வியாபாரஸ்தலங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், கொலைப்புறங்கள், நகரங்களின் சாலையோரங்கள், மேற்கூரைகள் போன்ற பல இடங்களில் அழகுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு விழாக்காலங்கள் மற்றம் கண்காட்சி காலங்களில் பெருமளவு தேவை ஏற்படுகின்றது.நாற்றுப்பண்ணையை படிப்படியாக உருவாக்க வேண்டும். விதையில்லா மற்றும் விதை மூலம் பயிர்ப்பெருக்கத்திற்காக தாய் செடிகள் மற்றும் பருவகால மலர்ப்பயிர்கள் போன்றவற்றை அடுத்தடுத்து உற்பத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும். நாற்றுப்பண்ணை அமைப்பதற்கு வேளாண்-காலநிலைகள், மண்வகைகள், மண்ணின் கார அமிலத் தன்மை, இருப்பிடம், பரப்பளவு, நீர்ப்பாசன வசதிகள், தகவல் பரிமாற்றம், சந்தை தேவை, பண்பகப் பண்ணை அல்லது தாய்ச்செடிகள் கிடைக்கக்கூடிய அளவு, திறமை பெற்ற தொழிலாளி ஆகிய காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.பொருட்களை எவ்வித சேதாரமும் இல்லாமல் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கும், விற்பனை செய்யப்படும் மையத்திற்கு அருகிலேயே நாற்றுப்பண்ணைக்கு இடுபொருட்களைக் கொண்டு வருவதற்கும் போதிய போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். நாற்றுப்பண்ணைக்குள் ஒரு நிரந்தர பல்லாண்டு நீர் ஆதாரத்திற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். காற்றுத் தடுப்பு வேலி மரங்களான தைல மரம், பெருநெல்லி, விதையிலிருந்து முளைத்த மா ஆகியவற்றை போதுமான நிழல் மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக தேவைப்படும் சமயத்தில் நடவு செய்யலாம். அருகிலிருக்கும் சந்தைகளில் நிலவும் தேவையினைப் பொறுத்தே உற்பத்தி செய்யப்படும் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாற்றுப்பண்ணையில் மலர்கள், குமிழ்கள், கிழங்குகள் போன்றவற்றிலிருந்தும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். விதை அல்லது விதையில்லா பயிர்பெருக்கம் மூலமும் செடிகளை உற்பத்தி செய்யலாம். * விதைநாற்றுக்கள்: தகுந்த நிலையில் விதைக்கப்பட்டிருந்தாலும் விதைகளின் முளைப்புத்திறன் நூறு சதவிகிதமாக இருக்காது. விதையின் வயது, முதிர்ச்சி பருவம் மற்றும் முளைத்திறன், நீர், வெப்பநிலை ஆகியவை விதையின் முளைப்புதிறனைக் கட்டுப்படுத்துகின்றன. சில விதைகள் எளிதாக முளைக்காததற்கு அவற்றின் உறக்கநிலை, ஓய்வுக்காலம் மற்றும் கடினமான மேல்தோல் ஆகியவையே காரணிகளாகக் கருதப்படுகின்றன. விதைகளை தேய்த்தல், நீரில் ஊற வைத்தல் அல்லது அமில நேர்த்தி செய்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி விதையின் மேல தோலினை உடைக்கலாம். உதாரணம்: எலுமிச்சை, பெருநெல் மாண்டரின், ஆரஞ்சு, சீதாப்பழம், துரியன், லிட்சி, மங்குஸ்தான், மேற்கிந்திய செர்ரி, தாட்பூட் பழம் போன்றவை ஆகும்.* விதையில்லா பயிர் பெருக்கம்: அழகுச் செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டுத் துண்டு, பதியம் உருவாக்குதல், பாகம் பிரிப்பு மொட்டுக்கட்டுதல் மற்றும் ஒட்டுக்கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம்.* தண்டுத்துண்டு: தண்டுகள், வேர்கள், இலைகள் மற்றும் கிழங்குகள், தண்டடிக்கிழங்கு, வேர்கிழங்குகள், தண்டுகள் மற்றும் குமிழ்கள் போன்ற திருந்திய தண்டுகள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இம்முறை எளிதாகவும் சிக்கமாகவும் மேற்கொள்ளப்படுவதால், பெரிதும் பிரபலமடைந்துள்ளது. இருப்பினும் ஓராண்டு, ஈராண்டு மற்றும் சில பல ஆண்டு பயிர்களில், விதைத்தல் பதியம் போடுதல் மற்றும் ஒட்டுக்கட்டுதல் ஆகிய முறைகளே எளிதாகவும் பணச்சிக்கனத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு: திராட்சை, மாதுளை, பேரி. மேற்கிந்திய செர்ரி. தாட்பூட் பழம், அத்தி, கிவி கறிப்பலா போன்ற பயிர்கள்.* பதியம் போடுதல்: செடியிலிருக்கும் தண்டுகளில் வேர்களை உருவாகச் செய்த பின்னர் வேர்களுடன் உள்ள அத்தண்டினைப் பிரித்தெடுத்து இன்னொரு செடியாக நடவுசெய்வதே பதியம் போடுதலாகும். பெரும்பாலும் படர்செடிகளும் மரங்களும் இம்முறையில் பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன. கார்னேசன், செவ்வந்தி போன்ற இளந்தண்டு செடிகள் பதியம் போடுதல் முறையின் மூலம் பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன. இதில் கொய்யா, மாதுளை, எழுமிச்சை. மேற்கிந்திய செர்ரி, லிட்ச்சி, கரோன்டா, ஃபாள்ஸா, ரம்பூட்டான், கறிப்பலா போன்ற பயிர்கள் அடங்கும்.* பாகமிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்: தரைமட்டத்தில் பெருமளவு தண்டுகளை உற்பத்தி செய்யும் செடிகளிலிருந்து ஒவ்வொரு தண்டும் அதன் வேர்களுடன் தனித்தனி செடிகளாக பிரிக்கப்படுவதே பாகமிடுதலாகும். பிரித்தெடுத்தல் முறையில் வேர்விட்ட அல்லது வேரில்லாத பாகங்கள் முதிர்வடையும்போது தானாக பிரிந்து அடுத்துவரும் பருவத்தில் ஒரு புது செடியாக வளர ஆரம்பித்துவிடும். செவ்வந்தி, சம்பங்கி, ரஸ்ஸேலியா மற்றும் பெரும்பாலான இளந்தண்டு பயிர்கள் பாகமிடுதல் முறையில் சுலபமாக பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன. குமிழ் நீர்ப்பூங்கோரை மற்றும் குங்குமப்பூ போன்ற பயிர்கள் பிரித்தெடுத்தல் முறையில் பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன.தாவரக்கன்று, வேர்க்கிழங்குகள், கிழங்குகள், ஓடுதண்டுகள், மகிழ்ப்புத்தண்டுகள். குமிழ்கள், தண்டடிக்கிழங்குகள். சிறுகுமிழ்த்தண்டுகள் போன்ற செடியின் பிற பாகங்களும் விதையில்லா பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு. வாழை, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி போன்ற செடிகள்.* ஒட்டுக்கட்டுதல்: ஒட்டுக்கட்டுதல் முறையில் அழகுச் செடிகளில் ஒன்றிரண்டைத் தவிர வேறு செடிகள் இனப்பெருக்கம் செய்யப்படுவதில்லை. அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் உள்வளைவு ஒட்டு, பக்க ஒட்டு, சரிவு ஒட்டு, ஆப்பு ஒட்டு. தட்டை ஒட்டு மற்றும் இருக்கை ஒட்டு ஆகிய முறைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு: பெருநெல்லி, மா, சப்போட்டா, பலா, துரியன், ஆப்பிள், பேரி, வெண்ணெய் பழம், மேற்கிந்திய செர்ரி, சீதாப்பழம், ரம்பூட்டான், பெரிசிமன், ஆப்ரிகாட், லோக்வட் போன்ற பயிர்கள்,* மொட்டு கட்டுதல்: அழகுச் செடிகளில் ‘T’ வடிவ மொட்டு அல்லது ‘கேடய’ மொட்டு முறை பயிர்ப்பெருக்கத்திற்கு பயன்படுகின்றது. உதாரணத்திற்கு பெருநெல்லி, இலந்தை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பீச், ப்ளம். வெண்ணெய் பழம், லிட்ச்சி. லோக்வட், ஆப்ரிகாட் போன்ற பயிர்கள்.