ஓமலூர், ஜூன் 8: சேலம் மாவட்டத்தில் வரும் 11ம் மற்றும் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்காக ஓமலூர் அருகேயுள்ள சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ஐந்தாயிரம் பேர் அமரக்கூடிய வகையில் விழா பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழை காற்றுக்கு பாதிக்காத வகையில் தகர அட்டைகள் கொண்டு மேற்கூரை வேயப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் செல்லும் சாலைகள் அனைத்தையும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சாலைகளில் உள்ள சிறுசிறு பழுதுகளையும் சீரமைத்து வருகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் தார் ஊற்றி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 11ம் தேதி காலை சென்னையில் இருந்து சேலம் வரும் முதல்வர், முதல் நிகழ்ச்சியாக கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார். பிறகு சேலம் ஈரடுக்கு பஸ்நிலையம், பெரியார் பேரங்காடி, நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வணிக வளாகம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, 49,672 பேருக்கு ₹1798 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், 12ம் தேதி காலை 9 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார். இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.