Thursday, May 9, 2024
Home » அயோத்தியை மீட்ட குசன்

அயோத்தியை மீட்ட குசன்

by

நன்றி குங்குமம் ஆன்மிகம்விந்திய மலைத் தொடரில், குசாவதி என்னும் நகரத்தில் அமைந்திருந்தது அந்த மாளிகை. தங்கத்தால் கட்டி வைரத்தால் இழைத்தது போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. சந்திரனும் தனது பால் போன்ற கதிர்களால் அதை அபிஷேகம் செய்தவாறு இருந்தான். இது அந்த மாளிகைக்கு மேலும் அழகையே சேர்த்தது. அது நிச்சயம் இந்த பூமியின் தலைசிறந்த ராஜாவின் மாளிகையாகத்தான் இருக்க வேண்டும் என்று எளிதில் சொல்லிவிடலாம். சரி யார் அந்த ராஜாதிராஜன்? வாருங்கள் அவன் அறைக்குச் செல்வோம். அவன் அறை அந்த மாளிகையின் மேல் தளத்தில் இருந்தது. பலவிதமான வேலைப்பாடுகளுடன் கூடி, ரத்தினம் இழைத்த அந்த தங்கக் கதவை தாண்டிச் சென்றால் ஒரு அழகான சிம்மாசனம். அதன் மீது மென்பஞ்சணை வைக்கப் பட்டிருந்தது. நுரை போன்ற பட்டுத் துணியை அதன் மீது விரிப்பாக விரித்து, பரம கம்பீரமாக அமர்ந்திருந்தார் அந்த மன்னர். அதிகமாக ஆபரணங்கள் இல்லை. அவன் அறையில் மின்னும் விளக்குகளின் ஒளியில் அவன் ஏதோ தேவனைப் போல காட்சி தந்தான். அவன் வேறு யாருமில்லை. ராமச்சந்திர மூர்த்தியின் திருக்குமாரனான குசன்தான்.அறையின் மத்தியில் அமர்ந்திருந்த குசன், அந்த அறையின் மூலையில் எதேச்சையாக, கண்ட போது யாரோ அங்கு இருப்பது போல அவனுக்கு தோன்றியது. தனது ராஜ்ஜியத்தில் தனது அறைக்கு இப்படி தனியாக வரும் தைரியம் யாருக்கு இருக்கிறது என்று யோசித்தபடியே இடையில் இருந்த உடைவாளில் அவன் கை சென்றது. ‘‘யார் அது” என்று ஒய்யாரமாகவும் கம்பீரமாகவும் கேட்டான். இதற்காகவே காத்திருந்தது போல, மறைவில் இருந்து ஒரு பெண் வந்தாள். தனது அறையில், தான் தனிமையில் இருக்கும்போது இப்படி வந்திருக்கும் இவள் யார் என்று குசன் யோசித்தான். அதற்குள் அந்தப் பெண் பேச ஆரம்பித்தாள்.‘‘அகில உலகாளும் குச மகா ராஜாவே, நான்தான் அயோத்தி மாநகரத்தின் அதிதேவதை’’ கம்பீரமாகச் சொன்னாள் அந்த பெண்.‘‘அயோத்தியின் அதிதேவதையா!’’ வியந்தான் குசன்‘‘ஆம். உங்கள் முன்னோர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்ட அயோத்தியின் அதிதேவதை நான். உங்கள் முன்னோர்கள் காலத்தில் தங்கத்தாலும் ரத்தினத்தாலும் மின்னிய நான், இப்போது உங்கள் காலத்தில் இருள் மண்டிக் கிடக்கிறேன். நீங்கள் விந்தியமலைக்கு வந்து அரசு புரிகிறீர்கள். ஆனால் அங்கு அயோத்தியில் மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களிலும் அரசும் புரசும் வளர்ந்து, அதன் களையை இழக்கச் செய்துவிட்டது. அழகிய மாதர்கள் விளையாடும் நீர் நிலைகளிலும், வேதியர்கள் வேத காரியங்கள் செய்ய உதவிய சரயு நதியிலும், இப்போது காட்டெருமைகள் மண்டியிருக்கிறது. தீபங்களும் தோரணங்களும் துலங்கிய அயோத்தி எங்கும் இப்போது, சிலந்தி வலைகள்தான் இருக்கிறது. உங்கள் முன்னோர்கள் வழி நின்று என்னை பாதுக்காக்காமல், இங்கே விந்திய மலையில் வந்து அரசு புரிவது எந்த விதத்தில் நியாயம்?’’ என்று கம்பீரமாக குசனின் பொட்டில் அறைவது போல கேட்ட அயோத்தி தேவதை சட்டென்று மின்னலைப் போல மறைந்தாள். அதன் பின் குசனுக்கு உறக்கமே வரவில்லை. பொழுது விடியக் காத்திருந்தான். பொழுது புலர்ந்ததும் தனது குருவையும், சிற்ப சாஸ்திர வல்லுனர்களையும் சென்று வணங்கினான். தான் கண்டதையும் கேட்டதையும் சொன்னான். அவர்களும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்கள். அவர்களுக்கு ஒருவாறு விஷயத்தை சொல்லி, புரியவைத்து தன்னோடு அழைத்துச் சென்று அயோத்தியை குசன் புனரமைத்து, அதையே தனது தலைநகரமாக ஆக்கிக் கொண்டான்.அங்கு அவன் அற்புதமாக அரசாட்சி, செய்து வரும் ஒரு நாள், சரயுநதியில் தனது அந்தப்புரப் பெண்களோடு விளையாடிக்கொண்டிருந்தான். ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் வாரி இறைத்து வெகு நேரம் விளையாடினார்கள். பிறகு கரை ஏறியவன், பட்டாடை உடுத்தி வாசனை திரவியங்கள் பூசிக்கொண்டு, ஆபரணங்கள் அணிய ஆரம்பித்தான்.  அப்போது ஒன்றை கவனித்த அவன், அதிர்ந்துபோனான். தனது, தந்தையான ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு அகத்தியர் தந்ததும், ராமர் அவனுக்கு அன்போடு தந்ததுமான, தோள்வலையை காணவில்லை. ஆம். தந்தையின் ஞாபகமாக அதை எப்போதுமே அணிந்து கொண்டிருப்பான் அவன். அதை அணிந்து கொண்டுதான் சரயுவில் ஜலக்கிரீடை புரிந்தான். ஆனால், கரை ஏறிய பின் அதைக் காணவில்லை என்றதும் அவனால் அதிர்ச்சியையும் கவலையும் கட்டுப்படுத்த முடியவில்லை.மூச்சடக்கி, நீரில் அதிக நேரம் இருக்கும் வல்லமை உடைய வலைஞர்கள், பலர் குசனின் ஆணையை ஏற்று பல நேரம், சரயுவில் தேடிப் பார்த்தார்கள். ஆனாலும் அந்த தோள்வலை கிடைத்த பாடு இல்லை. இறுதியில் குசனுக்கு, சரயுவில் வசிக்கும் சர்ப்பராஜாவான குமுதன்தான் அதைத் திருடி இருக்க வேண்டும் என்று புரிந்தது. ஆகவே, கோபம் கொப்பளிக்க தனது வில்லை எடுத்தவன், அதில் கருட அஸ்திரம் பூட்டி, குமுதனை நோக்கி அதை பிரயோகிக்க எத்தனித்தான். இதற்கு மேல் தாமதித்தால் அது விபரீதமாக போகும் என்று உணர்ந்த சர்ப்பராஜாவான குமுதன் தனது தங்கையான குமுதவதியோடு நதியை விட்டு வெளிவந்தவனாக குசனின் பாதத்தில் விழுந்து வணங்கினான்.‘‘அரசே இவள் எனது தங்கை’’ என்று குமுதவதியை காட்டினான். அவள் மீண்டும் குசனை வணங்கினாள். பின் குமுதன் தொடர்ந்தான்.‘‘எங்கள் உலகில் இவள் பந்தாடிக் கொண்டிருக்கும்போது, நட்சத்திரம் போல மின்னிய தங்கள் அணியை எதோ ஒரு அவாவினால் எடுத்துவிட்டாள். இது பெரும் குற்றமே. ஆனாலும், அரசே தாங்கள் கருணை கூர்ந்து இந்த ஏழையை மன்னிக்க வேண்டும்’’ என்றபடி தன் கையில் இருந்த அணியை குசனை நோக்கி மண்டியிட்ட படி, பணிவாக நீட்டினான். குசனும் கம்பீரமாக அதை வாங்கிக் கொண்டான்.‘‘அரசே, மேலும் ஒரு வேண்டுகோள்…’’ என்று கூறிய குமுதனை ‘‘என்ன அது’’ என்பது போல குசன் பார்த்தான். ‘‘அரசே! தாங்கள் என் தங்கையையும், இந்த அணியை ஏற்றது போல ஏற்க வேண்டும்.’’ என்று மீண்டும் பணிவாக வேண்டி னான் குமுதன். குமுதன் கூறியதை குசன் ஏற்றான். குமுதவதியை சாஸ்திரமுறைப்படி மணந்துகொண்டான். சர்ப்ப ராஜன் குமுதனின் ஆணையால் குசனின் நாட்டில் சர்ப்ப பயமே இல்லாமல் போனது. மக்களும் இனிதே வாழ்ந்து வரலானார்கள். குசனுக்கும் குமுதவதிக்கும் பிறந்த அதிதி என்ற இளவல், ரகுவம்சத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் பேரரசாக விளங்கினான்.நாம் அறியாத இந்த குசனின் கதையை “ரகு வம்ச மகா காவியத்தில்’’ காளிதாசர் விளக்கி உள்ளார். ரகுவம்சத்தைச் சேர்ந்த பல அரிய மன்னர்களின் வீர தீர சாகசம் இதில் விளக்கப் பட்டிருக்கிறது. இந்த ராம நவமியின்போது, ராமனோடு சேர்த்து, இந்த அரசர்களையும் எண்ணி நற்கதி அடைவோம்!..தொகுப்பு: ஜி.மகேஷ்

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi