Wednesday, May 22, 2024
Home » ‘அனைத்தும் சாத்தியம்’ (Museum of Possibilities)

‘அனைத்தும் சாத்தியம்’ (Museum of Possibilities)

by
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழிமாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் ஒன்றை தமிழக அரசுடன், வித்யாசாகர் சிறப்பு பள்ளி இணைந்து மெரீனா கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக வளாகத்திற்குள் “அனைத்தும் சாத்தியம்” என்கிற பெயரில் காட்சிப்படுத்தியிருக்கிறது.இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி வீடுகள் இடம்பெற்றுள்ளன. வீட்டின் முகப்பு, வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, கழிவறை, தோட்டம் போன்றவற்றை மாற்றுத்திறனாளிகளே சுலபமாக பயன்படுத்தும் விதத்தில் எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்கிற மாதிரி வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளன.தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளைக் கடந்து, இந்த உதவி உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்கிற செயல் விளக்கங்கள், பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதல்கள்,  தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் அவற்றை விளக்கிச் சொல்லும் செயல் விளக்க உதவியாளர்களும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளும் சுலபமாக பயன்படுத்தும் விதத்திலான சிற்றுண்டி மையம் (Cafe) ஒன்றும் இந்த மையத்தின் மேல் தளத்திலேயே இடம் பெற்றிருக்கிறது. இங்கே மாற்றுத்திறனாளிகளுக்கு கேட்டரிங் வகுப்புகள் நடத்தப்படுவதுடன், வேலையிலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த அருங்காட்சியகம், காண்பவர்களுக்கு எந்த அளவு பயனுள்ள வகையில் இருக்கிறது என்கிற கேள்விகளோடு சிலரிடம் பேசியதில்…பிரபாகரன்,மியூஸியம் மேலாளர்இதன் முக்கிய நோக்கமே சாதாரண பொருளையும் பயன்பாட்டாளருக்கு ஏற்ற முறையில் மாற்றுவதுதான். எந்த விஷயமும் தெரியாமல் உள்ளே நுழையும் ஒரு நபர் இங்கிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு செல்ல வேண்டும் என்பதும் எங்கள் இலக்கு. இங்கு ஒரு பிஸியோ தெரபி, ஒரு ஸ்பீச் தெரபி, மூன்று அசிஸ்டென்ட், அவர்களை ஒருங்கிணைக்கும் மேலாளர் என பணியில் இருக்கிறோம்.இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களுக்கு அருகிலேயே அதற்கான QR கோட் இருக்கிறது. அதில் இந்தப் பொருள் எங்கே கிடைக்கும், அதன் விலை போன்ற விபரங்கள் இருக்கும். குறிப்பிட்ட பொருளை வாங்க நினைப்பவர்கள், விற்பனையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு உபகரணங்களை வாங்கிக்கொள்ளலாம். எங்களின் இணைய பக்கங்களிலும் அருங்காட்சியகம்குறித்த தகவல்கள் பதிவேற்றப்படும்.மீரா பாலாஜி,அரசு அதிகாரி (ஓய்வு)அருங்காட்சியகத்தில் இருக்கும் பல்வேறு உபகரணங்களும் ஒவ்வொரு விதமான மாற்றுத்திறனுக்கும் ஏற்றவிதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு போலியோ பாதிப்பு என்பதால், இதற்கு முன்பு சாதாரண க்ரெட்சஸ்(crutches) பயன்படுத்தினேன். ஆனால், அதில் தரையில் தவறி விழ வாய்ப்புண்டு என்பதால், வீல்சேரை பயன்படுத்தத் தொடங்கினேன். தவறி விழாமல் நடப்பதற்கு ஏற்ற எல்போ க்ரெட்சஸ் (elbow crutches) மற்றும் ஆர்ம் க்ரெட்சஸ்(Arm crutches) போன்றவைகள் அருங்காட்சியகத்தில் இருப்பதைக் கவனித்தேன். இப்படியான உபகரணங்கள் இருப்பது முன்பே தெரிந்திருந்தால் வீல்சேரினை பயன்படுத்தியிருக்க மாட்டேன்.அதேபோல், வரவேற்பறையில் இருந்த இருக்கைகள் அனைத்துமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதத்தில் தாழ்வாக அமர்ந்து எழ வசதியாக இருந்தது. அங்கிருந்த கிச்சன் செட்டப்பும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஸ்விட்ச் ஆன் செய்ததுமே கிச்சனில் மேலே இருக்கும் ரேக் கீழே இறங்கி வருவது மாதிரியும், மாற்றுத்திறனாளிகள் வீல்சேரில் அமர்ந்த நிலையில் பொருட்களை எடுத்து பயன்படுத்தும் விதத்திலும் வடிவமைத்திருக்கிறார்கள். ஸ்விட்ச் கண்ட்ரோலும் தாழ்வான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.