* திசு வளர்ப்பு: வளர்நுனி வளர்ப்பு முறையில் ஆர்கிட் பயிர்களில் முதன் முதலில் வணீகரீதியில் வெற்றிகரமாக திசுவளர்ப்பு பயிர்பெருக்க முறை மேற்கொள்ளப்பட்டது. இளந்திசுக்களை உடைய அழகுச் செடிகளில் திசு வளர்ப்பு முறை வெற்றிகரமாகக் மேற்கொள்ளப்படுகின்றது. பெருமளவு அழகுச் செடிகள் திசு வளர்ப்பபு முறைக்கு ஏற்றதாகத் திகழ்கின்றன. க்ளாடியோலஸ், கார்னெசன், லில்லி, ரோஜா, ஸெர்பிரா, ஆந்தூரியம். மேக்னோ லியா. பெரணி. கள்ளிச்செடி வகைகள் போன்றவை இதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும். இம்முறையில் பயிர்பெருக்கம் மேற்கொள்ளப்படுவது மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது. என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண் தெரிவித்தார். கட்டமைப்புத் தேவைகள்நாற்றுப்பண்ணை உருவாக்குவதற்கு பல கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. மூங்கில், மரக் கட்டைகள் போன்ற உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மேற்கூரை வேயப்பட்ட 6மீ x 4.5மீ அளவுடைய பணிமனையினை அமைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு ₹250 என்ற வீதத்தில் மொத்தம் ₹6750 இதற்கான செலவீடாகக் கணிக்கப்பட்டுள்ளது.மூங்கில், மரக்கட்டை மற்றும் பலகை போன்ற உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் பாலிதீன் மேற்கூரை வேயப்பட்ட 90 செ.மீ. செங்கல் சுவர், 3.6மீ உயர சாய்சதுர வலைப்பின்னலுடன் 9மீ x 4மீ அளவுடைய பாலிதீன் குடிலை அமைக்க வேண்டும். இதற்கான செலவு ஒரு சதுர மீட்டருக்கு சுமார் ₹300 ஆக கணிக்கப்படுகின்றது. பாலிதீன் குடிலின் உட்புறத்தில் மர மாடங்கள் அமைப்பதற்காக ₹2000 மொத்த தொகையாக ஒதுக்கப்படுகின்றது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட 6.0 மீ x 4.5 மீ அளவுடைய சேமிப்பு மற்றும் அலுவலக அறை போதுமானதாகும் இதற்கு ஒரு சதுர மீட்டருக்கு ₹350 தேவைப்படுகின்றது.நாற்றுப்பண்ணைக்கு ஆடுகள் உள்ளே வராத வண்ணம் அமைக்கப்படும் தடுப்பு வேலியே மிகவும் ஏற்றதாகும்.பழத்தோட்டம்குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, ஈத்தாமொழி, மேலகிருஷ்ணன்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் அந்தந்த பகுதிக்கு ஏற்ற நற்றங்கால் பண்ணையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோல் தோட்டக்கலை துறை சார்பில் பழத்தோட்டம், பேச்சிப்பாறை பகுதியில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாற்றங்கால் பண்ணைக்கு பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து பலதரப்பட்ட நாற்றங்கால்களை வாங்கி பயிரிட்டு வருகின்றனர். இந்த தொழிலில் பலர் அதிகம் பணம் ஈட்டி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

five + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi