Saturday, May 11, 2024
Home » அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன்

அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன்

by Kalaivani Saravanan
Published: Last Updated on

அம்பிகையை சரணடைந்தால் அதிகவரம் பெறலாம் என்பது நம்பிக்கை. ஒரே இடத்தில், சுற்றிலும் நூற்றியேழு அம்மன்கள் அருள, நடுநாயகமாக அரைக்காசு அம்மன் எனும் பிரகதாம்பாள் கொலுவீற்றிருக்கும் ஆலயத்தை தரிசித்தால், வரமருளும் அன்னையின் பாசத்தில் மூழ்கலாம் என்பதும் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. கை தவறியோ அல்லது மறந்தோ எங்கேனும் வைத்துவிட்ட பொருளை இந்த அரைக்காசு அம்மனை நினைத்து, ‘அம்மா உனக்கு வெல்லம் கரைத்து வைக்கிறேன்.

எனக்கு தொலைந்த பொருள் கிட்ட வேண்டும்’ என மனமுருகி நேர்ந்து கொண்டால், தொலைந்த பொருள் உடனே கிட்டிவிடும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது. புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் ஆலயத்திற்கு சென்று வழிபடமுடியாத அன்பர்கள், இந்த ஆலயத்தின் நாயகியை வணங்கி வாழ்வில் வளம் பெறுகின்றனர்.

2004ஆம் வருடம் ரத்னமங்கலம் லட்சுமி குபேரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றபோது, லட்சுமி விக்கிரகத்தை அழகு செய்த தங்க செயின் காணாமல் போனது. அரைக்காசு அம்மனை மனதார வேண்டிக் கொண்டு, அந்த செயின் கிடைத்தால் அருகிலேயே அன்னைக்கு ஆலயம் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டார்கள். மகாலட்சுமிக்கு சாத்தப்பட்ட மலர்களைக் களைந்த போது அவற்றோடு அந்த செயின் திரும்பக் கிடைத்ததாம்.

அதன்படி இங்கு அந்த தேவிக்கு ஆலயம் எழும்பியது. பின், தேவியின் திருவுளப்படி அன்னையைச் சுற்றி 107 அம்மன்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலயத்தில் நுழைந்த தும் வலது புறம் தல விநாயகர் அருள்கிறார். அவர் திருவுருவிற்கு நேர் எதிரே பதினெட்டாம் படி கருப்பர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டிற்கு ஒரு முறை ஆடி மாதம் 18ஆம் தேதியன்று மட்டும் இவர் சந்நதியின் கதவைத் திறந்து வைத்து விமரிசையாக வழிபாடுகள் நடக்கின்றன.

மற்ற நாட்களில் எல்லாம் பூட்டிய கதவிற்கே வழிபாடு. அரைக்காசு அம்மனைச் சுற்றி புகழ்பெற்ற சக்தி தலங்களில் அருளாட்சி புரிந்து வரும் 107 தேவியர்கள், அங்கே எந்தெந்த திருவுருவில் அருள்கின்றனரோ அதே வடிவில் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தேவியருக்கும் விமான கலசம் உள்ளது. இதில் வடிவுடை, கொடியிடை, திருவுடை ஆகிய மூன்று அம்மன்களையும் பௌர்ணமி அன்று தரிசிப்பது விசேஷம். அதேபோல காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, பெண்களின் சபரிமலை தெய்வமான ஆற்றுக்கால் பகவதி, சக்குளத்துக்காவு பகவதியையும் இங்கே தரிசிக்க முடிகிறது. கருவறையில் துவாரபாலகிகளாக பத்ரிணி, தீப்தா எனும் தேவியின் தோழியர் வீற்றிருக்கின்றனர்.

அரைக்காசு அன்னை பாசம், அங்குசம், வரத, அபயம் தாங்கி அர்த்த பத்மாசனத்தில் சாந்த வடிவினளாய் பொலிகிறாள். அன்னையின் திருவடியின் கீழ் உற்சவ விக்ரகம் உள்ளது. கருவறையை வலம் வரும்போது கோஷ்டத்தில் முதலில் ஹயக்ரீவ சரஸ்வதியை தரிசிக்கிறோம்.

இங்கு லட்சுமி நாராயணர், தன் கால் கட்டை விரலை அழுத்தி ஊன்றி நின்ற நிலையில் அருள்கிறார். லட்சுமி தேவியும் அவ்வண்ணமே காட்சி தருகிறாள். லட்சுமிதேவி அஷ்டோத்திரத்தில் சபலாயை நமஹ என்றும் சஞ்சலாயை நமஹ என்றும் நாமங்கள் வரும். ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பவள் இவள். ஆனால், திருமால் உள்ள இடத்தில் நிலைகொள்பவள். அதன்படி இங்கு திருமாலோடு அருள்புரிகிறாள்.

தொலைந்த பொருள் கிடைக்க மட்டும் அல்ல, புத்தி, உடல்நலம், நிம்மதியான மணவாழ்வு, மகப்பேறு, வளங்கள், மறுமையில் மோட்சம் என்று எல்லாமும் அருள்பவள் இந்த அன்னை. அம்பிகை உபாசனையை பரப்பியவர் ஹயக்ரீவர், ஸ்ரீசக்ரமேரு வில் உள்ள வசின்யாதி வாக்தேவதை கள்தான் திருமியச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றினர். அந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தினால் துதிக்கப் பட்ட திருமீயச்சூர் லலிதாம்பிகையும் இத்தலத்தில் அருள்கிறாள். இப்படி மூவரும் ஓரிடத்தில் அருளும் அற்புதத் தலம் இது.

கொல்கொத்தா காளி, ஆயிரங்கை காளி, கல்யாண வரம் தரும் கல்யாண மாரியம்மன், ராகுகேது தோஷம் போக்கும் நாகாத்தம்மன், கருமாரியம்மன், பத்மாவதி, வகுளா தேவி ஆகியோருடன் துலங்கும் இக்கோயில் ஒரு மகத்தான சக்திபீடமாக திகழ்கிறது. வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் பாதையில் தாகூர் இன்ஜினிரிங் கல்லூரியின் பக்கத்தில் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம்.

You may also like

Leave a Comment

16 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi