Wednesday, May 15, 2024
Home » அக இருள் நீக்கும் அண்ணாமலை

அக இருள் நீக்கும் அண்ணாமலை

by kannappan
Published: Last Updated on

ஒரு சமயம், படைத்தல் கடவுள் பிரம்மாவுக்கும், காத்தல் கடவுள் திருமாலுக்கும் இடையே ‘யார் பெரியவர்’ என்பதில் பிரச்சனை. அதனால், படைத்தல் தொழிலும், காத்தல் தொழிலும் தடைபட்டது. உலக இயக்கம் தடுமாறியது. இறைகளுக்குள் ஏற்பட்ட இடையூறை யார் தீர்ப்பது என புரியாமல் தேவர்கள் பரிதவித்தனர். எம்பெருமான் சிவபெருமானிடம் முறையிட்டனர். எப்போதும் திருவிளையாடல்கள் மூலம் தீர்ப்பு சொல்வதில் வல்லவராயிற்றே எம்பெருமான். தமது திருவிளையாடலை திருவண்ணாமலையில் அரங்கேற்ற சித்தம் கொண்டார். நான்முகனுக்கு, திருமாலுக்கும் உண்மை விளக்கை உள்ளத்தில் ஏற்ற முயன்றார்.யார் பெரியவர் எனும் எண்ணத்தில் இருந்த இருவர் முன்பும் அருள்வடிவானர் சிவபெருமான். அடி, முடி காணாத விஸ்வரூப மூர்த்தியாக ஜோதி வடிவுடன் ஓங்கி நின்றார். இது என்ன விந்தை விளையாட்டு என இருவரும் கலங்கினர். காரணம் வேண்டினர். தமது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டு திரும்புகின்றனரோ அவர்தான் இருவரில் பெரியவர் எனும் புதிருடன் திருவிளையாடலை தொடங்கினார் எம்பெருமான். அன்னப்பறவையாக பிரம்மாவும், வராக வடிவாக திருமாலும் வடிவம் கொண்டு போட்டியில் வெல்ல புறப்பட்டனர். விண்ணுயர பறந்தும் ஈசனின் முடியை காண முடியாமல் திகைத்தார் பிரம்மா. அதளபாதாளம் வரை தோண்டித்துருவியும் அடியை காணாமல் தவித்தார் திருமால். வேறு வழியின்றி திருமால் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பினார். பிரம்மாவுக்கு மட்டும் குறுக்கு சிந்தனை. சூழ்ச்சியால் வெல்ல திட்டமிட்டார்.உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தாழம்பூவைப் உதவிக்கு அழைத்தார் பிரம்மா. சிவனின் முடியை பார்த்துவிட்டு வந்ததாக ஒரே ஒரு பொய் சொல்லும்படி கேட்டார். அச்சச்சோ, பிரம்மாவுக்காக ஒரே ஒரு பொய்தானே என தாழம்பூவும் ஒப்புக்கொண்டது. அதன்படியே சிவபெருமானிடம் பொய் சொன்னது தாழம்பூ. எல்லாம் உணர்ந்த முக்கண்ணன் முகம் சிவந்தார். பொய் சாட்சி சொன்ன தாழம்பூ இனி எனது பூஜைக்கு உதவாது என சபித்தார். சூழ்ச்சியால் வெற்றி பெற நினைத்த பிரம்மாவுக்கு, இனிமேல் பூலோகத்தில் தனியாக கோயிலோ, பூஜையோ இருக்காது என்றார். பிரம்மாவும், விஷ்ணுவும் தங்களது தவறை உணர்ந்தனர். ஆணவம் அடங்கினர். உண்மை நிலை உணர்ந்தனர். சினம் கொண்ட சிவபெருமான் சாந்த வடிவாக எழுந்தருள வேண்டும் என வேண்டினர்.ஜோதி வடிவத்தை சாந்தமாக்கி மலைவடிவாகவும், மலைக்கு கீழ் திசையில் சுயம்புவாகவும் எழுந்தருள வேண்டும் என வேண்டினர். மனமுருகிய மகேசன் அதன்படியே மலை வடிவானார். ஜோதி வடிவாக அண்ணாமலையார் எழுந்தருளிய திருநாள்தான் திருக்கார்த்திகை. ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளில் ஜோதி வடிவாக காட்சி தர வேண்டும் என வேண்டினர். அதன்படிதான், மலையாக எழுந்த மகேசனை வணங்கி மகா தீபம் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. நான் எனும் அகந்தை அழித்து, அக இருளை நீக்கும் ஜோதி தரிசனமே அண்ணாமலை மீது தரிசனம் காணும் மகா தீபம். மூவுலகையாளும் ஈசன், பூவுலகில் குடிகொண்ட திருநகரம். இடபாகம் அருளிய அருளாளன், அர்த்தநாரீஸ்வரராக அருட்பாலித்த திருத்தலம். பஞ்ச பூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலம். ஜோதி பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளியதால் இத்திருநாமம். அண்ணாமலைக்கு அருணாச்சலம் எனும் திருப்பெயரும் உண்டு. அருணம் என்ற சொல்லுக்கு சூரியன், வெப்பம், நெருப்பு  எனும் பொருள். அசலம் எனம் சொல்லுக்கு மலை, கிரி எனும் பொருள். அருணாச்சலம் என்பது நெருப்பு மலை என்பதையே குறிக்கும். கயிலாயம் இறைவன் வாழும் இருப்பிடம். ஆனால், திருவண்ணாமலை அருணாச்சலமே சுயம்புவடிவான மலை. மலையின் அமைப்பை கீழ் திசையில் தரிசித்தால் ஒன்றாக தெரியும். அது ஏகனை உணர்த்தும். மலைச்சுற்றும் வழியில் தரிசித்தால் இரண்டாக தெரியும். அது அர்த்தநாரீஸ்வரரை உணர்த்தும். மலையின் மேற்கு திசையில் தரிசித்தால் மூன்றாக தெரியும். அது மும்மூர்த்திகளை உணர்த்தும். வட திசையில் தரிசித்தால் மலை நான்காக தெரியும். அது நான்கு வேதங்களை உணர்த்தும். மலைச்சுற்றி முடிக்கும் நிலையில் ஐந்தாக தெரியும். அது பஞ்ச மூர்த்திகளை உணர்த்தும். மலையே மகேசனாக காட்சிதரும் தீபமலையின் அடியொற்றி அமைந்திருக்கிறது திருவண்ணாமலை திருக்கோயில். கார்த்திகை திங்கள் பரணி நட்சத்திரத்தில் நடைபெறும் விழா என்பதால் பரணி தீபம் என அழைக்கப்படுகிறது. பரணி தீப தரிசனத்தன்று, அண்ணாமலையார் திருக்கோயிலில் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும். உமையாளுக்கு இடபாகம் வழங்கி, ஆண்-பெண் சமத்துவத்தை உலகுக்கு உணர்த்திய திருவிளையாடல் நாயகராம் சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரராக ஆனந்த தாண்டவத்துடன் எழுந்தருளி கொடி மரம் முன்பு காட்சி தரும் நேரத்தில் திருக்கோயில் தேவலோகமாக காட்சிதரும். அர்த்தநாரீஸ்வரர் திருக்கோல தரிசனம் நடைபெறும் போது, கொடி மரம் முன்பு வைக்கப்பட்டுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, திருக்கோயிலில் இருந்து தீபம் ஏற்றுவதற்கான சமிஞ்சையாக தீப்பந்தம் மலைநோக்கி காட்டியதும், மா மலையில் மகா தீப தரிசனம் பிரகாசிக்கும், அப்போது, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ எனும் பக்தி முழக்கம் விண்ணதிரும்.-கிருஷ்ணா…

You may also like

Leave a Comment

7 + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi