இஸ்தான்புல்: அமெரிக்க மாடல் அழகி போல் வாழ வேண்டும் என்பதற்காக உருவத்தை மாற்றிய பிரேசில் நடிகை மீண்டும் தனது பழைய உருவத்தை பெற பல லட்சம் ரூபாய் செலவழித்து வருகிறார். பிரேசில் நாட்டின் நடிகை ஜெனிபர் பாம்ப்லோனா, அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரமும், மாடல் அழகியுமான கிம் கர்தாஷியனைப் போல தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் 40க்கும் மேற்பட்ட ஒப்பனை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். இதற்காக ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார். ஆனால் கிம் கர்தாஷியனைப் போன்ற தோற்றம் கிடைக்கவில்லை. அதனால் தற்போது மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறிய ஜெனிபர் பாம்ப்லோனா, ‘மக்கள் என்னை கிம்ஸ் அபரா என்று அழைக்கும்போது கோபமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறுவது எனக்கு தொந்தரவாக உள்ளது. அதனால் நான் எனது பழைய உருவத்திற்கு மாற முடிவு செய்தேன். பன்னிரண்டாவது வயதிலிருந்தே பிரபலங்களை இமிடேட் செய்ய ஆரம்பித்தேன். உருவ மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்பது எனக்கு போதை போன்று இருந்தது. ஆனால் அது எனக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரவில்லை’ என்றார். தற்போது இஸ்தான்புல்லில் உள்ள மருத்துவரிடம் தனது பழைய உடலமைப்பை பெற ஜெனிபர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக ரூ.95 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. …