கழிப்பறை மாதிரிகளும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப பாதுகாப்பாக, வசதியான முறையில் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இப்படியான வசதிகள் இருக்கிறது என்பதை மாற்றுத்திறனாளிகளுக்கு காட்சிப்படுத்திய விதம் வரவேற்க வேண்டிய ஒன்று.சதீஷ்குமார் வங்கி ஊழியர்டெக்னாலஜி நிறையவே டெவலப் ஆகிவிட்டது. ஆனால், இவையெல்லாம் இருப்பது யாருக்குமே தெரியாது. பொது மக்களுக்கு இது குறித்த புரிதல் சுத்தமாக இல்லை. இங்கே இன்ஃபர்மேஷன்தான் மெயின் நாலேஜ். ஒரு சாதனம் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி, சுயமாய் இயங்க உதவியாக இருப்பது தெரிந்தால் அது அவர்களின் வாழ்வை தனித்துவமாக சுதந்திரமாக மாற்றும். இந்த விழிப்புணர்வு கூடுதல் அக்ஸஸிபிளிட்டியோடு இணையும்போது அது இன்னும் பயனுள்ளதாக மாறுகிறது. புதிதாக சந்தைக்கு வரும் டெக்னாலஜிகளையும் அரசு இந்த மாதிரியான அருங்காட்சியகங்களில் உடனுக்குடன் காட்சிப்படுத்தி, மக்களின் விழிப்புணர்வுக்கு உதவலாம்.கலைச்செல்வி, சென்னைஎனது மகள் ஜோதி. சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மியூஸிக் இரண்டாம் ஆண்டு மாணவி. கூடவே சிறந்த பாடகி. பிறப்பிலே அவள் பார்வை சவாலுடன் பிறந்தவள். இந்த அருங்காட்சியகத்தில் பார்வை சவால் உள்ளவர்களுக்கு தேவையான பல உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ப்ரெய்லி முறையிலான புத்தகங்கள், தொடு திரைகள், விளையாட்டு உபகரணங்களும் இடம்பெற்றுள்ளன. சில வகையான உபகரணங்கள் பார்வை சவால் உள்ளவர்கள் தொட்டு உணர்ந்து தங்கள் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் (tactile braille),  எளிதில் உபயோகப்படுத்தும் விதத்தில் (accessible friendly) உள்ளது. ஸ்கிரீன் ரீடர் சாஃப்ட்வேர் திரையில் வருவதை ரீட் செய்துகொண்டே இருக்கும். இது தவிர்த்து, ஹெட் மவுஸ், அடாப்டெட் கீ போர்ட், அடாப்டெட் ஸ்விட்சஸ் என பலவும் இருந்தது.அருங்காட்சியகத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் உபகரணங்களின் பயன்பாடு குறித்து பார்வையாளர்களுக்கு சிறப்பாக விளக்குவதுடன், கலந்துரையாடல்களையும் அவ்வப்போது நிகழ்த்துகிறார்கள். ராஜ்குமார், ஐடி ஊழியர்தென் தமிழகத்தில் மட்டும்தான் இந்த மாதிரி அருங்காட்சியகம் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். ஒரு மாற்றுத்திறனாளி சுயமாக யார் உதவியுமின்றி உணவு சமைப்பது, மற்ற வேலைகளை தாங்களாகவே செய்து கொள்வதற்கான அத்தனை எளிய வழிமுறைகளையும் மாதிரிப்படுத்தி இங்கு வைத்துள்ளனர். எஜுகேஷன், ஸ்போர்ட்ஸ், இன்டோர் கேம்ஸ் போன்றவைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  ஸ்டான்டிங் வீல்சேர், நியோ மோஷன் வீல்சேர் என பலவிதமான வீல்சேர்களை இங்கு காட்சிப்படுத்தியிருப்பதுடன், எம்.ஆர்., செலிபிரள் பால்ஸி போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் ஸ்டோரேஜ் அக்ஸஸபிள் பல வண்ணங்களில் அவர்கள் உணர்கிற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் இந்த வசதிகளை தங்கள் வீடுகளில் அமைக்க முடியுமா என்பதே இங்குள்ள கேள்வி? அந்த அளவுக்கு இதன் விலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அதிகம் என்றாலும், பெரும்பாலான மக்களின் பயன்பாட்டில் உள்ள பொது கட்டமைப்புகள், அரசு கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், பொது நூலகங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய(inclusive) வசதிகளை கட்டமைக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு கட்டித் தரும் குடியிருப்புகளிலும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் விளையாடும் மைதானங்கள், தங்குமிடங்களில் அரசே முன்வந்து ஒரு மாதிரி வடிவமைப்பாக இதனைச் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். ரூபா ராஜேந்திரன்எல்லாவிதமான மாற்றுத்திறனாளிகளுக்குமான பயன்பாட்டு சாதனங்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது. பல்வேறுவிதமான வீல்சேர் பயன்பாடுகளை அங்கே காண முடிந்தது. எங்களை போன்ற லொகோமோட் பிரச்சனை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அலெக் ஸா(Alexa) டெக்னாலஜியை பயன்படுத்தி காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பாக இருந்தது.  அதேசமயம் அலெக்ஸாவோட பயன்பாடு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே உள்ளது. தமிழில் இல்லை என்பதை இங்கே நான் பதிவு செய்கிறேன். டெக்னாலஜி பயன்பாடு அந்தந்த மொழி சார்ந்து பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.ஃபெமி ஓடெடோலாஃபெமி ஓடெடோலா. போர்ப்ஸ் (Forbes) இதழின் அட்டையை அலங்கரித்த நைஜீரிய நாட்டு தொழிலதிபர். மகிழ்ச்சியான பணக்கார வரிசையில் முதலிடத்தில் இருப்பவர். ஒரு தொலைபேசி நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை வானொலி தொகுப்பாளர் பேட்டி எடுத்த போது…‘‘உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?” எனக் கேட்க, ஃபெமி கூறினார்.. ‘‘நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் நான்கு நிலைகளை கடந்துவிட்டேன். இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்” என்றார்.முதல் நிலை செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.பிறகு மதிப்புமிக்க பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் நிலை வந்தது. ஆனால், இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை உணர்ந்தேன். பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் நிலையும் வந்தது. அப்போது நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராகவும் இருந்தேன். ஆனால், இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை.நான்காவது நிலையில் என் நண்பர் ஒருவர் ஊனமுற்ற சில குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கச் சொல்லி என்னிடம் கேட்டார். நண்பரின் வேண்டுகோளின்படி சுமார் 200 குழந்தைகளுக்கு உடனடியாக சக்கர நாற்காலிகளை வாங்கினேன். நண்பரோ நானும் அவருடன் வந்து சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமென வலியுறுத்த, தயாராகி அவருடன் சென்றேன். அங்கே சக்கர நாற்காலிகளை என் சொந்தக் கரங்களால் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, குழந்தைகளின் முகங்களில் விசித்திரமான பிரகாசத்தை காண முடிந்தது. சுவர்க்கத்தை கண்ட மகிழ்ச்சியில் அவர்கள் ஆழ்ந்தனர். குழந்தைகள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்தும்… சுற்றியும்… நகர்ந்தும்… வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்து நான் வெளியேற எத்தனித்தபோது, குழந்தைகளில் ஒருவர் என் கால்களை பிடித்தார். நான் என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால், குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்த நிலையில், என் கால்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டது.நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்… ‘‘உனக்கு வேறு ஏதாவது வேண்டுமா?’’அதற்கு குழந்தை அளித்த பதில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது மட்டுமல்ல, வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியது. குழந்தை கூறியது இதுதான்.. ‘‘நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது, நன்றி சொல்ல உங்கள் முகம் சரியாக அடையாளம் காணப்பட்டு இருக்க வேண்டும்.’’தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

You may also like

Leave a Comment

3 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi